பெண்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டால் என்ன தவறு? #beingme

  • 16 செப்டம்பர் 2018

பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் மூன்றாவது கட்டுரை இது.

சமூகவலைதளங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் ஃபேஸ்புக்கில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாகத் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றேன். நான் பார்த்த விதத்தில் பெண்களுக்கு சமூகவலைதளங்களில் நிகழும் சாதகமான விளைவுகளையும் எதிர்மறையான அனுபவங்களையும் ஒரு விவாதப் பொருளாக எடுத்து கொள்ளலாம். முதலில் சாதகமானவற்றைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். ஏனெனில் நேர்மறையான விளைவுகள் மிகக் குறைவு. எனவே அதை அடிக்கோடிட்டு முதன்மைப்படுத்துவது நல்லது.

எழுத்துகள் மூலம் கருத்து பரிமாற்றம்

சென்ற தலைமுறைப் பெண்களுக்குக் கிட்டாத ஒரு வாய்ப்பு எழுத்து மூலம் பொதுவெளியில் கருத்து பரிமாற்றம் நிகழ்த்துவது ஆகும். பெரும்பாலும் தோழிகளுக்குக் கடிதம் எழுதும் அளவிற்கு எழுதுபொருள் சுருங்கியதாக இருந்திருக்கும். பெண் எழுத்தாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள்கூட விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே இருந்தனர்.

ஆனால் சமூக வலைதளங்கள் வந்தபின் அத்தகைய இடர்கள் குறைந்து எழுத்துமொழி பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. பத்தில் ஆறு பெண்களாவது எழுதக்கூடியவர்களாக இருக்கின்றனர். இவ்விடத்தில் என்ன எழுதுகிறார்கள் என்பது முக்கியமன்று. எழுத்து மூலம் கருத்துப் பரிமாற்றம் நிகழ்வது அதிகரித்திருக்கின்றது. மேலும் எழுதவேண்டும் என்கிற ஆர்வத்தினால் பல பெண்கள் புத்தகங்கள் வாசிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

பெண்கள் அரசியல் பேசுவதும் இலக்கியம் பேசுவதும் கடந்த நான்காண்டுகளில் சரசரவென அதிகரித்ததில் சமூகவலைதளங்களுக்குப் பெரும்பங்கு உள்ளது. அதேபோல எழுத்தாளராக அங்கீகரிக்கப்படுவது சாதாரண விஷயமன்று. ஆனால் இன்று ஃபேஸ்புக்கில் எழுதியோ ப்ளாக்கில் எழுதியோ பின்பு அவற்றைத் தொகுத்து எளிதாக எழுத்தாளர் என்று அறியப்படலாம்.

நம் படைப்புகளை விளம்பரம் செய்வதற்கும் நம்முடைய துறைசார்ந்தவர்களை அணுகுவதற்கும் இத்தளங்கள் ஒரு தொலைதொடர்பு காரணியாக இருக்கின்றன. மேலும் எனக்கு வருகின்ற விமர்சனங்களையும் பாராட்டுகளையும் நான் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடிகிறது. இவ்வளவு நன்மைகள் இருப்பினும் இதில் இரண்டுபங்கு எதிர்மறை அனுபவங்கள் சமூகவலைதளங்களில் தொடர்ச்சியாக இயங்கும் அனைத்துப் பெண்களுக்கும் கிடைத்திருக்கும்.

எதிர்மறை அனுபவங்கள் அதிகம்

எதிர்மறை அனுபவங்களில் முதலாம் இடம் வகிப்பது பாலியல் வசை. உடல் ரீதியான விமர்சனங்கள், பகடிகள், தவறாகச் சித்தரித்தல் போன்றவை பெண்கள் வழக்கமாக எதிர்கொள்பவை. முதன்முறையாகத் தாக்கப்படும்போது பல பெண்கள் இங்கிருந்து கணக்கை மூடிவிட்டு கிளம்பிவிடுகின்றனர். ஏனெனில் பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்கள் தங்களது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

பெண்ணுக்கான பெயர் பாலியல் ரீதியாக சிதைக்கப்படும்போது அது அக்குடும்பச்சூழலை பெரிதும் பாதிக்கும் காரணியாக உள்ளது. திருமணமாகாத பெண்கள் எனில் அவர்களது தாய் தந்தையை பாலியல் ரீதியாகத் திட்டுவது, குடும்பப் பெண் எனில் அவள் சுயஒழுக்கத்தைக் கேள்விக்குறியாக்குவது என்று இங்கு பாலியல்ரீதியான தாக்குதல்கள் ஏராளம்.

இதைச் செய்பவர்கள் பெரும்பாலும் முகம் மறைத்துத் தாழ்வுணர்வில் போலிக்கணக்குகளில் இயங்கி வருபவர்கள். இவர்கள் ஏதேனும் ஒரு பெண் சுதந்திரமாக ஏதாவது கருத்தை முன்வைத்தால் அந்தக் கருத்தை நோக்கி எதிர்விவாதம் வைக்க மாட்டார்கள். உருவகேலி, ஒழுக்கப்பகடி, வசைகள் முதலியவற்றில் ஈடுபட ஆரம்பிப்பார்கள். இதற்குத் தீர்வாக ப்ளாக் செய்துவிடுங்கள் என்கிற அறிவுரைகளைப் பொதுவெளியில் கேட்கலாம். நாம் ப்ளாக் செய்வதால் அந்தப் போலிக்கணக்கர் அமைதியாகிவிடப்போவதில்லை.

இதேபோல மற்றொன்று, குழுவாக இணைந்து நம்மை வசைபாடுவது. இதில் பெண்களும் உள்ளடக்கம். காரணமற்ற வன்மங்கள் அல்லது சுயகழிவிரக்கம் முதலியவை இத்தகைய வசைபாடல்களுக்கு இவர்களை அழைத்துச்செல்கிறது. பெண்கள் இங்கு ஓரளவு இவற்றைப் புரிந்துகொண்டு தன்விருப்பத்தின் பேரில் தொடர்ந்து இயங்கிவந்தால் மனிதர்கள் எத்தனை கேவலமானவர்கள் என்பதை அறியலாம்.

சமூக வலைதளங்கள் மானுடம் மீது அசூயை கொள்ள வைக்கும். ஒவ்வொருவரிடமும் இருக்கின்ற நஞ்சை ஒவ்வொரு தருணத்தில் அறியலாம். மேலும் பெண்களுக்கு எதிராக இப்படியோர் உலகம் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறதா என்கிற வியப்பும் ஏற்படும்.

படத்தின் காப்புரிமை BBC Sport

பெண் என்கிற காரணத்தினால் வரும் மற்றொரு எதிர்விளைவு ஃபாலோயர்களின் விருப்பம். அவர்களது விருப்பம் வெறும் தற்படங்களும் புகைப்படங்களும் மட்டுமே. ஒரு கனமான இலக்கியம்சார் கட்டுரையோ கவிதையோ எழுதினால் கண்டுகொள்ளப்படுவதில்லை. பெண் பொதுவெளிக்கு வந்தால் அவள் அழகைக் கடந்து படைப்புகளை கவனிக்கத் தவறுகின்றனர். இது லாபமான விஷயம்தானே என்று கருதக்கூடும். மேலோட்டமாகப் பார்த்தால் அவ்வாறு தோன்றும். ஆழமாகச் சிந்திக்கும்போது பெண்களை அறிவுசார் தளத்தில் சுதந்திரமாக இயங்கிட மறைமுக எதிர்ப்புதான் இத்தகைய அழகு சார்ந்த ஆராதனைகளும் பாராட்டுகளும்.

இப்போது புதிதாக உருவாகியிருக்கும் மோசமான தாக்கம் ட்ரெண்டிங்கும் கொள்கைசார் சண்டைகளும். இன்றைய டிரெண்டிங் ஓர் அரசியல்வாதியின் பேச்சு என்றால் அதுகுறித்து கட்டாயம் பகடியோ எள்ளலோ செய்திருக்க வேண்டும். இல்லை அந்நேரத்தில் கவிதையோ வேறு ஏதோ எழுதினால் வசைக்குள்ளாவோம்.

அடுத்து அடிப்படைவாதம் மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளால் இரண்டு பிரிவாக நின்று எந்தக் கருத்தையும் ஆராயாமல் முட்டாள்தனமாக ஒருவரையொருவர் சாடி எழுதும் வழக்கம். உதாரணமாக நம் வழியில் சுதந்திரமாக எழுதிக்கொண்டிருப்போம். நம்மிடம் வந்து ஒரு கொள்கையைத் திணித்து இதுதான் சுதந்திரம் என வகுப்பெடுக்க ஆரம்பிப்பார்கள். நாம் கேட்கவில்லை எனில் அடிப்படைவாதியாக முத்திரை குத்தப்பட்டு ஒவ்வொருமுறையும் மோசமாக சித்தரிக்கப்படுவோம். இதுதான் உங்கள் கருத்தியலா என்று கேள்வி கேட்டால் அந்தப் பெரிய மனிதரின் படத்தை முகப்புப் படமாக வைத்துக்கொண்டு நம் குடும்பத்தையும் சேர்த்து வசைபாடுவார்கள்.

இதிலிருந்து மீள்வது எப்படி என்கிற கேள்வி அனைவருக்கும் எழும். உங்களை வசைபாடத் துவங்கினால் பதிலுக்கு நாமும் அதேமாதிரி கெட்டவார்த்தையில் அவர்களது குடும்பத்தை இழுத்தால் போதும் அடங்கிவிடுவார்கள். ஏனெனில் இங்கு பெண்கள் கெட்டவார்த்தை பேசமாட்டார்கள் என்கிற மூடநம்பிக்கை ரொம்பக்காலமாக இருக்கின்றது. அதிலும் நல்ல குடும்பத்துப் பெண்கள் என்று ஓர் உயர்வு நவிற்சியினை உருவாக்கிக்கொள்வர்.

மேலும் இங்கு சைபர் குற்றப்பிரிவு, பணமோசடிகளில் துரிதமாக இயங்கிக் குற்றவாளிகளுக்கு தண்டனையளிக்கும் அளவிற்கு பெண்கள் மீது நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்களில் ஆர்வம் காட்டப்படுவதில்லை. ஒருவன் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக உருவகேலியாகத் தவறாகப் பேசுவதற்கோ எழுதுவதற்கோ பயப்படும் அளவிற்குச் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். போலிக்கணக்குகளை முடக்குவதில் அரசு தீவிரம் காட்டினால் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்கள் பெருமளவில் குறையும். பெண்களின் சுதந்திரமும் பாதுகாப்பும் சமூகவலைதளங்களிலேயே கேள்விக்குள்ளாகும் நிலையில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளில் முதலிடத்தில் இந்தியா இருப்பதில் வியப்பேதும் இல்லை.

(சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் பெண் ஒருவரின் அனுபவங்களின் வெளிபாடே இந்தக் கட்டுரை. பெண்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் குறித்து பேசப்படும் இந்த #beingme தொடர் பிபிசி தமிழ் செய்தியாளர் விஷ்ணுப்ரியா ராஜசேகரால் தயாரிக்கப்பட்டது.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :