ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சைக்கு விரைவில் பதில்?

  • 14 செப்டம்பர் 2018

முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமலர்: சர்ச்சைக்கு விரைவில் பதில்?

படத்தின் காப்புரிமை Getty Images

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓராண்டாக விசாரித்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், விசாரணையின் இறுதி கட்டமாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் நேரடியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கும் இது தொடர்பாக சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜெயலலிதாவின் மரண சர்ச்சைக்கு விரைவில் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மேலும் அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

விசாரணை கமிஷனின் பதவிக்காலம், அக்டோபர் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

தி இந்து (ஆங்கிலம்): உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி நியமனம்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரன்ஞன் கோகாய்

இந்திய உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டுள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுவதையடுத்து, அக்டோபர் 3ஆம் தேதி புதிய தலைமை நீதிபதியாக இவர் பதவி ஏற்றுக் கொள்வார்.

அசாம் மாநிலத்தில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஒருவர் பதவி வகிப்பது இதுவே முதல்முறையாகும். 13 மாதங்களுக்கு இந்தியாவின் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி வகிப்பார். 2019ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி இவர் ஓய்வு பெறுகிறார்.

தினமணி: தில்லி பல்கலைக்கழக தேர்தலில் ஏபிவிபி வெற்றி

படத்தின் காப்புரிமை Getty Images

தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், இணைச் செயலர் ஆகிய பதவிகளை அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) கைப்பற்றியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏபிவிபியின் அன்கிவ் பசோயா 1,744 வாக்கு வித்தியாசத்தில் தனக்கு எதிராக போட்டியிட்ட என்.எஸ்.யு.ஐ வேட்பாளர் சன்னி சில்லரை தோற்கடித்து தலைவர் பதவியை கைப்பற்றினார்.

இந்நிலையில் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மொத்தம் 1.35 லட்சம் மாணவர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்ற இத்தேர்தலில், 44.46 சதவீத வாக்குகள் பதிவாகியதாக மேலும் அச்செய்தி விவரிக்கிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - எஸ்.பி.ஐ மீது வழக்கறிஞர் விமர்சனம்

படத்தின் காப்புரிமை Getty Images

விஜய் மல்லையா நாட்டைவிட்டு வெளியெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, அவர் இந்தியாவில் இருந்து வெளியேறுவதைத் தடுக்க உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு கடன் வழங்கியவர்களிலேயே அதிகமான தொகையை வழங்கிய எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகத்துக்கு தாம் ஆலோசனை வழங்கியதாக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிடம் கூறியுள்ளார்.

பிப்ரவரி 28, 2016 அன்று அந்த வங்கியின் உயர் அதிகாரிகளை தாம் சந்தித்ததாக அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :