ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை தாமதமாவது ஏன்?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரைத்துள்ள நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

அரசியல் சாசனத்திற்குட்பட்டு முடிவெடுப்பேன் என்கிறார் ஆளுநர். அரசியல் சாசனம் என்ன சொல்கிறது?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை செப்டம்பர் 9ஆம் தேதியன்று நிறைவேற்றியது.

இந்தத் தீர்மானம் உடனடியாக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்படும் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ராஜீவ் வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பது குறித்து அரசியல் சாசனத்தின் 161வது பிரிவின் கீழ் தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், தமிழக அரசு இந்த முடிவை எடுத்தது.

படத்தின் காப்புரிமை DIPR
Image caption (கோப்புப்படம்)

கிட்டத்தட்ட ஒரு வாரம் கழிந்துவிட்ட நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பி, கருத்தைக் கேட்டிருப்பதாக சில தொலைக்காட்சிகளும் ஒரு நாளிதழும் கடந்த சில நாட்களாக செய்திகளை வெளியிட்டன.

இந்த நிலையில் சனிக்கிழமையன்று இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறது.

அதில், 7 கைதிகளை விடுவிக்கும் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை ஏதும் அளிக்கப்படவில்லை என்று மறுக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இந்த வழக்கு மிகச் சிக்கலானது என்பதால் சட்டரீதியான, அரசியல்சாசன ரீதியான, நிர்வாக ரீதியான விஷயங்களை ஆராய வேண்டியுள்ளது என்றும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், தீர்ப்புகள், சட்டக் குறிப்புகள் 14ஆம் தேதியன்றுதான் மாநில அரசிடமிருந்து தங்களுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இது தொடர்பான ஆலோசனைகள் தேவைப்படும் நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு, அரசியல் சாசனத்திற்குட்பட்டு நியாயமான முறையில் முடிவெடுக்கப்படும் என்றும் தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் அரசியல் சாசனத்தின் 161வது பிரிவைப் பயன்படுத்தி 7 பேரையும் விடுதலை செய்ய முடிவுசெய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு சொல்கிறது. அரசியல் சாசனத்தின் அந்த 161வது பிரிவு என்ன சொல்கிறது?

"ஒரு மாநிலத்தின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களில், சட்டத்திற்கு எதிராக குற்றம் புரிந்து தண்டிக்கப்பட்ட ஒருவரது தண்டனையைக் குறைக்க, விடுவிக்க, மன்னிப்பு அளிக்க, தற்காலிகமாக நிறுத்தி வைக்க, ரத்து செய்ய மாநில ஆளுநருக்கு உரிமை உண்டு" என்கிறது இந்தப் பிரிவு.

ஆனால், மாநில ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவையின் முடிவுகளையே செயல்படுத்துபவர் என்பதால், இந்த விவகாரத்திலும் மாநில அமைச்சரவையின் கருத்தை ஏற்றே அவர் செயல்பட வேண்டும்.

படத்தின் காப்புரிமை Getty Images

ராஜீவ்காந்தி கொலை வழக்கைப் பொறுத்தவரை, குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி அந்த வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்பட்ட வழக்கு என்பதால் தங்களது அனுமதி அவசியம் என்கிறது மத்திய அரசு. இதனை உச்சநீதி மன்றமும் ஏற்றுக்கொண்டுவிட்டது.

இதற்குப் பிறகு தொடரப்பட்ட ஒரு வழக்கில் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு 161வது பிரிவின் கீழ் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கலாம் எனக் கூறியது.

இதன் அடிப்படையில்தான் இந்த எழுவரையும் அரசியல் சாசனத்தின் 161வது பிரிவின் கீழ் விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

"இந்த விவகாரத்தில் மாநில அரசின் முடிவை ஏற்பதைத் தவிர, இனி ஆளுநர் செய்வதற்கு எதுவுமே இல்லை. ஆளுநர் உள்துறையைக் கேட்கலாம், சட்ட நிபுணர்களை ஆலோசிக்கலாம். ஆனால், 161ன் கீழ் செய்யப்படும் பரிந்துரையை ஆளுநர் ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என மாரு ராம் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது" என்கிறார் தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியின் தியாகு.

படத்தின் காப்புரிமை Getty Images

மாரு ராம் VS இந்திய யூனியன் என்ற வழக்கில் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் உள்ளடக்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியபோது, ஒரு குற்றவாளிக்கு விடுதலையளிக்கும்போது சட்டத்திற்குட்பட்டு விடுதலையளிக்க வேண்டும், பாரபட்சம் காட்டக்கூடாது என்று சொன்னதோடு, அரசியல் சாசனத்தின் 72வது பிரிவின்படி குடியரசுத் தலைவரும் 161வது பிரிவின்படி மாநில ஆளுநரும் அமைச்சரவை பரிந்துரையின்படி இந்த மன்னிப்பை வழங்க வேண்டுமென்று தெரிவித்தது.

"ஒவ்வோர் அரசும் தங்களுடைய ஆட்சியில் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்றுதான் நினைக்கிறார்கள். மக்களும்கூட அப்படியே கருதுகிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. சட்டத்தின் ஆட்சிதான் இங்கு நடக்கிறது. 161வது பிரிவின் கீழ் விடுதலையளித்தால், மாநில ஆளுநர் அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய சட்ட ரீதியாக இருக்கும் ஒரே வாய்ப்பு, மீண்டும் அமைச்சரவைகூடி தீர்மானம் நிறைவேற்றுவதுதான். அது மாநில அரசுக்கு அரசியல் தற்கொலையாக அமையும். ஆகவே அப்படிச்செய்யமாட்டார்கள். காலதாமதம் ஆனாலும் விடுதலை நடந்தே தீரும்" என்கிறார் தியாகு.

இந்த விவகாரம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் தன் கருத்தைத் தெரிவித்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, 7 பேரையும் விடுவிப்பதைத் தவிர ஆளுநர் வேறு விதமாக முடிவெடுக்க முடியாது என்றே கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை MARKANDEY KATJU..FACEBOOK

"நம்முடைய நாடாளுமன்ற ஜனநாயகம் பிரிட்டனைப் பின்பற்றியது. ஆளுநர் என்பவர் பிரிட்டனின் அரசரைப் போன்றவர். அரசியல் சாசன ரீதியாக அவர் தலைவரே தவிர, அவர் தம் விருப்பப்படி செயல்பட முடியாது. அமைச்சரவை முடிவின்படியே செயல்பட முடியும். ஷாம்ஷேர் சிங் Vs பஞ்சாப் மாநிலம் (1974) வழக்கில் 7 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இதைத் தெளிவாக்கிவிட்டது" என்கிறார் கட்ஜு.

இதை தொடர்ந்து மாரு ராம் vs இந்திய யூனியன் (1980), கேஹர் சிங் vs இந்திய யூனியன் (1988) வழக்குகளிலும் குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும் அமைச்சரவையின் முடிவுகளையே செயல்படுத்த வேண்டுமே தவிர, தங்கள் விருப்பப்படி முடிவெடுக்கக்கூடாது என்பது உச்ச நீதிமன்றத்தால் தெளிவாக்கப்பட்டுவிட்டது என்பதையும் மார்கண்டேய கட்ஜு சுட்டிக்காட்டியிருக்கிறார்.

2014ல் ஜெயலலிதா இந்த ஏழு பேரையும் விடுவிக்க முடிவுசெய்தபோது, அதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றம் சென்ற நிலையில், உச்சநீதிமன்றமும் அதற்கு எதிராக தீர்ப்பளித்தது ஏன்?

"அதற்குக் காரணம் இருக்கிறது. அந்தத் தருணத்தில் ஜெயலலிதா குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435-1வது பிரிவின் கீழ் இவர்களை விடுதலை செய்வதாக அறிவித்தார். அப்போதைய காங்கிரஸ் அரசை தர்மசங்கடத்திற்குள்ளாக்கும் நோக்கத்தோடு அப்படிச் செய்தார் என்றுகூடச் சொல்லலாம்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 435வது பிரிவின் கீழ் கைதிகளை விடுவிக்கும்போது, அந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்பட்ட வழக்காக இருந்தால் மத்திய அரசின் ஒப்புதல் அவசியம் எனக் கூறியது.

அப்போதே அவர் 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்திருந்தால், இந்தப் பிரச்சனை வந்திருக்காது. ஏனென்றால் 161வது பிரிவு என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அமைந்தது. அது மாநில அரசின் இறையாண்மை சம்பந்தப்பட்டது" என பிபிசியிடம் கூறினார் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியான ஹரி பரந்தாமன்.

படத்தின் காப்புரிமை Getty Images

கைதிகளுக்கு விடுதலையளிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்தால், அதில் நீதிமன்றம் குறுக்கிட முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இது தொடர்பாகவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இருக்கின்றன என்கிறார்கள் நிபுணர்கள். அதாவது, ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ தன் விருப்பப்படி இதில் முடிவெடுத்தால் அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியும்.

ஆனால், மத்திய அமைச்சரவை அரசியல் சாசனத்தின் 72வது பிரிவின்படியும் மாநில அமைச்சரவை 161வது பிரிவின்படியும் எடுக்கும் முடிவை, குடியரசுத் தலைவரும் ஆளுநரும் தன் விருப்பப்படி எடுக்கும் முடிவாக கொள்ள முடியாது என்கிறார்கள் அவர்கள்.

"இந்த விவகாரத்தில், மாநில அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஆளுநர் முடிவெடுத்தால், அது மாநில அரசின் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கும்" என்கிறார் ஹரி பரந்தாமன். அதே சமயத்தில் விரைவில் முடிவெடுக்காமல் தாமதப்படுத்தினால், பொதுமக்களின் எழுச்சி மூலமாக உருவாகும் அரசியல் நெருக்கடி ஆளுநரை ஒரு முடிவெடுக்கவைக்கும் என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :