திருமணம் மட்டுமே பெண்களின் வாழ்க்கையா? -தடைகளை தகர்த்த பெண்ணின் கேள்வி #beingme

பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் நான்காவது கட்டுரை இது.

இந்த சமூகத்தில் ஆளுமையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் என்று பல்வேறு சட்டதிட்டங்கள், வரையறைகள் என்று தனித்தனியே தீர்மானிக்கப்படுகிறது. இதைத்தான் நான் படிக்க வேண்டும், இதைத்தான் நான் செய்ய வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகள். இதில் கொஞ்சம் முரண்படும்போது நான் உடையத்தான் வேண்டி இருக்கிறது.

பெண் என்றாலே நிரந்தரமாக, எந்த பிரச்சனைகளும் இல்லாத clerical work செய்வதைதான் எனக்கு விரும்பி தரக்கூடிய பணியாக இருந்தது. அதைத்தாண்டி சுயமாக சுய தொழில் மேற்கொள்ளும் போது இடர்பாடுகள் அதிகமாகத்தான் இருந்தது. நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். கிராமத்திலும் சேராத பெருநகரத்திலும் சேராத தஞ்சை தான் என்னுடைய சொந்த ஊர்.

சமூக பணியில் முதுகலை பட்டம் பெற்று பதிமூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

முதுகலை படிப்பு மேற்கொள்வதே குதிரைக் கொம்பாக இருந்த நாட்களில் சமூக பணியில் முதுகலை படிப்பு என்பது சாதாரணமாக கிடைக்கவில்லை, சில வார அசாதாரண விரதத்திற்கு பின்னே கிடைத்தது.

கண்ணாடி கதவுகள்

சமூக பணித்துறை என்பது மலர்கள் போல மென்மையான பாதையில் அமையவில்லை. வேள்விகள் நிறைந்ததாகவே இருந்தது. என்னுடைய முதல் பணி சுனாமி நிவாரணம் மற்றும் வாழ்வாதார பணியாகும்.

படத்தின் காப்புரிமை erhui1979

இந்தப் பணி காலையில் ஒன்பது மணிக்கு சென்று மாலையில் ஐந்து மணிக்கு திரும்பக்கூடிய பணி கிடையாது. மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பும் நேரம் என்னுடைய பணி ஆரம்பமாகும். கால நேரமின்றிதான் இந்த வேலையை பார்க்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களுக்கு புரிய வைப்பது குதிரைக்கொம்பாக இருக்கும் பட்சத்தில் இந்த சமூகத்தின் பார்வை ஏளனம் நிறைந்ததாகத்தான் இருந்தது.

எல்லாவற்றையும் எல்லா நேரங்களிலும் புரிய வைப்பது என்பது இயலாத காரியம்தான், அதனாலே என்னுடைய சொந்த ஊரை தவிர்த்து மற்ற ஊர்களில் வேலை செய்தேன்.இப்படி பத்து ஆண்டுகள் நான் அரசு மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களில் வேலை பார்த்தேன். அதில் உயர் பதவி என்பது எட்டாக்கனியாகத்தான் இருந்தது.

நான் பத்தோடு பதினொன்றாக இருக்க விருப்பமில்லை, என்னை தனித்து அடையாளப்படுத்தவே விரும்பினேன்.

பெண்கள் இந்த சமூகத்தில் தனக்கென தனிமுத்திரையை பதிப்பது என்பது கண்ணாடி கதவுகளில் நடந்து செல்வது மாதிரிதான் இருந்தது.

தற்போது நான்கு ஆண்டுகளாக சுயமாக குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான உளவியல் நிறுவனம் நடத்தி வருகிறேன்.

இப்படி நான் என்னுடைய அனுபவங்களின் வருடங்களை கூறும்போதே என்னுடைய வயதினை மனவோட்டத்தில் கணக்கிட ஆரம்பித்து இருப்பீர்கள். இப்படி நீங்கள் யோசிக்காமல் இருந்தால் மட்டுமே ஆச்சரியம். பணி நிமித்தமாக பல நபர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அதில் என்னுடைய அனுபவங்களை பகிரும் போது பதிமூன்று வருடங்கள் அனுபங்களா? என்று ஆச்சரியத்துடன் பார்க்கும் உலகம் அடுத்தது அப்படியானால் உங்கள் வயது முப்பதிற்கும் மேல் இருக்குமே,உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?இல்லையெனில் ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என மகாபாரதத்தில் வில்வேந்தன் அர்ச்சுனனின் அம்புகள் போல் சரமாரியான கேள்விகள் என்னிடம் கேட்கப்படாமல் இல்லை.

ஆரம்பத்தில் இந்த கேள்விகள் என்னை பெரும் சங்கடத்துக்கு உள்ளாக்கியது என்றே சொல்ல வேண்டும். ஏன் கொஞ்சம் கலக்கலமும் கூடவே இருந்தது, ஆரம்பத்தில் அதை எதிர்கொள்ள தெரியாமல் தவித்தேன்.

துரத்தும் கேள்விகள்

நம்முடைய இந்தியாவில் பெண்ணின் திருமண வயது 21 ஆக இருக்கும் பட்சத்தில் முப்பதையும் கடந்து திருமணம் ஆகாமல் இருக்கும் என்னை ஆச்சரியமாகவும் ஏதோ குறை இருக்கிறதா என்று காண்பதையும் தாண்டி உங்கள் உணர்ச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துகிறீர்கள் என்று கூட கேள்வி கேட்பவர்களும் உண்டு.

ஊருக்கு ஊர் மனிதர்களின் பழக்க வழக்கங்கள் மட்டுமே மாறுபட்டதே தவிர கேள்வி கேட்கும் மனிதர்கள் எல்லா ஊர்களிலும் இருந்தார்கள்.

இதை நான் எப்படி எதிர்கொண்டு இருப்பேன்?... கண்டிப்பாக எல்லோருக்கும் எழக்கூடிய கேள்விதான் , உளவியல், சமூகபணி இப்படி இரண்டிலும் முதுகலை பட்டம் பெற்றாலும் இந்த மாதிரியான கேள்விகள் வரும்போது அபிமன்யு சக்கரவியூகத்தில் மாட்டிக்கொண்டு தவித்த நிலையில் தான் நானும் இருந்தேன்.

ஓர் ஆண் எத்தனை வயது வரை வேண்டுமானாலும் திருமணம் ஆகாமல் இருக்கலாம். ஆனால் அவன் சாதிக்க இந்த உலகம் கைக்கொடுக்கிறது. திருமணம் ஆகாமல் ஒரு பெண் தன்னுடைய வேலையில் சாதனை புரிய வேண்டும் என்று நினைக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் அத்தனை சறுக்கல்கள், கேளிக்கை பார்வைகள் தான் வந்துவிழுகிறது.

என் வாழ்க்கை பக்கங்களை பிறர் ஏன் முடிவு செய்ய வேண்டும் ?

அழுவதும் கவலைகொள்வதும் பெண்களின் இயல்பு கிடையாது என்பதை உணர்ந்த நான் அதிலிருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பதை முடிவு செய்தேன்.

பின் என்னுடைய சந்தோஷங்களையும் துக்கங்களையும் மற்றவர்களின் கேள்விகள் முடிவு செய்யக்கூடாது என்று தீர்மானம் எடுத்தேன்.

முதல் தகுதியாக நான் என்னை காதலிக்க ஆரம்பித்தேன், என்னுடைய விருப்பம் என்ன, என் இலக்கை அடைய நான் என்ன செய்ய வேண்டும் என்னுடைய வாழ்க்கையை நான் மட்டுமே சிறப்பாக வாழவும் என்னுடைய வாழ்க்கை பக்கங்களை என்னால் மட்டுமே சுவாரஸ்யமாக எழுதவும் முடியும் என்று தீர்மானம் செய்தேன்.

என்னுடைய இலக்கினை அடைய தடைகளை ஒதுக்கித் தள்ளி, சிறகுகள் கொண்டு பறக்க துவங்கினேன்; பறந்து கொண்டே இருக்கிறேன் வெற்றி கனியை பறிக்கும் உந்துதலோடு.

நான் சமூக பணி பயின்றதால் எனக்கும் என் சமுதாயத்தின் மீதான அக்கறை அதிகமாகவே உண்டு, பல இடர்களை கடந்து தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவியுள்ளேன். அதில் ஒரு பணியாக இன்று அழிந்து கொண்டு இருக்கும் தமிழர்களின் மரமான பனை விதை விதைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன்; பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான உளவியல் ஆலோசகராகவும் பணியாற்றி வருகி்றேன்.

இதற்காக நான் பெரிதாக விளம்பரம் செய்யவில்லை, சமூக பணி எனக்கு பிடித்த ஒன்று மனம் விரும்பி அதை மேற்கொண்டு வருகிறேன் எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி கேட்பவர்களுக்கெல்லாம் எனது லட்சியம் குறித்தோ கனவுகள் குறித்தோ கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை ஆனால் நான் மகிழ்ச்சியுடன் எனது பணியை செவ்வனே செய்து வருகிறேன்.

திருமணம் என்பது ஒருவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தது பெண்களுக்கும் தங்களது திருமணம் குறித்து முடிவு செய்ய அனைத்து சுதந்திரமும் உண்டு.

கேள்விகள் பல துளைத்தாலும், நமது இலக்கு குறித்து நாம் உறுதியாக இருத்தலும் அதற்கான உழைப்பை தருவதுமே நான் கொண்ட நோக்காக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியுடன் இருக்கிறேன்.

(சமூக பணியில் இருக்கும் தஞ்சாவூரை சேர்ந்த பெண் ஒருவரின் அனுபவங்களின் வெளிப்பாடே இந்தக் கட்டுரை. பெண்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் குறித்து பேசப்படும் இந்த #beingme தொடர் பிபிசி தமிழ் செய்தியாளர் விஷ்ணுப்ரியா ராஜசேகரால் தயாரிக்கப்பட்டது.)

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :