வெற்றிகரமான காப்பர்-டி கருத்தடை முறை பெண்களிடம் பிரபலமாகாதது ஏன்?

காப்பர்-டி படத்தின் காப்புரிமை Thinkstock

கருத்தடைக்காக இந்தியாவில் பிரபலமாக இருக்கும் நடைமுறை கருத்தடை அறுவைசிகிச்சை. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கருத்தடை அறுவைசிகிச்சையே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதற்கு அடுத்த இடத்தில் கருத்தடை மாத்திரைகள் இருக்கின்றன. ஆனால், இந்த இரண்டைத் தவிர வேறு பல கருத்தடை முறைகள் இருந்தாலும், அவை புழக்கத்தில் அதிகமாக இல்லை.

ஐ.யூ.டி (Intra Uterine Device) எனப்படும் அகக் கருப்பை சாதனம் அளவில் மிகவும் சிறியது என்றாலும், பயன்படுத்துவதற்கு ஏற்றது. வட்டம், வலை, நான்கு கால் சிலந்தி போன்ற பல்வேறு வடிவங்களில் ஐ.யூ.டி கிடைக்கிறது.

T வடிவ ஐ.யூ.டி சாதனங்கள் இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் ஐ.யூ.டி என்பதைவிட காப்பர்-டி என்ற பெயரில் இது பிரபலமாக உள்ளது. பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட இதில் நூல் போன்ற அமைப்பு ஒன்றும் காணப்படும்.

மேற்கத்திய நாடுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஐ.யூ.டி, பெண்களின் கருப்பையில் பொருத்தப்படும். நிறுவனம் மற்றும் தரத்தைப் பொறுத்து இந்த கருத்தடை சாதனம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் வரை பயனளிக்கும்.

கருத்தடை உபாயங்களிலேயே மிகவும் சிறந்ததாக இது கருதப்படுகிறது. ஆனால் உலகம் முழுவதிலுமான பெண்களுக்கு காப்பர்-டி பற்றிய சரியான தகவல்கள் தெரியவில்லை.

உதாரணமாக, ஆசியாவில் 27 சதவிகித பெண்கள் ஐ.யூ.டி கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர். வட அமெரிக்காவில் 6.1%, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 2% பெண்கள் மட்டுமே இதைப் பற்றி அறிந்திருக்கின்றனர்.

கருத்தடை முறைகளில் சிறந்த சாதனமான ஐ.யூ.டியைப் பற்றி பெண்களுக்கு ஏன் அதிகம் தெரியவில்லை?

மார்க்கெடிங்கில் அதிக கவனம் செலுத்தவில்லை

அமெரிக்காவில் ஐ.யூ.டியை சந்தைப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை. பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகளைப் பற்றி பெருமளவில் விளம்பரம் செய்த மருந்து நிறுவனங்கள், அதிலிருந்து அதிக வருவாய் ஈட்டுகின்றன. எனவே மாத்திரைகளை ஊக்குவித்துவிட்டு, ஐ.யூ.டிகளை பாராமுகமாக நடத்துகின்றன.

ஏனெனில் ஐ.யூ.டிகளை ஒருமுறை பொருத்திக் கொண்டால், அது பல ஆண்டுகளுக்கு பயன்தரும். ஆனால் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடவேண்டும் எனும்போது, லாபம் கிடைக்கும் வழியைத்தானே வணிக நிறுவனங்கள் விரும்பும்?

லாப நோக்கற்ற மனித மேம்பாட்டு நிறுவனமான FHI 360 என்ற நிறுவனத்தில் பணியாற்றும் தொற்றுநோய் நிபுணர் டேவிட் ஹூபெசர் கூறுகையில், பல்வேறு நிறுவனங்களும் சந்தையில் பல வகையான மாத்திரைகளை விற்பனை செய்கின்றன. மாத்திரைகளின் ரசாயன கலவைகள் ஒன்றுபோல இருக்காது.

எனவே, தனது பொருளே சிறந்த கருத்தடை மாத்திரை என்று ஒவ்வொரு நிறுவனமும் கூறுகின்றன. 1988ஆம் ஆண்டில் சந்தையில் ஐ.யூ.டி. அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதை மார்கெடிங் செய்வதில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை.

ஐ.யூ.டி. தொடர்பான தவறான கருத்துகள்

ஐ.யூ.டி. தொடர்பான தகவல்கள் சரியாக தெரியாமல் இருப்பதுடன் வேறு பல காரணங்களும் இருக்கிறது. பாலியல் உறவை ஐ.யூ.டி. பாதிக்கும், அதிக வலி ஏற்படும், மற்றும் ஐ.யூ.டி. பயன்படுத்தினால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்பது போன்ற அடிப்படை ஆதாரமில்லாத வதந்திகள் உலாவுகின்றன.

இதுபோன்ற தவறான தகவல்கள் 19ஆம் நூற்றாண்டிலேயே பரப்பப்பட்டது. ஐ.யூ.டி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர், பலவிதமான மூலப்பொருட்களைக் கொண்டு ஆராய்ந்துக் கொண்டிருந்தார். ஆராய்ச்சிகளின்போது, பெண்களின் கருப்பையில் ரப்பர், கண்ணாடி மற்றும் தாதுப்பொருட்களால் உருவாக்கப்பட்ட அந்த சாதனங்கள் பொருத்தப்பட்டன.

படத்தின் காப்புரிமை BC/SCIENCE MUSEUM, LONDON

ஆனால், ஜெர்மனி மருத்துவர் அனஸ்ர்ட் கிரேஃபென்பர்க் கண்டுபிடித்த ஐ.யூ.டி தான்1920இல் முதன்முதலில் வெற்றிகரமாக உருவானது. அதற்கு ஜி-ஸ்பாட் என்று பெயரிடப்பட்டது.

அந்த சாதனம் முதலில் வலை போன்று இருந்தது. அது கருப்பையில் பொருத்தப்பட்டது. அவரது ஆராய்ச்சிகள் நடந்துக் கொண்டிருந்தபோதே, ஜெர்மனியின் நாஜிக்கள் அவரை சிறையில் அடைத்தனர்.

ஆனால் பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மார்க்ரேட் செங்கர், அமெரிக்கா சென்றுவிட்டார். பிறகு அவர் தன்னுடைய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். சீனாவின் 'ஒரு குழந்தை' திட்டத்தை வெற்றியாக்குவதற்கு ஐ.யூ.டி மிகவும் உதவியாக இருந்தது என்றால் அது மிகையாகாது.

இப்போது, சீனா பல்வேறு கருத்தடை சாதனங்களை உருவாக்கினாலும், அவற்றை உடலில் இருந்து நீக்க அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

1960இல் அமெரிக்காவில் 'டல்கோன் ஷீல்ட்' என்ற ஐ.யூ.டி சந்தையில் அறிமுகமானது. இது மருத்துவர் கிரேஃபென்வர்கின் சாதனத்தைப் போன்றே இருந்தாலும் அளவில் பெரியதாக இருந்தது.

கருத்தடை மாத்திரைகள் பக்கவிளைவு கொண்டவை

சிறந்த ஐ.யூ.டி தயாரிக்க வேண்டும் என்ற முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க, மறுபுறமோ இதை பயன்படுத்தும்போது நோய்த்தொற்று ஏற்படும் சாத்தியக்கூறுகளும் அதிகம் இருந்தது. விளைவுகள் எந்த அளவு மோசமாக இருந்தது என்றால், அமெரிக்காவில் 50 ஆயிரம் பெண்கள் ஐ.யூ.டி தயாரித்த நிறுவனத்தின்மீது வழக்கு தொடுத்தார்கள்.

தற்போதைய ஐ.யூ.டியின் வடிவம் மிகவும் சிறப்பானதாகவும், தாக்கம் கொண்டதாகவும் இருக்கிறது என்று கூறும் டேவிட், ஆனால் மக்களுக்கு இதைப்பற்றிய தகவல்கள் சரியாக சொல்லப்படவில்லை என்கிறார்.

மும்பையில் இருந்து மெல்பர்ன் வரை கோடிக்கணக்கான பெண்கள், காலையில் எழுந்ததுமே கருத்தடை மாத்திரைகளை சாப்பிடுகிறார்கள். அதுதான் அவர்களுக்கு கர்ப்பம் தவிர்ப்பதற்கான உறுதியான வழியாகவும், மனதில் அழுத்தம் ஏற்படாமல் பாதுகாப்பதற்கும் உதவுகிறது.

கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதால், கரு தரிப்பதற்கான வாய்ப்பு ஒரு சதவிகிதமாக குறைந்துவிடுகிறது. ஆனால் வழக்கமாக மாதத்தில் ஐந்து நாட்களாவது பெண்கள் கருத்தடை மாத்திரைகளை சாப்பிட மறந்துவிடுகிறார்கள். இதனால் அவர்கள் கருதரிப்பதற்கான வாய்ப்பு 9 சதவிகிதமாக அதிகரித்துவிடுகிறது.

ஒரு மதிப்பீட்டின்படி, கருத்தடை மாத்திரைகள் சாப்பிட்ட பின்னரும், ஆண்டொன்றுக்கு 9 லட்சத்து 60 ஆயிரம் பெண்கள் கரு தரிக்கின்றனர். நீண்ட காலத்திற்கு கருத்தடை மாத்திரைகளை சாப்பிடுவதால் பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன.

பொதுவாக, கருத்தடைகளின் எந்தவொரு வழிமுறையும், ஒருவர் திட்டமிட்டபடி நூறு சதவிகிதம் நடைமுறைபடுத்த முடிவதில்லை. ஆனால், ஐ.யூ.டியில் மட்டும் இந்த அபாயம் இல்லை. பத்தாண்டுகளில் எட்டு சதவிகித அளவுக்கு மட்டுமே கரு தரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஐ.யூ.டி இரு விதங்களில் பயனளிப்பதாக உள்ளது. கருப்பையில் விந்து வந்தடையும் இடத்திற்கு, ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் முந்திச் செல்கின்றன. ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் அதிகமாக இருப்பது விந்துவை விரைவில் அழித்து செயலற்றதாக மாற்றும் தன்மை கொண்டது. வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை ஐ.யூ.டி ஆயிரம் மடங்கு அதிகரிப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

படத்தின் காப்புரிமை BBC/SCIENCE MUSEUM, LONDON

ஐ.யூ.டியின் தாக்கத்தால், பெண்ணின் கருப்பையில் இருக்கும் முட்டையை ஆணின் விந்தணு வந்து அடைவதற்கு தடை செய்கிறது. இதைத்தவிர, தாமிரத்தால் செய்யப்பட்ட ஐ.யூ.டி சாதனமானது, விந்துக்களை முற்றிலும் அழித்துவிடுகிறது. எனினும், தாமிரத்தின் எந்த அம்சம் விந்தை அழிக்கிறது என்பது இதுவரை விடைகாண முடியாத புதிராக இருக்கிறது.

ஐ.யூ.டி பல்வேறு நன்மைகளை வழங்குவதாக இருந்தாலும், அதிலும் சில பின்னடைவுகள் இருக்கின்றன. ஆனால் அதன் நன்மைகளுடன் ஒப்பிடும்போது, இழப்புகள் ஒன்றுமே இல்லை என்று சொல்லலாம்.

ஐ.யூ.டி ஒரு பெண்ணுக்கு பொருத்தப்படும்போது, அது கருப்பையில் உள்ள சவ்வின் உதவியுடன் உட்செலுத்தப்படுகிறது. இதனால், எதாவது சிறிய அசெளகரியம் ஏற்படலாம் என்றாலும், இப்படி ஏற்படுவது மிகவும் அரிது. ஆயிரத்தில் ஒருவருக்கு பிரச்சனை ஏற்படலாம்.

படத்தின் காப்புரிமை BBC/SCIENCE MUSEUM, LONDON

சில சமயங்களில் நோய்தொற்று ஏற்படலாம். ஐ.யூ.டி சரியாக பொருத்தப்படவில்லை என்றால், கருப்பையில் கர்ப்பம் தரிப்பதற்கு பதில், கருக்குழாயில் கரு தரிக்கும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். இருந்தாலும், எதாவது பிரச்சனை ஏற்பட்டால், காப்பர்-டி எனப்படும் ஐ.யூ.டியை வெளியில் எடுப்பது மிகவும் சுலபமானதுதான்.

காப்பர்-டியை பொருத்திக் கொண்டால், வலி அதிகமாக இருக்குமோ என்ற அச்சம் பெண்களின் மனதில் இருக்கலாம். ஆனால் அந்த அச்சம் உண்மைக்கு புறம்பானது. ஐ.யூ.டி பொருத்தும்போது ஏற்படும் ஒரு மிதமான வலி, சற்று நேரத்தில் சரியாகிவிடும்.

பிரசவத்திற்கு பிறகு பெண்ணின் பிறப்புறுப்புகள் சற்று இளக்கமாகிவிடும் என்பதால், ஒருமுறையாவது பிரசவ அனுபவம் உள்ள பெண்கள்தான் காப்பர்-டி பொருத்தும்போது அதனால் ஏற்படும் வலியை சகித்துக்கொள்ள முடியும் என்று ஒரு காலத்தில் மருத்துவர்கள்கூட நம்பினார்கள்.

ஆனால் இந்த கருத்து சரியானதல்ல. இப்போது ஐ.யூ.டி. பொருத்துவதற்கு முன்பே மருத்துவர்கள் மயக்க மருந்தை கொடுத்துவிடுவதால், பெண்களுக்கு சிறிய அளவிலான வலி கூட ஏற்படுவதில்லை.

ஐ.யூ.டி பயன்படுத்துவது தற்போது ஊக்குவிக்கப்படுகிறது. இது சற்று செலவு அதிகமானது என்பதால் மக்கள் சற்று தயங்குகிறார்கள். ஆனால், பத்து ஆண்டுகள், கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தும் செலவுடன் ஒப்பிட்டால், காப்பர்-டியின் செலவு குறைவுதான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

இந்தச் செய்தி குறித்து மேலும்