ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டு: இது இன்னொரு போஃபர்ஸ் ஊழலா?

ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டு: இது இன்னொரு போஃபர்ஸ் ஊழலா?

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகள். பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.)

பிரதமர் நரேந்திர மோதி தனது பேச்சுத்திறமை குறித்து மிகவும் பெருமைகொள்பவர். சிறந்த பேச்சாளராகவும் பாராட்டப்படுபவர். ஆனால் ரஃபேல் ஜெட் விமானங்கள் குறித்து முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஃபிரான்சுவா ஒலாந்த் வீசிய குண்டு குறித்து 48 மணி நேரங்களுக்கும் மேலாக மோதி காக்கும் மௌனம் காதைக் கிழிக்கிறது.

ரஃபேல் விமானங்கள் தயாரிக்க இந்தியக் கூட்டாளியாக அனில் அம்பானியின் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது இந்திய அரசின் பரிந்துரையால்தான் என்று ஒலாந்த் கூறியுள்ளார்.

"ரஃபேல் விமானங்களைத் தயாரிக்கும் டஸ்ஸோ நிறுவனம் தனது கூட்டாளிகளைத் தேர்வு செய்ததில் இந்திய அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை," என்று அரசியலில் அதிக முக்கியத்துவம் இல்லாதவரான மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்கள் திரும்பத் திரும்பக் கூறி வந்த கருத்தை இந்த செய்தி பொய்யாக்கியுள்ளது.

தங்கள் இந்தியக் கூட்டாளியாக டஸ்ஸோ நிறுவனம் யாரைத் தேர்வு செய்துள்ளது என்பது இந்திய அரசுக்குத் தெரியாது என்று கூறும் அளவுக்கு நிர்மலா சீதாராமன் சென்றார். நாக்பூரில் ரஃபேல் உற்பத்திக்கான அம்பானியின் தொழிற்சாலையை தொடங்கி வைத்தவர் அவரது அமைச்சரவை சகா நிதின் கட்கரி என்பதைப் பார்க்கும்போது அவர் கூறியதன் நம்பகத்தன்மை புரியும்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், நம்பமுடியாத கூற்றுகளும் அரசியலுக்காக உண்மைக்கு மாறானதைக் கூறுவதும் மோதி அரசின் செயல்பாடுகளில் ஓர் அங்கம். ஒரு வாரத்துக்கு முன்புதான், கடன் வாங்கிவிட்டு நாட்டைவிட்டே தப்பிய தொழில் அதிபர் விஜய் மல்லையா தம்மைச் சந்தித்தாகக் கூறியது உண்மையல்ல. ஏனெனில், தம்மைச் சந்திக்க தாம் அவருக்கு நேரம் ஒதுக்கவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருந்தார்.

அந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. ஆனால் நேரம் ஒதுக்கவில்லை என்பதால் பார்த்து பேசியதே நிகழவில்லை என்று மெல்லிய சட்ட நுணுக்கத்தைச் சாமர்த்தியமாகக் கூறி நிதி அமைச்சர் மகிழ்ச்சி கொள்ள நினைக்கிறார்.

இப்போதைய ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டின் மையம் போதிய சட்ட வழிமுறைகள் பின்பற்றப்படாமல், மோதி ஒப்பந்தம் பற்றி அறிவிப்பதற்கு சில நாட்கள் முன்னர் மட்டுமே பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியாளாராக பதிவு செய்துகொண்ட அம்பானியின் நிறுவனத்துக்கு போர் விமானங்கள் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதே.

பாரிஸ் பயணத்தின்போது மோதி அந்த அறிவிப்பை வெளியிட்டபோது அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரே வியப்புக்கு உள்ளானார்.

இந்தியாவின் பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்தை ஒதுக்கிவிட்டு, உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு உபகரண உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டஸ்ஸோ நிறுவனத்தை புதிதாக நிறுவப்பட்ட, முன் அனுபவம் இல்லாதா ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்துடன் கை கோர்க்குமாறு இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

எந்தக் கேள்வியும் எழுப்பாமல் டஸ்ஸோ நிறுவனமும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை DASSAULT RAFALE

பெரும்பாலும் தீவிரத் தன்மையுடன் குற்றச்சாட்டை முன்வைக்காத காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என்று மீண்டும் மீண்டும் கூறி வந்தது இம்முறை உண்மையாகிவிட்டது.

வலிமையான ஆதாரங்கள் எதையும் முன்வைக்காமல் மோதி அரசும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துக்கொண்டே இருந்தது.

முதலில் ரஃபேல் விமானங்களின் விலையை வெளிப்படியாகக் கூறுவேன் என்று கூறிய நிர்மலா சீதாராமன், ஒப்பந்தத்தின் ரகசியம் காக்க வலியுறுத்தப்பட்டுள்ள சரத்தை மேற்கோள் காட்டி, தாம் கூறியதில் இருந்து பின்வாங்கினார்.

ஊடகங்களில் இருக்கும் மோதி அரசின் துதி பாடிகளும் உண்மை என்னவென விசாரிக்காமலே அரசுக்கு நற்சான்று வழங்கினார்கள். "ஊழல் நிகழவில்லை ஆனால் ஒப்பந்தத்தில் சில முட்டாள்தனங்கள் உள்ளன," என்று சொன்னவர்களும் உண்டு.

சமரசம் செய்துகொண்ட இந்திய ஊடகத்தின் ஓர் அங்கம் இருந்தபோதும், இந்த ஊழல் மோதி அரசுக்கு களங்கத்தை உண்டாக்கியுள்ளது.

எதுவும் பேசாமல் அமைதி காப்பது மோதிக்கும் நல்லதல்ல. முன் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பும் ஊடகங்கள் மீது அனில் அம்பானியும் அவதூறு வழக்கு தொடர்ந்து வருகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஊடகங்களிடம் 5000 கோடி ரூபாய் வரை அவர் இழப்பீடு கோரியுள்ளார். கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களுக்கும் இந்த விவகாரம் குறித்து செய்து வெளியிடுவதை நிறுத்தி ஒதுங்கிக்கொள்ளுமாறு அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இனி ரஃபேல் விவகாரத்தில் அவிழப்போகும் அடுத்த முடிச்சு என்ன? திறன்வாய்ந்த பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிப்பதில் அனுபவம் மிக்க பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்திற்கு ரஃபேல் விமானங்களைத் தயாரிக்கும் திறன் இல்லை என்கிறது அரசு.

இதற்கு முன்பு பாதுகாப்பு அமைச்சராக இருந்த எதிர்க்கட்சியை சார்ந்தவர் (ஏ.கே.ஆண்டனி) இதை விரக்தியின் உச்சம் என்கிறார்.

மக்களின் வரிப்பணத்தின் பாதுகாவலன் என்று மோதி கூறிக்கொள்வதன் மீது இது தாக்கத்தை உண்டாக்கும். ரஃபேல் விவகாரத்தில் எதேச்சதிகாரத்துடன் மோதி தாமாகவே முடிவெடுத்தார். இப்போது ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டு அவரது சொந்த பிம்பத்தையும் பாதிக்கும்.

படத்தின் காப்புரிமை AFP

ரஃபேல் விவகாரம் வரவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் முக்கிய விவகாரமாக இருக்கும் என்று முக்கிய எதிர்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். மோதியும் அம்பானியும் சேர்ந்து இந்திய ராணுவத்தினர் மீது 1,30,000 கோடி ரூபாய் மதிப்பிலான துல்லிய தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறுகிறார் ராகுல் காந்தி.

"ராணுவ வீரர்கள் சிந்திய ரத்தத்தை அவமதித்து விட்டீர்கள். நீங்கள் செய்தது வெட்கக்கேடு. இந்தியாவின் ஆன்மாவை ஏமாற்றி விட்டீர்கள்," என சனியன்று நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார் ராகுல்.

ரஃபேல் விவகாரத்தில் பிரெஞ்சு ஊடகங்களின் மேலும் அதிகப்படியான செய்திகளுக்கு காத்திருங்கள். போஃபர்ஸ் ஆயுத பேர ஊழலைப் போலவே, ரஃபேல் ஊழலும் ஓர் இந்தியப் பிரதமரின் இறுதி ஆட்டத்தைத் தீர்மானிப்பதாக இருக்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :