ஆதார் அவசியம் என்றால் உங்கள் தனியுரிமை எப்படி பாதுகாக்கப்படும்?

  • விராஹ் குப்தா
  • உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்

ஆதார் அடையாள அட்டை தொடர்பாக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்திய சட்டத்தை எதிர்த்து கர்நாடக மாநில முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ். புட்டசாமி தொடுத்திருந்த வழக்குதான் தனிமனித அந்தரங்கத்துக்கு அரசியல் சட்டப் பாதுகாப்பு உண்டா என்பது குறித்த விவாதத்திற்கு வழிவகுத்தது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன நீதிமன்ற அமர்வு, தனியுரிமை தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை 2017ஆம் ஆண்டு வழங்கியது.

அதன்பின் இன்று ஆதார் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கோருவது சட்டத்துக்கு புறம்பானது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 142வது பிரிவின்கீழ், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவில் சட்டமாகக் கருதப்படுகிறது, ஆனால் தனியுரிமை குறித்த புதிய சட்டங்களை உருவாக்குவது பற்றி பேசப்படுகிறது. ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது மற்றும் அதன் சட்டப்பூர்வத்தன்மை குறித்து, ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு 38 நாட்கள் விசாரணை செய்தது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதில் பங்களித்த கே.டி.ஷா மற்றும் கே.எம். முன்ஷி ஆகிய இருவரும் செக் குடியரசின் அரசியலமைப்பின் அடிப்படையில் தனிநபரின் உரிமைகள் குறித்த மசோதாவை தாக்கல் செய்தனர். 1946 ஆம் ஆண்டில், முன்வைக்கப்பட்ட அந்த மசோதாவில் தனிநபரின் தனியுரிமையைவிட, குடும்ப அமைப்பின் தனியுரிமைக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டிருந்தது.

கூட்டுப் பொறுப்பை வலியுறுத்திய டாக்டர் பிம்ராவ் அம்பேத்கர். 1947 மார்ச் மாதம், திருத்தப்பட்ட மசோதாவை முன்வைத்தார். அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் அத்தியாயம் மூன்றில் தனியுரிமைக்கு தனிப்பட்ட அங்கீகாரம் வழங்கவில்லை.

1979 ல் இந்தியாவின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தத்தின் 17ஆம் பிரிவின்கீழ், தனியுரிமைக்கான உரிமையை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் வழங்கிய தனியுரிமை தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில் "அந்தரங்கத்துக்கான உரிமை" என்பது அரசியலமைப்பு குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் அங்கமே" என்று தெரிவித்திருந்தார்.

இந்தியச் சட்டங்களில் தனியுரிமை-பொதுச் சட்டம் (பிரிட்டன் சட்ட அமைப்பு) மற்றும் பிற சட்டங்களின் விதிகளின் கீழ், இந்தியாவில், தனிநபரின் தனியுரிமைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி:

  • தகவல் உரிமை சட்டத்தின்கீழ், ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் நபருக்கு வழங்க முடியாது.
  • ஒருவரின் தொலைபேசி உரையாடலை பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதற்கு விசாரணைக்குழுக்கள் உயர்நிலை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.
  • சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளின் டி.என்.ஏ சோதனை அல்லது மூளை மேப்பிங் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டுமானால், அதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும்.
  • பொதுமக்களின் வீடுகளிலும், அலுவலகத்திலும் சோதனை நடத்த வேண்டுமெனில், அதற்கு போலீசார் தங்கள் உயர் அதிகாரிகள் அல்லது நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டும்.

இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதும், அதை ஆராய்வதும் சட்டப்படி குற்றம்.

காணொளிக் குறிப்பு,

முதல் ஆதார் அட்டையை பெற்றது யார்?

ஆதார் திட்டத்தில் சட்ட முரண்பாடுகள்

ஆதார் தொடர்பாக இரண்டு முக்கிய விஷயங்களின் அடிப்படையில் விவாதங்கள் வைக்கப்படுகின்றன.

அமெரிக்க அரசால் அதன் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சமூக பாதுகாப்பு எண் (SSN) எஸ்.எஸ்.என், ஆதாரின் முன்னோடித் திட்டம் என்று கூறி ஆதாரை நியாயப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால் அந்த எண்ணை பெறுவது மக்களின் விருப்பம், எஸ்.எஸ்.என் வாங்கவேண்டும் என்று அமெரிக்க அரசு மக்களை கட்டாயப்படுத்தவில்லை. 1935 ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.என் தொடர்பாக அமெரிக்காவில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, பொதுமக்களின் தனியுரிமைகளும், அவர்களின் நலன்களுக்கும் முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2006 ஆம் ஆண்டு ஆதார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 2010இல் ஆதார் மசோதா சாதாரண வரைவு மசோதாவாக நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது அதிகாரபூர்வச் சட்டமாக மாறவேண்டுமானால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதற்கு ஒப்புதல் கிடைக்கவேண்டும். அந்த வரைவு மசோதாவை ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு, அரசின் கருத்துடன் வேறுபட்டது.

"ஆதார் எண் தொடர்பான தரவுகளை வேறு எவர் கையிலும் சிக்காமல் பாதுகாக்க வேண்டும், தனி மனிதர்கள் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைத்திருக்கப்பட வேண்டும்" என்று நாடாளுமன்ற நிலைக்குழு விரிவான அறிக்கை அளித்தது. பிறகு சட்டம் இயற்றப்படாமலேயே ஆதாரை அமலாக்கப்பட்டதால், பல்வேறு பொதுநலன் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

சில குறிபிட்ட அரசுத் திட்டங்களுக்கு மட்டும் ஆதாரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் அனுமதித்த நிலையில், 2016 மார்ச் மாதத்தில் காங்கிரஸ் அரசின் ஆதார் வரைவு மசோதாவை திரும்பப் பெற்ற தற்போதைய அரசு, புதிய வரைவு வாசகம் கொண்ட மசோதாவை, 'ஆதார் மசோதா-2016' என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா, தந்திரமான வகையில் பண மசோதா என்று வகைப்படுத்தப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பண மசோதாக்களுக்கு மக்களவை ஒப்புதலே போதுமானது. எனவே, மாநிலங்களவையில் கடுமையான எதிர்ப்பு இருந்தாலும், மக்களவையில் பெரும்பான்மை பலம் கொண்ட பா.ஜ.க அரசு, மசோதாவை நிறைவேற்றியது.

ஆதாரால் ஆபத்தா? அது எப்படி?

தனியார் நிறுவனங்கள் ஆதார் தரவுகளை அணுகமுடிவதால் ஆதார் திட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான புகார்கள் எழுந்தன. கிரிக்கெட் வீரர் தோனி உட்பட பல பிரபலங்களும் தங்கள் தரவுகள் கசிவதாக போலீசில் புகார் அளித்தனர்.

நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டப்படி, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India, UIDAI) யு.ஐ.டி.ஏ.ஐக்கு தனிநபர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்க உரிமை உண்டு, ஆனால் தனியார் நிறுவனங்கள் மற்றும் முகவர்களுக்கு இதற்கான உரிமையை எப்படி கொடுக்கமுடியும்?

125 பதிவாளர்கள் மற்றும் 556 பதிவு முகமைகள் மூலம் ஆதார் திட்டத்தை யு.ஐ.டி.ஏ.ஐ நடைமுறைப்படுத்தியது. இந்தியாவில் ஆதார் எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டால்கூட, ஆதார் சட்டம், ஐ.டி சட்டம் மற்றும் 2011ஆம் ஆண்டின் ரகசிய தகவல் தெரிவிப்போரை பாதுகாக்கும் சட்டத் திருத்தங்களின்படி, தனிநபர்களின் அந்தரங்க தகவல்கள் மற்றும் தரவுகளை ரகசியமாக வைத்துக்கொள்வது அவசியம், ஆனால் யு.ஐ.டி.ஏ.ஐ மற்றும் அரசு அதற்கான சட்டபூர்வ பொறுப்பை தட்டிக்கழிக்கின்றன.

தனியார் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை சரிப்பர்க்கும் வசதி தரப்படுவதால், தரவுகள் கசியும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில், அரசு ஏன் ஆதார் தகவல்களை ஆஃப்லைன் சரிபார்ப்பிற்கு மட்டுமே உரியது என்று கட்டுபடுத்தக்கூடாது?

ஆதாரின் அவசியமும் அதன் கண்காணிப்பு அமைப்பு

அரசின் நலத்திட்டங்களை தவறாக பயன்படுத்துவதை குறைப்பது, ஊழலை ஒழிக்கவேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான நோக்கத்திற்காகவே ஆதார் எண் திட்டதை அமல்படுத்த அரசு திட்டமிட்டது, ஆனால் அது அனைத்து துறைகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கூறுவதன் அவசியம் என்ன என்ற கேள்வியே பிரதானமானது.

பாஸ்போர்ட், வங்கி கணக்கு (ஜன் தன் கணக்குகளைத் தவிர), ஓட்டுநர் உரிமம், மொபைல் போன்ற பல சேவைகளில் அரசு மானியம் பெற முடியாது. பின்னர் ஏன் ஆதாரில் இவை அனைத்தும் இணைக்கவேண்டும் என்று அரசு வலியுறுத்துகிறது? அவற்றை சேர்க்க வேண்டும்? இந்த கேள்விக்கான விளக்கத்தை அரசு இதுவரை கொடுக்கவில்லை.

மத்திய அரசின் சமூக ஊடக மையத்தின் முன்மொழிவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. பின்னர் ஆதார் கண்காணிப்பு முறைமையை எப்படி நியாயப்படுத்த முடியும்?

போதுமான முன்னேற்பாடுகள் இல்லாமல் அமல்படுத்தியது மற்றும் முரண்பாடுகள்

ஆதார் அட்டை ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்கள் ஐந்து அடி கனமான சுவர்களுக்குள் பாதுகாப்பாக உள்ளதாக ஆதார் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறியிருந்தார்.

மறுபுறமோ, 2500 ரூபாயில் கிடைக்கும் கணினி மென்பொருள் மூலம் ஆதார் தகவல்களை பெறமுடியும் என்ற தகவல் வெளியாகி இந்திய மக்களை அதிர்ச்சிக்குளாக்கியது.

யு.ஐ.டி.ஏ.ஐ-இன் இன் 12 இலக்க அடிப்படை எண்ணை ரகசியமாக வைத்திருக்க, 16-இலக்க மெய்நிகர் ஐடி (வி.ஐ.டி) முறை அமல்படுத்தப்படுகிறது.

தனது ஆதார் எண்ணை டிராயின் தலைவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டு ஆதார் தகவல் பாதுகாப்பானது என்று சவால் விட்டதும், 'டிஜிட்டல் ஆதார் சண்டை' தொடங்குகிறது.

இந்திய மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கத் தொடங்கியபின், இது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துமா என்ற அச்சங்கள் பரவலாகியுள்ளன.

டிராயின் பரிந்துரை மற்றும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் அறிக்கையின்படி, பொதுமக்களுக்கு தங்களது தரவுகளின் மீது உரிமை இல்லை என்று கூறப்பட்டாலும், ஆதார் தரவுகள் கசிந்தால், அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு என்று ஆதார் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

முன்மொழியப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஆதார் தரவு பாதுகாப்பு மற்றும் தரவு கசிந்தால் ஏற்படும் சேதங்களுக்கு யு.ஐ.டி.ஏ.ஐ அமைப்புக்கு சட்டரீதியான பொறுப்பு உள்ளது என்ற ஏற்பாட்டை செய்யலாம். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதுபோன்ற தகவல் அறியும் உரிமை சட்டத்தை பற்றி ஆலோசிக்கலாம் என்று நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி, பரிந்துரை செய்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :