தொல்லை தரும் குரங்கை கொன்றால் பரிசுத்தொகை; கொல்ல யாருமில்லை

ஹிமாச்சலப்பிரதேசத்தில் அதிகரித்து வரும் குரங்குகளின் அட்டகாசத்தால் அந்த மாநில விவசாயத்துறையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குரங்குகளின் தொடர் அட்டகாசத்தால் பொறுமை இழந்த பல விவசாயிகள் விவசாயத்தை கைவிடுவதற்கு முடிவெடுத்துள்ளனர்.

ஹிமாச்சலப்பிரதேசத்தில் குரங்குகளை கொல்வதை சட்டபூர்வமாக்கும் அளவுக்கு இந்த விடயம் பூதாகரமாகியுள்ளது. இருந்தபோதிலும், பல்வேறு காரணங்களுக்காக அம்மாநில மக்கள் குரங்குகளை கொல்வதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஹிமாச்சலப்பிரதேச விவசாயத்துறையின் அறிக்கையொன்றில், குரங்குகளின் செயற்பாட்டினால் கடந்த 2014ஆம் ஆண்டு மட்டும் சுமார் 184 கோடி மதிப்புள்ள விவசாய பயிர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சல் விவசாய சங்கத்தை சேர்ந்த குல்தீப் சிங் தன்வர் பிபிசியிடம் பேசும்போது, "ஏற்கனவே வறட்சி, அதிக மழைப்பொழிவு போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயம் பிரச்சனைகளை சந்தித்து வரும் சூழ்நிலையில், குரங்குகளினால் ஏற்படும் பாதிப்புகள் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளன. குரங்குகளிடமிருந்து தங்களது பயிரை காப்பதற்கு விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர்" என்று கூறினார்.

"ஒவ்வொரு வருடமும் நேரடியாகவும், மறைமுகமாகவும் மில்லியன்கணக்கான ரூபாய் குரங்குகளினால் வீணாகிறது. ஹிமாச்சலப்பிரதேசத்திலுள்ள 6.5 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலத்தில் சுமார் 75 ஆயிரம் ஹெக்டேர் குரங்குகளினால் தரிசாக மாறியுள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

குமுறும் விவசாயிகள்

ஹிமாச்சலின் பிலாஸ்பூர் மாவட்டத்திலுள்ள பரோக் என்னும் கிராமத்தை சேர்ந்த செங்கு ராம் தாக்கூர் என்ற விவசாயி, "குரங்குகள் பயிர்களை உண்பதுடன், அதை முழுவதுமாக வீணாக்குகின்றன. விவசாய நிலத்தை குரங்குகளிடமிருந்து பாதுகாப்பது சிரமமாக உள்ளதால், நிலத்தை தரிசாக விடும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.

Image caption செங்கு ராம் தாக்கூர்

"ஒருநாள் 40-50 குரங்குகள் என்னுடைய நிலத்திற்கு வந்து, அருகிலுள்ள கோபுரத்தில் ஏறின. அன்றிரவு கோபுரத்திலிருந்து கீழிறங்கிய குரங்குகள் மொத்த பயிரையும் சின்னாபின்னம் ஆக்கிவிட்டன. குரங்குகளின் தொடர் தொல்லையின் காரணமாக காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் விவசாயம் செய்வதை நிறுத்திவிட்டோம்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

குரங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதற்கான காரணம் என்ன?

ஹிமாச்சலப்பிரதேசத்தின் மூத்த வன அதிகாரியான ரமேஷ் சந்த் காங், "இங்குள்ள குரங்குகள் காடுகளிலிருந்து வெளியேறி நகரங்களில் வாழ தொடங்கிவிட்டன.

எப்போதுமே 20-25 குரங்குகள் சேர்ந்து ஒன்றாக நடமாடுவது மக்களிடையே அச்சத்தை உண்டாக்குகிறது. நகரங்களில் சரியாக பராமரிக்கப்படாத திடக்கழிவுகளை உண்டு இவை அபரிதமான எண்ணிக்கையில் பெருகி வருகின்றன" என்று பிபிசியிடம் கூறினார்.

"முன்னர் விவசாயிகள் பெரியளவில் பலரும் ஒன்றாக விவசாயம் செய்து வந்தது நிலத்தை குரங்குகள், பன்றிகளிடமிருந்து பாதுகாப்பதற்கு உதவியாக இருந்தது.

ஆனால், தற்போது விவசாயம் செய்யும் அமைப்புமுறை மாறியுள்ளதால் குரங்குகளால் எளிதாக உள்ளே புகுந்து பயிர்களை நாசம் செய்யும் சூழல் நிலவுகிறது" என்று அவர் மேலும் கூறினார்.

Image caption ரமேஷ் சந்த் காங்

குறிப்பாக, சிம்லாவிலுள்ள 75 தாலுகாக்களிலும், ஹிமாச்சலப்பிரதேசத்திலுள்ள 34 துணை தாலுகாக்களிலும் குரங்குகள் வேட்டையாடி இரை உண்ணும் விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

வாழ்வாதாரத்துக்கு சேதத்தை விளைவிக்கும், மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் விலங்குகளே இந்த பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.

இந்த பட்டியலிலுள்ள விலங்குகளை கொல்வதற்கு மக்களுக்கு அரசாங்கம் அனுமதியளிக்கிறது. இதன்படி கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தங்களுக்கு பாதிப்பை உண்டாக்கிய குரங்குகளை கொல்லும் விவசாயிகளுக்கு குரங்கொன்றிற்கு தலா 500 ரூபாய் வழங்கப்படுமென்று அம்மாநில வனத்துறை அமைச்சர் தாக்கூர் சிங் அறிவித்திருந்தார்.

மேலும், குரங்குகளை பிடித்து கருத்தடை செய்வதற்கு கொண்டுவந்தால் 700 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Image caption குசும் சட்ரெட்

அரசாங்கம் குரங்குகளை கொல்பவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்த பிறகுகூட இதுவரை ஒரு குரங்கை கூட மக்கள் கொல்லவில்லை என்று சிம்லா நகராட்சியின் மேயர் குசும் சட்ரெட் பிபிசியிடம் கூறினார்.

"இந்து சமயத்தில் கடவுள் அனுமானின் வடிவமாக குரங்குகள் பார்க்கப்படுகிறது. குரங்குகளை மக்கள் கடவுளின் வடிவமாக பார்ப்பதால், அவற்றின் எண்ணிக்கையை இதுவரை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க முடியவில்லை" என்று அவர் மேலும் கூறினார்.

குரங்குகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி

குரங்குகளை வேட்டையாடி இறை உண்ணும் விலங்குகள் பட்டியலில் சேர்ந்ததனால் ஒரு பயனும் இல்லை என்றும், இதுவரை வெறும் 5 வழக்குகளே குரங்குகளை கொன்றதாக பதிவாகியுள்ளது என்றும் சிம்லாவின் வனத்துறை மருத்துவர் சஞ்சய் கூறுகிறார்.

"பொதுவாக 25 முதல் 30 வருடங்கள் வரை வாழும் குரங்குகளின் எண்ணிக்கை 21.4 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து வருகிறது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக ஹிமாச்சலப்பிரதேசத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் மூலம் சுமார் 1,43,000 குரங்குகளுக்கு கருத்தடை செய்யப்பட்டது. இல்லையென்றால் அவற்றின் எண்ணிக்கை தற்போது ஆறேழு லட்சங்களை தொட்டிருக்கும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

Image caption குரங்குகளை பிடித்து கருத்தடை செய்வதற்கு கொண்டுவந்தால் 700 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல், மனிதர்கள் மீதான குரங்குகளின் செயல்பாடு, அணுகுமுறை அதீத மாற்றத்தை கண்டுள்ளதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

சிம்லாவிலுள்ள அரசு மருத்துவனையில் நோயாளிகள் குரங்குகளினால் கடிக்கப்படும் சம்பவம் தினந்தினம் நடக்கும் சம்பவமாக மாறியுள்ளது.

குறிப்பாக, சிம்லாவின் நகர்ப்புற பகுதியிலுள்ள சந்தைகளுக்கு உணவு தேடி வரும் குரங்குகள் மக்களிடமிருந்து உணவுப்பொருட்களை பறிப்பதும், கடிப்பதும் வழக்கமாகிவிட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குரங்கும், அரசியலும்

ஹிமாச்சலப்பிரதேச அரசியல் வட்டாரத்தில், குரங்குகள் அடிக்கடி அரசியல் பகடைக்காயாக பயன்படுத்தப்படுவதுண்டு.

ஒவ்வொரு தேர்தலின்போதும், குரங்குகளின் செயல்பாடு பெரிய பிரச்சனையாக பேசப்படுகிறது.

ஆனாலும், இதுவரை எந்த அரசாங்கமும் இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை என்று பரவலாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

சிம்லாவில் குரங்குகளின் செயற்பாடு மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாக கூறும் நகர மேயர் குசும், "குரங்குகளிடம் எச்சரிக்கையாக இருப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர்ந்து முயன்று வருகிறோம். குரங்குகளுக்கு எவ்விதமான உணவுப்பொருட்களையும் வழங்க வேண்டாம் என்றும் உணவுக்கழிவுகளை ஒழுங்காக அப்புறப்படுத்துமாறும் வலியுறுத்தி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

"வேட்டையாடி இரை உண்ணும் விலங்குகள் பட்டியலில் குரங்குகளை சேர்த்தபோதும் அவற்றை கொல்ல கூட துணியாத மக்கள், அதற்கு இரை கொடுத்து வருவதே பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி. ஹிமாச்சலப்பிரதேசத்தின் மக்கள்தொகை 68 லட்சத்து 64 ஆயிரத்து 602.

ஆனால், இங்கு மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரம் குரங்குகள் உள்ளன. அதாவது, 33 மனிதர்களுக்கு ஒரு குரங்கு என்ற வீதத்தில் உள்ள அவற்றின் பெருக்கம் இந்த பிரச்சனையின் வீரியத்தை உணர்த்துவதாக உள்ளது.

காட்டை அழிப்பவருடன் சண்டை போடும் ஒராங்குட்டான் குரங்கு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அவதார் திரைப்படத்தை போல வீட்டைகாக்க போராடிய ஒராங்குட்டான் (காணொளி)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :