எட்டுவழி சாலைக்குப் பதில் ஆறுவழி சாலை: பாதிப்பை குறைக்குமா புதிய திட்டம்?

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை

பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை வழித்தடத்தில் மாற்றங்களைச் செய்து புதிய விண்ணப்பத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமர்ப்பித்துள்ளது. ஆனால், இந்த மாற்றங்களால் பெரிய மாறுதல் ஏதும் ஏற்படாது, திட்டத்தைக் கைவிட வேண்டும் என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்.

சென்னை முதல் சேலம் வரையில் சுமார் 277 கி.மீ. தூரத்திற்கு 8 வழி விரைவுச் சாலை அமைக்க மத்திய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டிருந்தது. இந்த சாலை சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டது. இதற்கான நிலம் அளவிடும் பணிகள் துவங்கியபோது, விவசாயிகளிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டன.

இதற்கிடையில் இந்தத் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் கீழ் இயங்கும் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் அனுமதியைப் பெற, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த நிபுணர் குழு, திட்டப் பாதையில் சில மாறுதல்களைப் பரிந்துரைத்துள்ளது.

அதன்படி சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியான பாதிப்பைக் குறைக்க புதிய பாதையை வகுத்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மாற்றப்பட்ட திட்ட அறிக்கையை முன்வைத்துள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக இந்தச் சாலை 6 வழிச் சாலையாக மட்டுமே அமைக்கப்படும் என்றும் எதிர்காலத்தில் வாகனப் பெருக்கம் ஏற்படும் பட்சத்தில் அது எட்டு வழிச் சாலையாக மாற்றப்படும் என்றும் இந்த புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Image caption அளவை செய்யப்பட்ட நிலங்களில் அதிகாரிகளால் கல் நடப்பட்டுள்ளது

இந்த புதிய திட்டத்தின் படி சாலையின் நீளம் என்பது 277கி.மீட்டராகவே இருக்கும். ஆனால், திட்டச் செலவு என்பது பத்தாயிரம் கோடி ரூபாய்க்குப் பதிலாக 7,210 கோடி ரூபாயாகக் குறையும்.

வேறு சில திருத்தங்களையும் இந்த திட்டத்தில் முன்வைத்திருக்கிறது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்.

1. முந்தைய திட்டத்தின்படி இந்தச் சாலைக்காக 120 ஹெக்டேர் அளவுக்கு வனப்பகுதி கையகப்படுத்தப்படும். ஆனால், புதிய திட்டத்தின்படி 45 ஹெக்டேர் வனப்பகுதியே கையகப்படுத்தப்படும்.

2. முந்தைய திட்டத்தின்படி வனப்பகுதியில் 13.2 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைக்கப்படும். புதிய திட்டத்தின்படி 9 கி.மீ. தூரத்திற்கே வனப்பகுதிக்குள் சாலை அமைக்கப்படும்.

3. இந்தச் சாலையின் அகலம் முதலில் 90 மீட்டராக இருக்குமெனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது 70 மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. வனப் பகுதியில் அகலம் 70 மீட்டரிலிருந்து 50 மீட்டராகக் குறைக்கப்படும்.

4. முன்னதாக இந்த சாலைக்கென 2,560 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படவிருந்தது. ஆனால், புதிய திட்டத்தின்படி 1,900ஹெக்டேர் நிலம்தான் கையகப்படுத்தப்படும்.

5. இந்த எட்டு வழிச் சாலைக்கு இணைப்புச் சாலையாகத் திட்டமிடப்பட்டிருந்த மூன்று இணைப்புச் சாலைகள் கைவிடப்படுகின்றன: 1. 30 கி.மீ. தூரமுள்ள செங்கல்பட்டு - காஞ்சிபுரம் இணைப்புச் சாலை, 2. 4.7 கி.மீ. தூரமுள்ள செம்மம்பாடி - சேத்பட் இணைப்புச் சாலை, 3. 16 கி.மீ. தூரமுள்ள போளூர் - திருவண்ணாமலை இணைப்புச் சாலை ஆகியவையே அவை.

எதற்காக புதிய வழித்தடத்தை முன்வைக்கிறது ஆணையம்?

சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்ட மதிப்பீட்டு அறிக்கையைப் பரிசீலித்த சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு, கல்வராயன் மலை பாதிக்கப்படாத வகையில் புதிய வழித்தடத்தை அமைக்கும்படி கூறியது. இதன்படி நான்கு வழித்தடங்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முன்வைத்துள்ளது. இந்த வழித் தடங்களில் சென்னை முதல் செங்கம் வரையிலான பாதையில் எந்த மாற்றமும் இருக்காது. செங்கத்திலிருந்து சேலம் வரை நான்கு புதிய வழித்தடங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பசுமைவழி சாலைத் திட்டம் - சேலம் மக்கள் கடும் எதிர்ப்பு

முதலாவதாக, செங்கம்-மூங்கில்கோட்டை-தர்மபுரி வழியாக சேலத்தை அடையும் 138 கி.மீ தூரம் கொண்ட பாதை. இரண்டாவதாக செங்கம்- அரூர்- தர்மபுரி வழியாக சேலத்தை அடையும் 154 கி.மீ தூரம் கொண்ட பாதை, மூன்றாவது பாதை செங்கம் - அரூர் - தீவிட்டிபட்டி வழியாக சேலத்தை அடையும் 121கி.மீ. தூரம் கொண்ட பாதை. நான்காவதாக, செங்கம் - அரூர் - அயோத்தியாபட்டினம் சேலத்தை அடையும் 110 கி.மீ. தூரமுள்ள பாதை. இந்த நான்காவது பாதையையே தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முன்வைத்துள்ளது.

மற்ற வழித்தடங்களை ஒப்பிடும்போது செங்கம் - அரூர் - அயோத்தியா பட்டினம் வழித்தடத்தில் குறைவான வனப்பகுதியே கையகப்படுத்தப்படும் என்பதாலும் தூரம் குறைவாக இருப்பதாலும் குறைவான குடியிருப்புகளே பாதிக்கப்படும் என்பதாலும் அதனைத் தேர்வுசெய்வதாகக் கூறியுள்ளது நெடுஞ்சாலைகள் ஆணையம்.

ஆனால், இந்த புதிய திட்டத்தின்படி நீர் நிலைகள் பாதிக்கப்படுவது அதிகம். 7 ஆறுகள், 15 வாய்கால்கள் , 38 குளங்கள் என அறுபது நீர்நிலைகள் பாதிக்கப்படும்.

தொடரும் எதிர்ப்பு

ஆனால், இந்தத் திட்டத்தை எதிர்க்கும் சூழலியலாளர்களும் அரசியல்கட்சிகளும் இந்த மாற்றத்தை ஏற்கவில்லை. "ஏற்கனவே சேலத்திற்கு இரண்டு முக்கியமான சாலைகள் இருக்கும்போது புதிதாக எதற்கு ஒரு சாலை என்ற கேள்விக்கு இது பதிலில்லை. இந்தப் புதிய வழித்தடத்திலும் ஆறாயிரம் ஏக்கர் அளவுக்கு விவசாய நிலம் கையகப்படுத்தப்படுமே.. நீர்நிலைகள் பாதிக்கப்படுமே.. அதை எப்படி ஏற்பது? என்னதான் மாற்றங்கள் செய்தாலும் இந்தத் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையப்போவதில்லை. திட்டத்தைக் கைவிட வேண்டும்" என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன்.

படத்தின் காப்புரிமை facebook

மாற்றுப் பாதையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதை பாட்டாளி மக்கள் கட்சியும் ஏற்கவில்லை. "மாற்றுப் பாதையினால் கையகப்படுத்தப்படும் நிலத்தின் அளவு குறையுமே தவிர பாதிக்கப்படும் விவசாயிகளின் எண்ணிக்கை குறையாது. ஒரு விவசாயியின் பெருமளவு நிலம் கையகப்படுத்தப்பட்டு, வால் போன்ற பகுதியே எஞ்சி நிற்கும். ஒரே நல்ல விஷயம் கல்வராயன் குன்று வழியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாது என்பதுதான்" என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியிருக்கிறார்.

இருக்கும் சாலையே போதும்....

"இந்தத் திட்டத்தில் என்ன மாற்றியிருக்கிறார்கள்? அகலத்தை மாற்றியிருக்கிறார்கள். கல்வராயன் மலைக்கு அருகில் சிறிதாக வழியை மாற்றியிருக்கிறார்கள். அவ்வளவுதான். மற்றபடி அதே வழியாகத்தான் செல்கிறது. சென்னை - சேலம் இடையே ஏற்கனவே இருக்கும் சாலையே போதுமானது. அதைச் சரியாக பராமரித்தாலே சிறப்பாக இருக்கும். தொழில்துறைக்காக கொண்டுவருவதாகச் சொல்கிறார்கள்.

இப்போது இருக்கும் சாலையில் தொழில்துறையினரின் வாகனங்கள் போகாதா? இவர்கள் எதையும் புதிதாக முழுமையாகச் செய்வதில்லை. சேலத்தில் ஐடி பார்க்கிற்காக 120 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 13 ஆண்டுகளாகிவிட்டது. அந்த நிலம் அப்படியே இருக்கிறது. ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்ட திட்டங்களை முதலில் செயல்படுத்துங்கள். இந்த புதிய எட்டு வழிச் சாலை தேவையே இல்லை. இது அழிவை ஏற்படுத்தும் திட்டம்" என்கிறார் சேலத்தைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலரான பியூஷ் மனுஷ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :