முத்தலாக்: எத்தனை நாள் பெண்களை அடிமைப்படுத்த முடியும்?

படத்தின் காப்புரிமை Getty Images

மூன்று முறை தலாக் என்ற சொல்லை உச்சரிப்பதன் மூலம் முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை விவகாரத்து செய்ய வழி வகுக்கும் முத்தலாக் முறை, கடந்த சில ஆண்டுகளாக பலவிதமான சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்துவந்தது.

இதன் தாக்கம், இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிலும், உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய சமூகத்தினரிடையேயும் எதிரொலித்தது. ஜனநாயக முறையிலான முத்தலாக்கிற்கு எதிரான பெண்களின் போராட்டம், உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம், அரசாங்கம் மற்றும் அரசியல் தளங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

முத்தலாக் விவாகரத்து நடைமுறையை சட்டவிரோதமாக்கும் (திருமணம் உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2017ஆம் ஆண்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தை பற்றி தெரிந்துக் கொள்வதற்கு முன்பு, முத்தலாக் சட்டத்தின் பின்னணியைத் தெரிந்துக் கொள்வது அவசியமாகிறது.

பெண்களுக்கான நீதி மற்றும் சமத்துவம் பற்றிய கேள்விகள் இந்திய அரசியலில் அடிக்கடி எழுப்பப்படுவதுதான். இந்து, முஸ்லிம், கிறித்துவ பெண்கள் என யாராக இருந்தாலும் பெண்களின் முக்கியத்துவம் அரசியல் தளத்தில் தற்போது அதிகரித்துவருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

உடன்கட்டை ஏறுவது மற்றும் கைம்பெண் திருமணம் உட்பட பெண்கள் தொடர்பான விஷயங்கள் ஒரு காலத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டன. காலப்போக்கில் அவை இயல்பான நிகழ்வுகளாகிவிட்டன. கேரளாவின் சபரிமலை மற்றும் பிற ஆலயங்களுக்கு பெண்கள் செல்லலாமா கூடாதா என்பது போன்ற விவாதங்கள் இன்றும் தொடர்கின்றன.

ஆனால், ஆணாதிக்க நாட்டின் அரசியலில் முஸ்லிம் பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்வது உண்மைதான். பழைமையான மத குழுக்களின் சமூக மற்றும் அரசியல் மேலாதிக்கத்தின் காரணமாக, முஸ்லிம் பெண்களின் குரல் எப்போதுமே அழுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, இஸ்லாமிய புனித நூலான குர்ஆன் மற்றும் இந்திய அரசியலமைப்பிலும் கொடுக்கப்பட்ட உரிமைகளை முஸ்லிம் பெண்களுக்கு நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் போன்ற ஆண்களின் ஆதிக்கம் கொண்ட அமைப்புகள், முஸ்லிம் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளன.

மூன்று முறை தங்கள் மனைவியிடம் 'தலாக்' என்று ஒரே நேரத்தில் சொல்லி ஆண்கள் விவாகரத்து செய்ய வழிவகை செய்யும் இஸ்லாமிய வழக்கம் முத்தலாக்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதற்கு குர்ஆனில் அனுமதி இல்லை. இந்த வழக்கத்திற்கு எதிராக பல இஸ்லாமிய பெண்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அதற்கு முட்டுக்கட்டைகள் இட்டன.

நீதிமன்றமோ அல்லது அரசோ எங்கள் மதத்தில் தலையிட உரிமை இல்லை என்று அது வாதிட்டாலும், உண்மையில், முத்தலாக் நடைமுறை இஸ்லாமிய மதத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல் என்று சொல்வது மிகையாகாது.

ஆனால், முத்தலாக் மற்றும் ஹலலா போன்ற மனிதநேயத்திற்கும், இஸ்லாமிற்கும் எதிரான செயல்கள் நடத்தப்படும்போது அமைதியாக இருக்கும் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், முஸ்லிம் பெண்கள் தங்களுக்கான நீதியை கோரினால் அதற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

படத்தின் காப்புரிமை TAUSEEF MUSTAFA

முஸ்லிம் மதத்தினருக்காக செயல்படும் அதிகார உரிமத்தை, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திற்கு கொடுத்தது யார்? உண்மையில் இஸ்லாமின்படி, அல்லாவுக்கும் மனிதனுக்கும் இடையே நேரடி உறவு இருக்கிறது; அதில் இடைத்தரகர்களுக்கு இடம் இல்லை.

பல ஆண்டுகளாக முத்தலாக் நடைமுறை இந்தியாவில் வழக்கில் இருந்தாலும், அது இஸ்லாமிய நடைமுறைகளுடன் ஒத்துப்போவதில்லை. முத்தலாக் பற்றி ஷரியா சட்டத்திலோ, குர்ஆனிலோ குறிப்பிடப்படவில்லை.

தீவிர இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில், இடைவெளியின்றி, ஒரே கட்டமாக மூன்று முறை 'தலாக்' வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் அந்தத் தடை இருக்கவில்லை.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண்களும் இந்நாட்டு குடிமக்களே. இஸ்லாமிய மதநூலான குரானில் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்துடன், இந்த அரசியலமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் அடிப்படை உரிமைகளும் அவர்களுக்கு இருக்கிறது.

ஆனால், இஸ்லாத்தின் பாரம்பரிய முறைப்படி, ஆண்கள் தங்கள் மனைவியிடம் மின்னஞ்சல், வாய்மொழி அல்லது எந்த வடிவத்திலும் மூன்று முறை "தலாக்" கூறினால் விவாகரத்து ஆகிவிட்டது என பொருள்.

இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி குற்றம்.

படத்தின் காப்புரிமை Getty Images

தலாக் கூறி விவாகரத்து செய்வது அரசியலமைப்பிற்கு எதிரானது என இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், முஸ்லிம் பெண்களுக்கு தலாக் கூறி இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியே அனுப்பும் சம்பவங்கள் தொடர்கின்றன.

அதாவது இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையில் எந்தவித மாற்றத்தையும் முழுமையாக ஏற்படுத்தவில்லை.

எனவே, அவசர சட்டம் மூலம் முத்தலாக் நடைமுறைக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற 2018, செப்டம்பர் 19ஆம் தேதியன்று மத்திய அரசு முடிவு செய்தது.

திருமணம் உரிமைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் பா.ஜ.க அரசுக்கு இல்லாததால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவையின் அனுமதியும் பெறப்பட்டது.

ஆனால், கட்சிகளிடையே ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படாததால், மசோதா கிடப்பில் போடப்பட்டது.

உண்மையில் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு இந்த மசோதா, சட்டமாகியிருந்தால் அது இந்தியா போன்ற ஜனநாயக நாட்டின் பொன்னால் பொறிக்கப்பட்ட நாளாக இருந்திருக்கும்.

தற்போதைய இஸ்லாமிய பெண்கள் (திருமணப் பாதுகாப்பு) சட்டம், வாய் வார்த்தைகளால் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்தால், சம்பந்தப்பட்ட பெண்ணோ அல்லது அவரது குடும்பத்தினரோ, கணவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம்.

பிரச்சனை தீர்ந்துவிட்டால், வழக்கைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பையும் இந்த சட்டம் வழங்குகிறது. இதைத்தவிர, மனைவிக்கு இழப்பீடும் வழங்க வேண்டும். பிணை வழங்குவது உரியதாக இருக்கும் என்று மாஜிஸ்ட்ரேட் கருதினால், அதற்கான வழிவகையும் செய்யப்பட்டிருக்கிறது.

பிரச்சனை தீராவிட்டால், கணவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

சட்டம் இன்னமும் அமல்படுத்தப்படவில்லை என்றாலும், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்ததுமே, சட்டத்திற்கு எதிராக, பழமைவாத சக்திகளின் பிரசாரங்கள் தொடங்கிவிட்டன. முஸ்லிம்களுக்கு எதிராக சதி செய்யப்படுவதாக புலம்புகிறார்கள். சிறை தண்டனைக்கு அச்சப்பட்டால், தவறு செய்வதை நிறுத்தலாமே? ஏன் பெண்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள்?

படத்தின் காப்புரிமை EPA

விவாகரத்தே ஒரே முடிவு என்று அறுதியாக தோன்றினால், அல்லா கூறிய வழியில் இறுதியான பிரிவாக விவாகத்தை ரத்து செய்யலாமே? குர்ஆனையும் பின்பற்றமாட்டோம், இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் பின்பற்றமாட்டோம், நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று ஏதோச்சதிகார போக்கை யாருமே கடைபிடிக்கமுடியாது.

ஆனால் முஸ்லிம் ஆண்கள் இப்போதும்கூட திருந்தாவிட்டால், பலதார திருமணம் செய்துக்கொண்ட அல்லது வரதட்சணை வாங்கும் இந்துக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை அவர்களும் எதிர்கொள்ளவேண்டும். முதல் மனைவி இருக்கும்போது, இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளும் இந்து ஆணுக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

நாட்டில் எல்லா சட்டங்களையும் கடைபிடிக்க வேண்டியது குடிமக்களுக்கு அவசியமானது. சிறுபான்மையினர் என்ற போர்வையில் எத்தனை நாள் மறைந்துக் கொள்ள முடியும்? முஸ்லிம் பெண்கள் இன்று விழிப்புணர்வு பெற்று வருகின்றனர். குடும்ப விவகாரங்களில் பாதிக்கப்பட்டு, அழுத்தப்பட்டுக் கொண்டிருந்த பெண்களுக்கு நியாயம் வழங்க இந்த சட்டம் உதவியாக இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

இந்தச் செய்தி குறித்து மேலும்