ஜேட்லி-மல்லையா: வாராக்கடனால் வந்த அரசியல் எதிர்வினைகள்

  • 14 செப்டம்பர் 2018

Image

படத்தின் காப்புரிமை Getty Images

9,000 கோடி ரூபாய் வாராக்கடன் தொடர்பாக, கிங்ஃபிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையா மீது சிபிஐ வழக்கு பதிந்தது. அமலாக்கத் துறை அவரது சொத்துக்களை முடக்கியது.

தனது இந்திய பாஸ்போர்ட் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டே நாட்டைவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். அவரை இந்தியாவுக்குக் கொண்டுவர சட்டரீதியான பல நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.

தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் அவர், இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாக கூறியிருப்பது சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.

அண்மையில் விஜய் மல்லையா, வெஸ்ட்கிஸ்டர் நீதிமன்றத்திற்கு வந்தபோது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, "ஜெனீவாவில் நடைபெறவிருந்த ஒரு கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காகவே நான் இந்தியாவில் இருந்து கிளம்பினேன். அதற்கு முன்னர் நான் இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்தேன்" என்றார்.

"ஜேட்லியுடனான சந்திப்பு ஏற்கனவே திட்டமிடப்பட்டது. வங்கியில் வாங்கிய கடனை செட்டில் செய்வதற்காக பேசினோம். "

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய நிதியமைச்சரை எங்கே சந்தித்தீர்கள், எப்போது சந்தித்தீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அவர், "அதை உங்களிடம் நான் ஏன் சொல்லவேண்டும்? இது போன்ற கேள்விகளைக் கேட்டு என்னை தொந்தரவு செய்யாதீர்கள்" என்று கூறிவிட்டார்.

ஜேட்லியை சந்தித்ததை மட்டும் குறிப்பிட்ட விஜய் மல்லையா, ஆனால் பேசிய விஷயம் என்ன என்பதைப் பற்றி எதுவுமே கூறவில்லை.

மல்லையா பேசியதற்கான பதிலை தனது சமூக ஊடக பதிவின் மூலம் நிதியமைச்சர் ஜேட்லி கொடுத்துள்ளார்.

ஆனால், மல்லையா சொன்னதை அருண் ஜேட்லி மறுத்துள்ளார். 'உண்மை நிலை' என்ற தலைப்பில் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

அருண் ஜேட்லி என்ன சொல்கிறார்?

"இது உண்மைக்கு புறம்பாக, தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள கருத்து. 2014ஆம் ஆண்டு முதல் இதுவரை விஜய் மல்லையாவை சந்திக்க நான் அனுமதி வழங்கியதே கிடையாது. எனவே நான் தனிப்பட்ட முறையில் அவரை சந்திக்கவில்லை" என்று ஜேட்லி கூறுகிறார்.

"மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மல்லையாவை நாடாளுமன்றத்தில் சந்தித்திருக்கிறேன். நாடாளுமன்ற வளாகத்தில் எனது அறைக்கு சென்றுக் கொண்டிருந்த வழியில் என்னை அவர் ஒருமுறை சந்தித்தார். அப்போது, கடனை செட்டில்மெண்ட் செய்வதற்கான ஒரு 'ஆஃபர்' வைத்திருக்கிறேன் என்றும், அவரது முந்தைய 'ஏமாற்று ஆஃபர்'களைப் பற்றியும் சொன்னார்".

"நான் அவரை மேலே பேசவிடாமல் தவிர்க்கும் வகையில், என்னை அணுகுவதை விட வங்கியை அணுகுமாறு அவரிடம் உறுதியாக கூறிவிட்டேன், அவரது கையில் இருந்த காகிதங்களை வாங்க மறுத்துவிட்டேன்".

"இதுபோன்று அவர் பேசியபோது, மாநிலங்களவை உறுப்பினரான அவர், தொழில்ரீதியான நோக்கத்திற்காக தனது உரிமையை ஒரு கடனாளி என்ற முறையில் தவறாக பயன்படுத்தினார். நான் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கினேனா என்ற கேள்விக்கே இடமில்லை" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

விஜய் மல்லையா பேச்சுக்கு எதிர்வினை

விஜய் மல்லையா கருத்துக்கு பலவிதமான அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த முழு விவகாரத்தையும் முழுமையாக விசாரணை செய்யவேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறியிருக்கிறார்.

பணத்தை சுருட்டிக் கொண்டு இந்தியாவிற்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு மல்லையா நாட்டை விட்டு வெளியேறியதாக டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, இந்த விவகாரத்தில் "அரசு காவலாளி அல்ல, பங்காளி" என்று குறிப்பிட்டுள்ளார்.

"இந்த விஷயத்தை அருண் ஜேட்லி இத்தனை நாட்களாக ஏன் மறைத்தார் என்பது திகைப்பை ஏற்படுத்துகிறது" என்று டெல்லி முதலமைச்சர் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, நீரவ் மோதி பிரதமர் மோதியை சந்தித்தார். மல்லையா, அருண் ஜேட்லியை சந்தித்தார் என்பது போன்ற தகவல்கள் எதை உணர்த்துகின்றன என்பதை மக்கள் தெரிந்துக் கொள்ள விரும்புகின்றனர்."

பா.ஜ.க தலைவர் சுப்பிரமணியம் சுவாமி வெளியிட்டுள்ள ட்வீட்டில், "மல்லையா நாட்டை விட்டு வெளியேற முடியாது. ஏனெனில் மல்லையா 'தேடப்படுபவர்' என்ற கடுமையான அறிவிப்பு நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது. எனவே டெல்லிக்கு வந்த மல்லையா, மிகவும் அதிகாரம் மிக்க ஒருவரை சந்தித்து, அந்த அறிவிப்பை சற்றே மாற்றிவிட்டார். அதாவது, அவர் இந்தியாவில் இருந்து வெளியேறுவதை தடுப்பதற்கு பதிலாக, அவர் நாட்டில் இருந்து வெளியேறினால் அதை தெரிவிக்குமாறு அறிவிப்பு மாற்றப்பட்டது. இந்த அறிவிப்பை பலவீனப்படுத்திய நபர் யார்?" என்று கேட்டிருந்தார்.

முன்னாள் நிதியமைச்சரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா, விஜய் மல்லையாவுடனான தொடர்பு பற்றி நிதியமைச்சர் அருண் ஜேட்லி மட்டுமல்ல, பா.ஜ.க தலைவர்கள் அனைவருமே விளக்கம் அளிக்கம் வேண்டும் என தனது டிவிட்டர் பதிவில் கூறியிருக்கிறார்.

இது ஒன்றும் புதிதல்ல, அனைவருக்குமே முன்னரே தெரிந்த விஷயம்தான் என்று சி.பி.எம் தலைவர் சீதாரம் யெச்சூரி கூறுகிறார்.

"இந்த விஷயத்தை அரசு எவ்வளவுதான் மறுத்தாலும், பொதுமக்களின் பணத்தை வங்கியில் கடன் வாங்கிய ஒருவர், அரசுக்கு தெரியாமல் நாட்டை விட்டு வெளியேறவே முடியாது."

மல்லையாவை ஒப்படைப்பது பற்றி டிசம்பர் 10ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்.

முன்னதாக, இந்திய அரசு வழக்கு தொடர்பாக கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் லண்டன் தப்பிச் சென்ற அவரை லண்டன் பெருநகர போலீஸ் கைது செய்தது.

மல்லையா மீதான மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இந்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, நீதிமன்ற விசாரணைக்கு ஏதுவாக, லண்டன் பெருநகர போலீசார் கைது செய்தனர்.

பிறகு, சுமார் 8 லட்சம் டாலர்கள் ஜாமீன் தொகையாக கட்ட வேண்டும்; தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின்படி, லண்டன் நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு ஜாமீன் வழங்கியது.

விஜய் மல்லையாவை ஒப்படைப்பது தொடர்பாக லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 10ஆம் தேதி வெளியாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :