#HisChoice: இலக்கணம் மீறும் நவீன ஆண்களின் உண்மைக் கதைகள்

 • 21 செப்டம்பர் 2018

'பெண் என்பவள் பிறப்பதில்லை, விதைக்கப்படுகிறாள்' என்ற பிரபலமான வாசகம் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு தத்துவஞானி சிமோன் டி போவா எழுதிய மிகப் பிரபலமான 'தி செகண்ட் செக்ஸ்' என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம், சரித்திரம் முழுவதும் பெண்கள் எப்படி அணுகப்படுகிறார்கள் என்பதை படம் பிடித்து காட்டுகிறது.

சமூகத்திற்கும், அதன் தேவைகளுக்கும் போக்குகளுக்கும் ஏற்ப பெண்கள் தங்களை மாற்றிக் கொள்ளவும், வளைந்து கொடுக்கவும் வேண்டியிருப்பதை நாம் மறுக்கமுடியாது. பெண்கள் ஏன் மாறவேண்டும் என்பதற்காக எண்ணற்ற நியாயங்களும், கதைகளும், கற்பிதங்களும் சமூகத்தில் அங்கிங்கெனாதபடி எங்கும் விரவிக்கிடக்கின்றன.

புராணங்களும், இலக்கியங்களும் பெண்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், ஆண் எப்படி இருந்தாலும் சரி, பெண் என்பவள் சட்ட- திட்டங்களுக்கும், வரையறைகளுக்குள்ளும் அடங்கி நடப்பது அவசியம் என்று போதிக்கின்றன.

கணவன் சத்யவான் இறந்ததும், மனைவி சாவித்திரி எமனுடன் போராடி கணவனின் உயிரை மீட்டுக் கொண்டுவந்தாள் என்னும் கதை இந்தியாவில் பிரபலமானது. இதுபோல் பல 'கற்புக்கரசிகளை' சரித்திரம் முழுவதும் உதாரணம் காட்ட முடியும். அவர்களை வணங்கி அந்த பாரம்பரியத்தை இன்றைய பெண்களுக்கும் நினைவூட்டும் சம்பிரதாயங்கள் இன்றும் தொடர்கின்றன.

ஆனால், இதுபோன்ற 'கற்புக்கரசர்கள்' வேண்டாம், மனைவியின் உயிரை மீட்ட கணவர்களின் ஒரு உதாரணத்தைக்கூட நம்மால் நினைவுபடுத்த முடியவில்லை. வரலாற்றின் ஏடுகளிலும் அதுபோன்ற பதிவுகள் காணக்கிடைக்கவில்லை.

சாவித்ரியைப் போல கணவர்களுக்கு ஏன் உணர்வுகள் பொங்குவதில்லை?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெண்கள், ஆண்களுக்கு 'பாரமாக' இருக்கிறார்கள். எந்தவொரு ஆணாவது மனைவி இறந்ததும் உடன்கட்டை ஏறிய கதையை கேட்டதுண்டா? ஏனெனில் எல்லா நியாயங்களும், நீதிநெறிகளும், சட்ட- திட்டங்களும் பெண்களுக்கானது. அவற்றை உருவாக்கியவர்கள் ஆண்களே. இவை பெண்களை அழுத்தி வைப்பதற்காக உருவாக்கப்பட்டவை.

இந்தக் கதைகளில் பெண், ஆணை மீட்டு அழைத்துவருவாள். ஆனால் ஆண்கள், பெண்களை மீட்டு அழைத்து வருவதுமில்லை, அப்படி அத்திப் பூத்தாற்போல் ஒரு சம்பவம் நடைபெற்றாலும், சலவைக்காரரின் ஒற்றை வார்த்தையை மட்டும் கேட்கும் ஏகபத்தினி விரதனான கணவன், கற்புக்கரசி என்று சொல்லப்படும் மனைவியை காட்டுக்கு அனுப்பிவிடுவார்.

இதுபோன்ற 'விதிமுறைகள்' இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கும் உரித்தானது. பெண்களுக்கு எதிரான 'சதி'யை எதிர்த்து போராடும் இன்றைய பெண்கள், தங்கள் விருப்பத்திற்கு தைரியமாக வாழும் உண்மைக் கதைகளை பிபிசியின் #HerChoice என்ற சிறப்புத் தொடரில் வெளிகொணர்ந்தோம்.

#HerChoice தொடர் வெளியானபோது, வாசகர்களும், அலுவலகத்தில் சக ஆண் நண்பர்களும் இதைப் பற்றி விரிவான விவாதங்களை மேற்கொண்டனர். சரி, பெண்களுக்கு மட்டும்தான் சமூக அழுத்தங்கள் உள்ளனவா? "எங்களுடைய விருப்பங்களையும், மாறிவரும் இன்றைய நவீன யுகத்தில் நாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றியும் பேசுவது யார்? ஆண் என்றல் இப்படித்தான் என்று ஒரு வரையறைக்குள் இன்றைய ஆண்களை அடக்கிவிட முடியுமா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன".

இது போன்ற அடர்த்தியான கேள்விகளை பிபிசி ஆசிரியர் குழுக் கூட்டத்தில் விவாதித்தோம். யாரையும் எந்த வரையறைக்குள்ளும் அடைத்துவிடக்கூடாது; நவீன ஆண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களை பிரதிபலிக்கும் உண்மைக் கதைகளை வாசகர்கள் முன் வைப்பது என்று முடிவு செய்தோம். #HisChoice சிறப்புத் தொடர் உருவானதன் பின்னணியில் இருப்பது #HerChoice எழுப்பிய தாக்கங்களே.

இத்தொடரை காலமாறுதல்களின் ஒரு சிறிய குறியீடாகவே நாங்கள் உணர்கிறோம். ஆனால் யாருடைய வாழ்க்கையையும், சரி- தவறு என்று சொல்வதோ, பிரதிநிதித்துவப்படுத்துவதோ இத்தொடரின் நோக்கமல்ல.

ஆனால் கதைமாந்தர்களின் வாழ்க்கையின் சிக்கல்களை தெரிந்துகொண்ட பிறகு, அதை அவர்களுடைய கோணத்தில் இருந்து புரிந்துக் கொண்ட பிறகு, சரி-தவறு, நியாயம்-அநியாயம் என்ற முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.

#HisChoice சிறப்புத் தொடரில் ஆண்களின் உணர்வுச் சிக்கல், உடல் சிக்கல் மற்றும் சமூக ரீதியான சிக்கல் ஆகியவற்றை, அவற்றின் ஆழத்தை, தாக்கத்தை புரிந்து வெளிப்படுத்துகிறோம்.

#HisChoice தொடரில் வெளியாகவிருக்கும் உண்மைக் கதைகள் இதுவரை கேட்கப்படாத, கேள்விப்படாத கதைகளாக இருக்கலாம், உங்களுக்குள் அதிர்வை ஏற்படுத்தி, மாற்றத்திற்கான விதையை விதைக்கலாம்.

 • வீட்டு வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன்… நீ வேலைக்குப் போய் சம்பாதித்து வா என்று மனைவியை கம்பீரமாக வேலைக்கு அனுப்பும் கணவன்…
 • அதிகப் பணம் தேவை என்பதற்காக 'பாலியல்' தொழிலில் ஈடுபடும், நல்ல வேலையில் இருக்கும் ஒரு பட்டதாரி இளைஞனின் உண்மைக் கதை...
 • உரிய வயதில் திருமணம் நடைபெறவேண்டும், என்பது பெண்கள் மட்டுமே எதிர்கொண்ட பிரச்சனை. இது இன்று ஆண்களும் எதிர்கொள்ளும் சவால். மெத்தப் படித்து, நல்ல வேலையில் இருந்தும் திருமணமாகாத தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 வயது ஆணின் கதை…
 • மருதாணி வரைவதில் சிறுவயது முதல் இருந்த காதலை தொழிலாக மாற்றிக் கொண்ட ஆண் எதிர்கொண்ட சவால்கள்…
 • கட்டுப்பாடான குடும்பம். நண்பர்களுக்குத் திருமணமாகிறது, ஆனால் தனக்கு மட்டும் திருமணமாகவில்லை என்ற நிலையில் இயல்பான பாலியல் உணர்வுகளை பாலியல் தொழிலாளிகளுடன் இணைந்து எதிர்கொண்ட குஜராத் மாநில ஆணின் கதை...
 • முதல் காதலை மறக்கவே முடியாது, ஆனால் காதலித்த அண்டை வீட்டுப் பெண், பெண்ணல்ல என்று தெரிய வந்தபிறகு காதலனின் எதிர்வினை….
 • பத்திரிகையில் ஒரு விளம்பரத்தை பார்த்து, இந்த உதவியை செய்தால் என்ன தவறு என்ன என்று நினைக்கும் இளைஞனின் கதை. ஆனால் அந்த உதவியைப் பற்றி காதலியிடமோ அல்லது மனைவியிடமோ எப்போதுமே சொல்லக்கூடாது என்று விரும்பும் ஆண்…
 • காதல் திருமணம். அழகான குழந்தை… மணமுறிவு… மனைவி மறுமணம். ஆனால், மகளுக்காக மறுமணம் செய்யாமல் இருக்கும் தாயுமானவனின் கதை…
 • பாலியல் வன்முறை சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம், பாதிக்கப்பட்ட பெண்ணே குற்றம் சாட்டப்படுகிறார். குழந்தைகளை வளர்க்கும்போதே பெண்களை மதிக்கவேண்டும், சரி எது, தவறு எது என்று ஆண் குழந்தைக்கும் சொல்லி வளர்க்கவேண்டியது பெற்றோரின் கடமையல்லவா? இதுபற்றி ஒன்றரை வயது குழந்தையின் தந்தையின் மனோபாவம்…
 • நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அவரைவிட வயது குறைந்த நிக் ஜோனாசுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றபோது, சிலர் வாழ்த்து தெரிவித்தால், பலர் ஏன் அதை விமர்சிக்கிறார்கள்? திருமண உறவில் ஆணின் வயது பெண்ணை விட அதிகமாக இருக்கவேண்டியது கட்டாயமா? இதைப்பற்றிய தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் ஆண்….

போன்ற உண்மைக் கதைகள் கொண்ட பிபிசியின் #HisChoice சிறப்புத் தொடர், வார இறுதி நாட்களில் வெளியாகும்.

இந்த சிறப்புத் தொடர் உங்களை சிந்திக்கத் தூண்டும் ஓர் ஆக்கபூர்வமான தொடர். மற்றவர்களை பார்க்கும் உங்கள் கோணத்தை மாற்ற உதவும் தொடர் என்று உறுதியாக கூறுகிறேன்.

பிபிசியின் #HisChoice இந்திய கணவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைக் கதைகள்.

இவை 'நவீன இந்திய ஆண்கள்' பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், சவால்கள், அவர்களின் விருப்பங்கள், தெரிவுகள், அவர்களை மற்றவர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பவற்றைப் பற்றிய ஒரு புதிய பார்வையைக் கொடுக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :