வரதட்சணை கொடுமை: அடிப்படை முகாந்திரம் இருந்தால் கைது செய்யலாம் - உச்சநீதிமன்றம்

  • 14 செப்டம்பர் 2018
உச்சநீதிமன்றம் படத்தின் காப்புரிமை The India Today Group

வரதட்சணை கொடுமை புகாரில் அடிப்படை முகாந்திரம் இருந்தால் உடனடியாக கைது செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீன் வழங்குவது சம்மந்தப்பட்ட நீதிமன்ற அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 2017ஆம் ஆண்டு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு சற்று மாற்றியமைத்துள்ளது.

2017ஆம் ஆண்டு தீர்ப்பின்படி, வரதட்சணை கொடுமை புகாரில் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் முன்பாக, புகாரை ஆய்வு செய்ய குடும்பநல கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ஆனால், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி, குடும்பநல கமிட்டி அமைக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து, இந்த புகார்களை காவல் துறையினரே விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில டிஜிபிக்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வரதட்சணை கொடுமை வழக்குகளில் புகார் உறுதிசெய்யப்படும் வரை கைது செய்யக் கூடாது என்று ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்திருந்தது.

அந்த தீர்ப்பானது 489A சட்டப்பிரிவை மாற்றி அமைத்ததோடு, குற்றம் சாட்டப்பட்டவரின் கட்டாய கைதையும் நிறுத்தி வைத்திருந்தது.

குடும்ப நல கமிட்டி எவ்வாறு விசாரிக்குமோ அதுபோன்று போலீசாரும் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அனைத்து மாநில டிஜிபிக்களுக்கு அனுப்பிய உத்தரவில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கைது தொடர்பாக விசாரணை அதிகாரி உரிய முடிவு எடுப்பதை டிஜிபிக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், அந்த சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு, சமூக அமைதியின்மைக்கு வித்திடுவதாக ஒப்புக்கொண்ட நீதிபதிகள், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை நீதிமன்றத்தால் அடைக்க முடியாது என்றும் கருத்துத் தெரிவித்தனர்.

வரதட்சணை கொடுமை 498A பிரிவு

பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமைகள் மற்றும் இது தொடர்பான இறப்புகளை தடுக்கும் வகையில் 498A சட்டப்பிரிவு கொண்டுவரப்பட்டது.

இந்தப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக கைது செய்யப்படுவர் என்ற வகையில் இந்த சட்டம் அமைந்திருந்தது.

ஆனால், இதனை பெண்கள் முறைகேடாக பயன்படுத்துவதாகக்கூறி இதற்கு எதிராக சிலர் போராடி வந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :