`கணவர்களின் பாலியல் இச்சையை பெண்கள் எதிர்க்க வேண்டும் என்று விரும்பினார் காந்தி'

  • 16 செப்டம்பர் 2018

அமெரிக்க பிறப்பு கட்டுப்பாடு செயல்பாட்டாளரும் பாலியல் கல்வியாளருமான மார்கரெட் செங்கர் 1935-ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியா வந்திருந்தபோது மகாத்மா காந்தியை சந்தித்துப் பேசினார்.

படத்தின் காப்புரிமை BETTMANN/GETTY IMAGES
Image caption பேத்திகள் மனு (இடது) மற்றும் அபா (வலது) ஆகியோருடன் காந்தி

அப்போது இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களை சந்தித்து மகப்பேறுக் கட்டுப்பாடு மற்றும் பெண்கள் விடுதலை குறித்து உரையாட 18 இந்திய நகரங்களுக்குச் சென்றார்.

காந்தியுடன் மார்கரெட் சந்தித்து நிகழ்த்திய அந்த உரையாடல் வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா எழுதியுள்ள காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலில் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உலகெங்கும் உள்ள 60 வெவ்வேறு மூல ஆதாரங்களை வைத்து எழுதப்பட்டுள்ள இந்த 1129 பக்கங்களைக் கொண்டுள்ள இந்நூல், காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய 1915 முதல் அவர் கொல்லப்பட்ட 1948 வரையிலான காந்தியின் வாழ்க்கையை விவரிக்கிறது.

பெண்ணுரிமை மற்றும் பிரம்மச்சரியம் ஆகியவை குறித்த காந்தியின் கண்ணோட்டத்தையும் இந்த நூல் மூலம் அறிய முடிகிறது.

மார்கரெட் மற்றும் காந்தி இடையே நிகழ்ந்த உரையாடலை காந்தியின் செயலர் மஹாதேவ் தேசாய் குறிப்பெடுத்து வைத்திருந்தார்.

இருவரும் பெண்கள் முன்னேற வேண்டும் என்றும் தங்கள் வாழ்வு குறித்த முடிவை எடுக்கும் உரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டாலும், அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் உண்டானதாக அந்தக் குறிப்புகள் கூறுகின்றன.

அமெரிக்காவின் முதல் குடும்பக் கட்டுப்பாட்டு மையத்தை 1916இல் நியூ யார்க்கில் திறந்த மார்கரெட் பெண்கள் விடுதலைக்கு கருத்தடை செய்துகொள்வதே சிறந்த வழி என்று நம்பினார்.

ஆனால், பெண்கள் தங்கள் கணவன்மார்களின் பாலியல் இச்சைகளை எதிர்க்க வேண்டும் என்று விரும்பினார் காந்தி. ஆண்களும் தங்கள் 'மிருகத்தனமான ஆசைகளை' கட்டுப்படுத்த வேண்டும் என்றார் அவர். பாலுறவு என்பது இனப்பெருக்கத்துக்கு மட்டுமே என்று காந்தி கூறினார்.

அதை மார்கரெட் எதிர்த்தார். பெண்களுக்கும் ஆசைகள் உண்டு. ஆண்களைப் போலவே பெண்களும் சில நேரங்களில் பாலுறவு கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள் என்று மார்கரெட் வாதிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மார்கரெட் செங்கர்

"அன்புடன் ஒன்றாக வாழும் இருவர், ஆண்டுக்கு ஓரிரு முறை மட்டுமே பாலுறவு கொள்ள வேண்டும் என்று தங்களைத் தாங்களே கட்டுப்படுத்தி, குழந்தை வேண்டும் என்று நினைக்கும் சமயம் மட்டுமே உறவு வைத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா," என்று காந்தியிடம் அவர் கேள்வி எழுப்பினார்.

இத்தகைய சமயங்களில்தான் கருத்தடை சாதனங்கள் உதவும் என்று மார்கரெட் விளக்கியபோதும், காந்தி தன் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை.

பாலுறவை இச்சையாக மட்டுமே பார்ப்பதாகவும், கஸ்தூரிபாயுடன் தனது உறவில் காமத்தைத் தவிர்த்தபின், அது 'ஆன்ம' ரீதியான உறவானது என்றும் காந்தி கூறினார்.

தன் 13ஆம் வயதில் திருமணம் செய்துகொண்ட காந்தி, நான்கு குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் 38-ஆவது வயதில் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்கத் தொடங்கினார். தங்கள் வாழ்நாளில் பின்னாட்களில் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்கத் தொடங்கிய சமணத் துறவி ரைசந்திபாய் மற்றும் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் ஆகியோரை தனது உந்து சக்திகளாக காந்தி பார்த்தார்.

தனது தந்தையின் உயிர் பிரிந்த சமயத்தில், தன் மனைவியுடன் பாலுறவு கொண்டிருந்தது தமக்கு எவ்வாறு பெரும் குற்ற உணர்வை உண்டாக்கியது என்பது குறித்து காந்தி தன் வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட விவாதத்துக்குப் பிறகு காந்தி கொஞ்சம் கருத்தை மாற்றிக்கொண்டார்.

ஆண்கள் தாமாக முன்வந்து கருத்தடை செய்து கொள்வதையும், பெண்கள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு பதில், தங்கள் மாதவிடாய் சுழற்சியின்போது பாதுகாப்பான நாட்களில் உறவு வைத்துக்கொள்ளலாம் என்றும் கூறினார்.

படத்தின் காப்புரிமை FOX PHOTOS/GETTY IMAGES
Image caption சுசிலா பெண் (இடது), மருத்துவர் ஷீலா நாயர் (வலது) போன்ற பெண்கள் காந்தியின் நெருங்கிய வட்டத்தில் இருந்தனர்

எனினும் ஆசிரமத்தை விட்டு வெளியேறும்போது மார்கரெட் முழு மகிழ்ச்சியுடன் செல்லவில்லை. காந்திக்கு ஒழுக்கக்கேடு மற்றும் அதீத மகிழ்ச்சி நிலையை அடைதல் ஆகியவை குறித்து இருக்கும் பயம் குறித்து பின்னாட்களில் அவர் எழுதினார். தனது பிரசாரத்துக்கு காந்தி ஆதரவு தெரிவிக்கவில்லை என்று அவர் கவலையுற்றார்.

செயற்கையான மகப்பேறு கட்டுப்பாட்டை எதிர்த்து காந்தி பேசியது இது முதல் முறை அல்ல. சுய கட்டுப்பாட்டுக்கு அடுத்த மிகப்பெரிய விஷயமாக கருத்தடை சாதனங்களை குறிப்பிட்டு 1934இல் ஒரு பெண்ணுரிமை செயல்பாட்டாளர் ஒருவர் காந்தியிடம் பேசினார்.

"உடலின் விடுதலையை கருத்தடை சாதனங்கள் மூலம் அடைய முடியும் என்று நினைக்கிறீர்களா? பெண்கள் தங்கள் கணவர்களை எதிர்க்க கற்றுக்கொள்ளப் பழக வேண்டும். மேற்குலகைப் போல கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தினால் விபரீதமான முடிவுகள் உண்டாகும். பெண்களும் ஆண்களும் காமத்துக்காக மட்டுமே வாழத் தொடங்கிவிடுவார்கள்," என்று காந்தி பதிலளித்தார்.

"காந்தியைப் பொறுத்தவரை காமம் என்பது இச்சை. அது இனப்பெருக்கத்துக்கு தேவையானது. நவீன கருத்தடை முறைகள் இச்சையை நியாயப்படுத்துகின்றன," என்று குஹா `காந்தி: தி இயர்ஸ் தட் சேஞ்ட் தி வேர்ல்ட், 1914 - 1948 (Gandhi: The Years That Changed the World, 1914-1948)ட எனும் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.

வங்கத்தில் இந்து - முஸ்லிம் மதக் கலவரம் வெடித்தபோது காந்தி ஒரு சர்ச்சைக்குரிய பரிசோதனை மேற்கொள்கிறார். தனது பேத்தி மனு காந்தியை தன்னுடன் உறங்கச் சொல்கிறார்.

"தனது பாலியல் இச்சைகளை தாம் வெற்றி கொண்டதை சோதிக்க அல்லது மேற்கொண்டு சோதிக்க காந்தி முயன்றார். தம்மால் முழுமையான பிரம்மச்சாரி ஆக முடியாமல் போனதால்தான் மத வன்முறைகள் அதிகமானதாக காந்தி கருதினார்," என்று குஹா எழுதுகிறார்.

Image caption 13ஆம் வயதில் கஸ்தூரிபாய் காந்தியை மணந்தார் காந்தி

தனது பரிசோதனை குறித்து தனது ஆதரவாளர்களிடம் காந்தி தெரிவித்தபோது காந்தி கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தார். ஒருவர் இந்த சோதனை அவரது பெயருக்கு களங்கம் உண்டாக்கும் என்று கூறினார். ஒருவர் காந்தியிடம் இருந்தே விலகிவிட்டார்.

தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்த காந்தி, இந்தியாவின் ஒற்றுமை குலைவதன் காரணம் இந்தியாவின் தாக்கம் மிகுந்த தலைவரான தமது நேர்த்தியின்மையால் உண்டானது என்று எழுதினார்.

காந்தியின் எழுத்துகளை ஆராய்ந்த அவரது ஆதரவாளர் ஒருவர் காந்தியின் சுய கட்டுப்பாட்டு விழுமியங்கள் வரலாற்றின் மத்திய கால கிறித்துவ துறவிகள் மற்றும் சமண துறவிகள் போன்று இருப்பதாக தனது நண்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் எழுதினார்.

காந்தியின் சில வழக்கத்துக்கு மாறான சிந்தனைகள் பழங்கால இந்து மதத்தின் அடிப்படைகளில் இருந்து வந்ததாக வரலாற்று ஆசிரியர் பேட்ரிக் பிரெஞ்ச் எழுதுகிறார். தனது தூய்மைவாதம் மற்றும் சமூக வாழ்க்கைமுறை, சுகாதாரம் ஆகியவை குறித்த மாறுபட்ட கண்ணோட்டத்தால் பிந்தைய விக்டோரியன் காலத்தின் ஓர் ஆளுமையாக விளங்கியதாக அவர் எழுதுகிறார்.

பெண்கள் குறித்த காந்தியின் பார்வை சிக்கல் மிகுந்ததாகவும் வழக்கத்துக்கு முரணானதாகவும் இருந்தது. ஆண்களை ஈர்க்கும் விதத்தில் பெண்கள் நடந்து கொள்வதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

நவீன சிகை அலங்காரம் மற்றும் ஆடைகளை காந்தி வெறுத்தார் என்று குஹா எழுதுகிறார்.

படத்தின் காப்புரிமை KEYSTONE/GETTY IMAGES
Image caption சரோஜினி நாயுடுவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்கினார் காந்தி

"தனது உடல் நலம் மற்றும் வலிமையை விடவும் நவயுகப் பெண்கள் நவீன வாழ்க்கை முறையை பின்பற்றுவதற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக," மனு காந்திக்கு எழுதிய கடிதம் ஒன்றில் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

`பர்தாவை விமர்சித்த காந்தி'

இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதையும் காந்தி விமர்சித்தார். அந்த ஆடையால் அவர்களுக்கு போதிய காற்றும் வெளிச்சமும் கிடைக்காமல் உடல் நலப் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் தொடர்ந்து நோய் உள்ளவர்களாக இருப்பதாகவும் காந்தி எழுதினார்.

ஆண்களுக்கு நிகரான உரிமையைப் பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று காந்தி விரும்பினார். மதுக் கடைகளுக்கு வெளியில் பெண்களை போராட காந்தி வலியுறுத்தினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption காந்தியின் போராட்டங்களில் பெண்கள் கணிசமாகப் பங்கேற்றனர்

தென்னாப்பிரிக்காவில் காந்தியின் போராட்டங்களில் பெண்கள் திரளாக பங்கேற்றனர். மேற்குலக நாடுகளில் பெண் அரசியல் தலைவர்கள் குறைவாக இருந்த காலகட்டத்தில் சரோஜினி நாயுடுவை காங்கிரசின் தலைவராக்கினார்.

பெண்கள் அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினாலும் குழந்தைகளை வளர்ப்பதையும் வீட்டைப் பராமரிப்பதையும் பெண்களே செய்ய வேண்டும் என்று காந்தி விரும்பினார்.

காந்தியை ஒரு பழமைவாதியாகவே கருத வேண்டும். ஆனால், அவர் வாழ்ந்த காலத்துடன் ஒப்பிட்டால், அவர் ஒரு முற்போக்குவாதி என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை.

இந்தியா 1947இல் சுதந்திரம் அடைந்தபோது, காந்தியின் இந்த பாரம்பரியம்தான் இந்தியாவுக்கு ஒரு பெண் அமைச்சரையும், பெண் ஆளுநரையும் கொடுத்தது என்று ராமச்சந்திர குஹா கருதுகிறார்.

பிரிவினையின்போது புலம் பெயர்ந்த கோடிக்கணக்கானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணிகளில் பெண்கள் ஈடுபட்டனர்.

அமெரிக்க பல்கலைக்கழகங்கள் பெண்களை தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்யும் முன்பு, இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு பெண் துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

1940களிலும் 1950களிலும் அமெரிக்காவுக்கு நிகரான அளவில் இந்தியாவிலும் பெண்கள் பொது வாழ்வில் இருந்தனர். காந்தியின் விசித்திரமான பரிசோதனைகளுக்கு மத்தியிலும் இதை அவரது முக்கியமான சாதனையாகக் கருத வேண்டும் என்று கூறுகிறார் குஹா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :