'பணத்தோட்டம்' : கடல்கடந்து வணிகம் செய்த தமிழன் விலாசம் இழந்தது எப்படி? - விளக்கும் அண்ணா

படத்தின் காப்புரிமை Google Images

மூலதனம்தான் எல்லாம். சரிசமமான மூலதன பகிர்வு இல்லாமல் எந்த சமத்துவத்தையும் கொண்டு வந்துவிட முடியாது என தரவுகளுடன் நிறுவுகிறது சி.என். அண்ணாதுரையின் பணத்தோட்டம் புத்தகம்.

'வடக்கு வாழ்கிறது'

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது திராவிட இயக்கத்தின் மிகவும் பிரபலமான கோஷம். திராவிட இயக்கம் சிறு கிராமங்கள் வரை உள் நுழைந்ததற்கு இந்த கோஷமும் மிக முக்கிய காரணம். சுதந்திர போராட்ட காலத்தில் அண்ணாதுரை எழுதிய இந்த 'பணத்தோட்டம்' புத்தகமானது இந்த கோஷத்தின் நியாயங்களை பேசுகிறது.

கட்டற்ற முதலீடு வடக்கில் உள்ள முதலாளிகளிடம் இருக்கிறது. அதனால் அவர்களால் வங்கி தொடங்க முடிகிறது, காப்பீடு நிறுவனங்கள் தொடங்க முடிகிறது, பெரும் பெரும் ஆலைகள் எல்லாம் தொடங்க முடிகிறது. ஆனால், காலம் காலமாக தொழிலில் சிறந்து விளங்கிய தமிழ் சமூகம் மற்றும் அந்த சமூகத்தின் நிலபரப்பு வெறும் சந்தையாக மட்டும் சுருங்கிவிட்டது என அந்த காலக்கட்டத்தின் நிலையை அரசு தரவுகள் மூலமாக 'பணத்தோட்டம்' புத்தகத்தில் விளக்குகிறார் அண்ணா.

படத்தின் காப்புரிமை TWITTER

'கப்பலோட்டிய தமிழன்'

சங்க காலத்தில் கடலை ஆண்ட தமிழன், கிரேக்கம் வரை சென்று வணிகம் செய்த தமிழன், சுதந்திர காலக்கட்டத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கப்பலோட்டிய தமிழனிடம் இப்போது (இந்த புத்தகம் எழுதப்பட்ட காலகட்டத்தில்) எந்த கடல் சார் நிறுவனங்களும் இல்லை என்று சுட்டிக்காட்டும் அண்ணா, அதற்கு காரணம் தமிழனிடம் அதிகாரம் இல்லாமல் போனதுதான் என்கிறார்.

வளங்களை சுரண்ட, பொருட்களை விற்க மட்டும்தான் இந்த திராவிட நிலப்பரப்பு அவர்களுக்கு தேவை, நம்மை கொண்டு பணத்தை விளைவித்து பத்து மடங்காக அறுவடை செய்கிறார்கள், தேசப் பற்றின் பெயரால் உணர்வுகளை தூண்டி, நம்மை சுரண்டி அவர்கள் கொழுக்கிறார்கள் என்று பணத்தோட்டம் புத்தகத்தில் கவலையுறும் அண்ணா, வடக்கிலும் சில முதலாளிகளிடம் மட்டுமே மொத்த சொத்தும் வளமும் குவிந்து கிடப்பத்தை சுட்டிகாட்டுகிறார். பொது நிறுவனங்களின் முக்கியத்துவம், தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்குவதன் தேவை என முக்கிய விஷயங்களை இந்த புத்தகத்தில் பட்டியலிடும் அண்ணா அதற்கு அதிகாரம் எவ்வளவு முக்கியம் என்றும் விவரிக்கிறார்.

படத்தின் காப்புரிமை Google Images

'பொருளாதார ஏகாதிபத்தியம்'

உண்மையான விடுதலை என்பது பொருளாதார விடுதலை என்பதில்தான் உள்ளது என்பதை விவரிக்கும் அண்ணா, வெள்ளையர்களிடம் இருந்த வணிகமும், பொருளாதாரமும் வேறொரு வட இந்தியரின் கைகளுக்கு செல்வது திராவிட நிலத்திற்கு எந்த வகையில் நன்மை பயக்கும் என்று வினா எழுப்புகிறார்?

"அவரது வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், "திராவிடத்தின் செல்வத்தைச் சுரண்டும், வடநாட்டு வணிக வேந்தர்களின் பணபலம், தொழில் பலம் இவற்றினுக்கு அரணாக அவர்களுக்கு அமைந்துள்ள அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைக் கண்டால், எவ்வளவு வேகமாக புதியதோர் பொருளாதார ஏகாதிபத்தியம் உருவாகிக் கொண்டு வருகிறது என்பது விளங்கும்." என்று தனது பணத்தோட்டம் புத்தகத்தில் குறிப்பிடுகிறார் அண்ணா.

படத்தின் காப்புரிமை TWITTER

மேலும் அவர், "வியாபாரத்தோடு இந்த ஆதிக்கம் நின்றுவிடவில்லை. உற்பத்தித் தொழிலே, ஒரு நாட்டின் உயிர்நாடி; அது இன்று பெரிதும் வடநாட்டவரிடம். பணத்தை தேங்கி இருக்குமிடத்திலிருந்து பெற்று, தேவையான இடத்தில் செலுத்தும் தொழில், ஒரு உடலில் இரத்த ஓட்டத்துக்குச் சமானம்; அது பெரிதும் வட நாட்டவரிடம்தான். தமிழன் உயிர்நாடி, இரத்தக் குழாய் இரண்டையும் வடநாட்டவரிடம் ஒப்படைத்துவிட்டு, 'வாழ்வாவது மாயம்' என்று வானை நோக்கிப் பாடியபடி இருக்கிறான்" என்கிறார் அண்ணா.

ஏறத்தாழ ஆறு தசாப்தங்களுக்கு முன் சி.என் அண்ணாதுரை எழுதி வெளிவந்த இந்த நூலை மீண்டும் பிரசுரம் செய்துள்ளது ஆழி பதிப்பகம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :