நகர்ப்புற நக்சல்: கவலையளிக்கும் கைதுகளும் உச்ச நீதிமன்றத் தலையீடும்

படத்தின் காப்புரிமை GETTY / GETTY / FACEBOOK

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகள். பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.)

கடந்த ஆகஸ்ட் 28 ஆம் நாள் புனே காவல்துறை ஒரே நேரத்தில் நடத்திய தொடர் சோதனைகளில் முக்கிய மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். முன்னெப்போதும் இல்லாத வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோதியைப் படுகொலை செய்யவும், அரசாங்கத்தை வீழ்த்தவும் மாவோயிஸ்ட்கள் சதித் திட்டம் தீட்டியதாக புனே காவல்துறையினர் கூறி வந்த விவகாரம் கடந்த சில நாட்களாக நாட்டின் கவனத்தை ஈர்த்தது. இதற்கான ஆதாரம், மேற்கு மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஜனவரி 1ஆம் தேதி நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையில் தெரிய வந்ததாக புனே காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மகாராஷ்டிராவில் சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லக்கா, வெர்நான் கோன்சல்வேஸ், அருண் ஃபெரைரா மற்றும் வரவர ராவ் ஆகியோரது கைது நடவடிக்கையையும், பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி, சூசன் ஆபிரகாம் மற்றும் ஆனந்த் டெல்டும்டே ஆகியோரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளையும் தொடர்ந்து ஜூன் 6 ஆம் தேதியன்று வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், ஆங்கில பேராசிரியர் ஷோமா சென், எழுத்தாளர் சுதிர் தவாலே, வன உரிமை செயல்பாட்டாளர் மகேஷ் ரவுட், மற்றும் கைதிகள் உரிமை செயல்பாட்டாளர் ரோனா வில்சன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இது அரசியல் எதிரிகளின் மீதான திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்ற கருத்து பொதுவாக நிலவுவதால், நான்கு மாநிலங்களில் கூட்டாக மேற்கொள்ளப்பட்ட முக்கிய செயல்பாட்டாளர்களின் கைது நடவடிக்கை கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நரேந்திர மோதியை கொலை செய்ய திட்டமிட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

இது வன்முறையாளர்களுக்கு எதிரான வழக்கமான போலீஸ் நடவடிக்கை இல்லை என்பதால், முன்னெப்போதும் இல்லாத ஒரு நடவடிக்கையாக இது வர்ணிக்கப்படுகிறது. மேலும், இப்போது குறிவைக்கப்பட்டிருக்கும் ஐந்து பேரும் தொழிலாளர்கள், ஆதிவாசிகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் தலித்துகளின் உரிமைகளுக்கு ஆதரவாகப் போராடும் வழக்கறிஞர்கள் அல்லது பத்திரிகையாளர்கள்தான். அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள். அவர்களுக்கு எதிராக உறுதியான ஆதாரங்களோ அல்லது குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் எதுவுமோ இல்லை.

இந்த கைது நடவடிக்கைகள் ஜனநாயகத்துக்கான எதிரான, பேச்சு சுதந்திரத்தை நசுக்குகின்ற, ஒரு பய உணர்வைத் தூண்டுகிற செயல்களின் ஒரு வடிவமாகச் சொல்லப்படுகிறது. இது கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

இந்தக் கைது நடவடிக்கைகளும், டெல்லி, ராஞ்சி, மும்பை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் ஒன்பது பேர்களின் வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளும், அதிருப்தியாளர்களையும், அரசின் மனித உரிமை மீறும் செயல்களைக் குறை சொல்பவர்களையும் கொடுமைப்படுத்துகின்ற நோக்கத்தோடு செய்யப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் முற்றிலும் தெளிவற்ற, அற்பத்தனமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

மாவோயிசத்திற்கு அனுதாபம் இல்லாவிட்டாலும் கூட, கருத்து சுதந்திரம், நம்பிக்கை மற்றும் கருத்துகளை வெளிப்படுத்துகின்ற சுதந்திரம் என்பவை ஜனநாயகக் களத்தின் அடிப்படை உரிமைகளாகும். தவறு செய்யாதவர்களை, தவறுக்குத் துணை போகாதவர்களைக் கைது செய்வதென்பது ஜனநாயகத்துக்கு எதிரானது.

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தைக் கட்டுபடுத்துவதற்கு அரசாங்கம் இப்போது 'நகர்ப்புற நக்சல்' என்ற வார்த்தயைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது. உண்மையானவர்கள் என்றும் ஜனநாயகக் காவலர்கள் என்றும் முன்பு போற்றப்பட்ட செயல்பாட்டாளர்களும் சுய சிந்தனையாளர்களும் இப்போது கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதுமான நிலைமை இப்போது நமது நாட்டில் நிலவுகிறது.

தடை செய்யப்பட ஓர் அமைப்பிற்கு இறக்கம் காட்டுவது என்பது குற்றச் செயல் அல்ல என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் மீண்டும் தெளிவு படுத்தியிருக்கிறது. வன்முறையைத் தூண்டினால்தான் தவறு. இந்த வழக்கில் வன்முறையைத் தூண்டியதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

புனே காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள மனித உரிமை செயல்பாட்டாளர்கள் 'எல்கார் பரிஷத்' என்ற அமைப்புடன் தொடர்புடையர்வர்கள் அல்ல. மேலும், அந்த அமைப்பும் நக்சல்களுக்கு நிதி உதவி செய்ததில்லை.

மற்றவர்களால் சித்தரிக்கப்படுவதைப் போல இவர்கள் யாரும் அப்பாவிகள் இல்லை என்று புனே காவல்துறையினர் கூறுகிறார்கள். வரவர ராவ் முன்பு பல முறை கைது செய்யப்பட்டிருக்கிறார்; 2007 ஆம் ஆண்டு, ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கொன்சல்வேசும், சட்ட விரோத நடவடிக்கைகளுக்கான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட பெரைராவும் சிறையில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அப்பாவிகளா இல்லையா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று காவல் துறையினர் கூறுகிறார்கள்.

உயர் நீதிமன்றத்தின் தலையீடும், பின்னர் உச்ச நீதிமன்றத்தின் தலையீடும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றன. எதிர்ப்பைக் காட்டுவது என்பது ஜனநாயகத்தில் ஒரு பாதுகாப்புக் கருவி என்றும், எதிர்ப்பைக் கட்டுப்படுத்துகிறபோது அது வெடித்து விடும் என்றும் உச்ச நீதிமன்றம் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது.

ஒடுக்கப்பட்டவர்களின் முன்னணிப் பாதுகாவலர்களை முத்திரை குத்துவதும், அவர்களைத் துன்புறுத்துவதும், இந்தியாவிற்குப் புதிய விசயமோ அல்லது இதற்கு முன் இல்லாத ஒன்றோ அல்ல. மாவோயிஸ்டுகளுக்கு தூதுவர்களாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு சத்தீஸ்கர் மாநிலத்தின் தெற்கு பஸ்தர் பகுதி தாண்டேவாடா மாவட்டம் சமேலி கிராமத்தைச் சார்ந்த ஆதிவாசிப் பள்ளியின் ஆசிரியரும் செயல்பாட்டாளருமான சோனி சோரி என்பவர் டெல்லி காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அந்தப் பெண் சிறையில் இருந்தபோது சத்தீஸ்கர் மாநில காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக ஒரு செய்தியும் உண்டு. அவர் மீது தொடுக்கப்படிருந்த எட்டு வழக்குகளில் ஆறு வழக்குகளில் இருந்து அவரை விடுவித்து 2013 ஏப்ரல் மாதம் இந்திய நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.

அவர் விடுவிக்கப்பட்டதிலிருந்து, அரசாங்கத்திற்கும் மாவோயிஸ்டு கிளர்ச்சிகாரர்களுக்குமான பிரச்சனைகளில் பழங்குடிமக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்தும், குறிப்பாக 2000 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி மாலோமில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்த்தும், சிவில் உரிமைப் போராளியும் கவிஞருமான இரோன் சானு ஷர்மிளா 500 வாரங்களுக்கு மேலாக உணவோ தண்ணீரோ உட்கொள்ளாமல் போராட்டம் மேற்கொண்டார். தேசியக் குற்றப் பதிவுத் துறையின் தகவல்படி 2014 க்கும் 2017க்கும் இடையிலான காலகட்டத்தில், இந்தியாவில் பத்திரிகையார்கள் மீது சுமார் 204 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

பத்திரிகையாளர்கள் தவிர, ஊழலையும், உரிமை மீறலையும் வெளிக்கொண்டு வருபவர்களும், தகவல் அறியும் உரிமைச் சட்ட செயல்பாட்டாளர்களும் குறி வைக்கப்படுகிறார்கள். புனே காவல்துறையினரின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 28 ம் தேதியன்று கைது செய்யப்பட்டவர்களைப் பொருத்தமட்டில், சதி குற்றச்சாட்டு இந்தியாவிற்கு வெளியே நீள்வதாகச் சொல்லப்படுகிறது.

மத்திய மற்றும் கிழக்கிந்தியப் பகுதிகளின் காடுகளில் ஆண்டுக்கணக்காக கொரில்லா போர் நடத்தி வருகின்ற தடை செய்யப்பட மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பாரிஸ் நகரில் சந்தித்து வருவதாகவும், ரஷ்யா மற்றும் சீனாவில் ஆயுதங்கள் வாங்குவதாகவும் அவர்களின் கடிதப் பரிமாற்றங்கள் மூலம் தெரிய வருவதாகச் சொல்லப்படுகிறது.

மேற்கண்ட கடிதங்கள் ஆறு நகரங்களில் தாங்கள் நடத்திய சோதனைகளின் பொது கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் உண்மையில் நகர்ப்புற நக்சலைட்டுகள் எனவும் ஆனால் அவர்கள் தங்களை மனித உரிமை செயல்பாட்டாளர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் வெளியே காட்டிகொள்வதாகவும் புனே காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அதில் ஒருவர் இளைஞர்களை அரசாங்கத்திற்கு எதிராகத் தூண்டி விடுகிற வகையில், கூட்டாகத் தாக்கிக் கொலை செய்வது குறித்த ஒரு புகைப்படக் கண்காட்சியை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. மொத்தத்தில் அவர்கள் ஒரு பாசிஸ எதிர்ப்பு முன்னணியை உருவாக்குகிறார்கள்.

அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஒரு கடிதத்தின்படி, அடிக்கடி போராட்டங்களையும், குழப்பங்களையும் செய்து, அதன் மூலம் சட்ட ஒழுங்கைச் சீர்குலையச் செய்வதும், எதிர்வரும் மாதங்களில் அரசியல் கிளர்ச்சியை உண்டுபண்ணுவதும்தான் அவர்களது நோக்கம் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அவர்களது கைது ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதாலும், கைது நடவடிக்கையை எதிர்த்து சில முக்கியப் பிரமுகர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகியதாலும், அவர்கள் தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை நாட்டில் காவல்துறையின் ஒட்டுமொத்த அதிகார துஷ்பிரயோகம் என்றும் அரசுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டோரின் குரலை ஒடுக்கும் நடவடிக்கை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

செயல்பாட்டாளர்கள் பற்றி:

சுதா பரத்வாஜ்: 54 வயதான இவர் சுமார் 30 ஆண்டுகளாக சத்திஸ்கர் மாநிலத்தில் வசித்து வருகிறார். தொழிற்சங்கவாதியாக அறியப்படும் இவர், மனித உரிமைகளுக்காகவும், சமூக விடுதலைக்காகவும் தீவிரமாகப் பணியாற்றி வருபவர். சத்திஸ்கர் மக்கள் சிவில் விடுதலை சங்கத்தின் பொதுச் செயலாளரான இவர் இந்தியாவுக்கு வரும்போது இவரது வயது 11 தான்.

பிறப்பால் அமெரிக்கரான இவர், தனது 18 வது வயதில் அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்தார். கான்பூர் ஐ.ஐ.டியில் கல்வி பயின்றார். 1984 ல் தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, தனியார் நிறுவனகளின் நில ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடத் தொடங்கினார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption சுதா பரத்வாஜ்

வரவர ராவ்: இடதுசாரிக் கொள்கை வட்டாரத்தில், வரவர ராவ் என்பது ஒரு முக்கியமான பெயராகும். கவிஞரும், பத்திரிகையாளருமான ராவ், நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவராகவும், மாவோயிஸ்ட் கொள்கைகளைப் பரப்புபவராகவும் அறியப்படுகிறார்.

ஆந்திராவைச் சேர்ந்தவரான இவர், அரசின் ஸ்திரத் தன்மையைக் குலைப்பதற்கு சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மாநில அரசால் பல முறை கைது செய்யப்பட்டவர். இவர் 'விராசம்' என்ற பெயரில் புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கத்தைத் தோற்றுவித்தார். பின்னர் அது ஆந்திரப் பிரதேச மாநில அரசால் தடை செய்யப்பட்டது.

வெர்ணன் கோன்சல்வ்ஸ், அருண் பெரைரா: செயல்பாட்டாளர் வெர்ணன் கோன்சல்வ்ஸ் மும்பையின் துணை நகர்ப்புறப் பகுதியான அந்தேரியில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்தாகவும், மும்பையைச் சேர்ந்த இன்னொரு செயல்பாட்டாளரான அருண் பெரைரா தானேயை ஒட்டியுள்ள சராயில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் இதற்கு முன்பு 2007ஆம் ஆண்டு மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கவுதம் நவ்லகா: ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தோடு தொடர்புடைய நவ்லகா, டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஆவார். மேலும், இவர் ஒரு பொருளாதார மற்றும் அரசியல் வாரப் பத்திரிக்கை ஒன்றின் தலையங்க ஆலோசகராகவும் இருந்து வருகிறார். இவர், சுதா பரத்வாஜுடன் இணைந்து "சட்ட விரோத செயல்கள் (தடுப்பு) சட்டம், 1967" ஐ நீக்கக் கோரி கோரிக்கை வைத்தவர்.

படத்தின் காப்புரிமை SUKHCHARAN PREET
Image caption மாவோயிச சிந்தனையாளர் வரவர ராவ்

புத்தாண்டு தினத்தன்று, புனேவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பீமா கோரேகான் கிராமத்தில் தலித் ஒருவரின் நினைவு நாள் நிகழ்ச்சியின்போது கலவரம் வெடித்தது. இதன்பிறகு நகரில் நடந்த கூட்டத்தில், அம்பேத்கர் அமைப்பைச் சேர்ந்தவர்களும், இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஒன்று கூடினர்.

புனே காவல்துறையினரின் கூற்றுப்படி, 2017 டிசம்பர் கடைசி வாரத்தில், நாசிக் மற்றும் இயோலா பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் - பெரும்பாலும் தலித்கள், நினைவு நாள் நிகழ்ச்சி இடத்தை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர். பேரணியாகச் சென்றவர்கள் டிசம்பர் 31 ஆம் தேதி பேஷ்வாக்களின் இடமான புனே ஷனிவர்வாடா கோட்டையின் அருகில் பொதுக் கூட்டம் நடத்தக் கூடினர். எல்கார் பரிஷத் என்று அழைக்கப்பட்ட இந்த நிகழ்வில் 250 குழுக்கள் ஒன்று சேர்ந்ததாகவும், சுமார் 35,000 பேர் கலந்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

எல்கார் பரிஷத் என்பது இந்திய அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான மாவோயிஸ்ட்களின் சதியின் ஒரு அம்சமாகவே பார்க்கப்படுவதாக புனே காவல்துறையினர் கூறுகின்றனர். மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாகவும், இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்தி ஒழுங்கற்ற நிலையை ஏற்படுத்த முயன்றதாகவும் கூறி, கூட்ட அமைப்பாளர்கள் சிலரிடம் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர் அவர்களைக் கைது செய்திருக்கின்றார்கள்.

இது மாவோயிஸ்ட்களின் சதிக்கு எதிரான முறையான நடவடிக்கையா அல்லது வன்முறையில் ஈடுபடுபவர்களையும், அனுதாபிகளையும் வேறுபடுத்திப் பார்ப்பதில் ஏற்பட்ட தோல்வியா என்ற அடிப்படைக் கேள்வியை இந்தக் கைது நடவடிக்கை எழுப்பியுள்ளது.

செயல்பாட்டாளர்களோ அல்லது அறிவு ஜீவிகளோ சட்டத்திற்கு அப்பார்ப்பட்டவர்கள் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், இந்த ஆண்டு புனே அருகில் நடந்த கலவரத்தைத் தூண்டி விட்டதாக ஏற்கனவே இந்த செயல்பாட்டாளர்கள் மீது குற்றம் சுமத்திவிட்ட காரணத்தால், மகாராஷ்டிரா காவல்துறையினர் ஏராளமான ஆதாரச் சுமைகளை எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற கருத்துகள், வாழ்க்கையை சலிப்படையச் செய்வதாகவும், வளர்ச்சியைத் தடுப்பதாகவும் அமையும்.

படத்தின் காப்புரிமை Getty Images

புதிய கருத்துக்கான குரல்களை ஒடுக்குவதென்பது சரியானதல்ல என்பதையும், அது புதிய சிந்தனைகள் உருவாவதற்கான வழிமுறைகளைத் தடுத்துவிடும் என்பதையும் நிச்சயம் வரலாறு நமக்குக் காட்டும். வரலாற்று ரீதியாக, எல்லா சர்வாதிகார அமைப்புகளும், சர்வாதிகார ஆட்சிகளும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மிகைப்படுத்தப்பட்ட தோற்றத்தை உருவாக்குகின்றன.

எப்போதுமே, பாதுகாப்பு என்ற பெயரால் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது, ஒரு எழுச்சி ஏற்படாமல் அவை மீட்டெடுக்கப்பட்டதில்லை. நமது நாட்டுக்கான விடுதலைப் போரும், ஒரு நாடு கிளர்ச்சி செய்வதற்கான உரிமையின் அடிப்படையில்தான் அமைந்தது. அதற்காக, நமது முன்னோர்கள் அமைதி வழிகளைப் பின்பற்றினார்கள்.

அரசியலமைப்பு ஜனநாயக உத்தரவாதத்தின்படியும், அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாத்திட ஏற்படுத்தப்பட்ட அமைப்பின்படியும் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பின் கீழ், சமூக மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் களைவதற்கான ஒரு போராட்டத்தில் - அவர்களுக்கு எதிராக உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் இல்லாத நிலையில் - எப்படி ஒரு நாடு தனது குடிமக்களுக்கு எதிராக நியாயமற்ற வகையில் அடக்குமுறைகளை பிரயோகப்படுத்த முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.

கடுமையான அம்சங்களைக் கொண்ட "சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட செயல்பாட்டாளர்கள் மீதான விசாரணையை முன்னெடுக்கும் பொழுது, மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் விசாரணை அமைப்புகள் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தும் என்று நம்பப்படுகிறது. குடிமக்களின் அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராக இருக்கும் உச்ச நீதி மன்றம், கைது செய்யப்பட்டுள்ள செயல்பாட்டாளர்களின் உரிமைகளையும் - அதாவது உரிய ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் - பாதுகாக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :