உலகின் மிக அழகான விமான நிலையம் இதுதானோ?

  • 25 செப்டம்பர் 2018

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இந்தியாவின் 100வது விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி திங்களன்று திறந்துவைத்தார். சிக்கிம் மாநிலத்தைப் போலவே, அதன் விமான நிலையமும் மிகவும் அழகானதாக உள்ளது.

படத்தின் காப்புரிமை RAJIV SRIVASTAVA

இமயமலையில் அமைந்துள்ள சிறிய மாநிலமான சிக்கிமில், உலகின் மூன்றாவது உயரமான மலையான கஞ்சன்ஜங்கா அமைந்துள்ளது. திபெத், பூடான் மற்றும் நேபாளம் ஆகியவற்றை சிக்கிம் எட்டு மலைப்பாதைகள் வழியாக இணைக்கிறது.

மாநிலத்தின் முதல் விமானநிலையமான பாக்யாங், தலைநகர் கேங்டாக்கிலிருந்து சுமார் 30 கி.மீ (18 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. ஒரு மலைப்பகுதியிலிருந்து செதுக்கப்பட்ட, "பொறியியல் அற்புதம்" இந்த விமானநிலையம் என்று சிலாகிக்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை RAJIV SRIVASTAVA

இந்திய-சீன எல்லையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த விமான நிலையம், பாக்யாங் (Pakyong) என்ற கிராமத்தில், கடல் மட்டத்தில் இருந்து 4,500 அடி உயரத்தில் உள்ள மலைப் பகுதியில் 201 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை RAJIV SRIVASTAVA

இரு முனைகளிலும் ஆழமான பள்ளத்தாக்குகளுடன் 1.75 கிலோமீட்டர் நீள ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்தும் இடங்கள் இரண்டையும், முனைய கட்டடம் ஒன்றையும் கொண்டுள்ள இந்த விமான நிலையத்தை ஒரே சமயத்தில் 100 பயணிகள் பயன்படுத்த முடியும்.

ஒன்பது வருட காலமாக நடந்த இந்த விமான நிலைய கட்டட பணிகள், கடினமான நிலப்பரப்பு மற்றும் நிலையற்ற வானிலையால் "மிக்க சவாலுடனும், சிரமங்களை எதிர்கொண்டும் மேற்கொள்ளப்பட்டது" என்று இந்த விமான நிலையத்தின் ஓடு பாதையை கட்டமைத்த இந்திய நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை RAJIV SRIVASTAVA

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பருவ மழை பொழியும் சிக்கிம் மாநிலத்தின் வானிலை, கட்டுமானப் பணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்துள்ளது.

மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் உயர் நிலநடுக்கப் பகுதியான அங்கு பாறை சரிவுகளில் பணியாற்றுவது பொறியாளர்கள் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால்களில் ஒன்று.

படத்தின் காப்புரிமை RAJIV SRIVASTAVA

ஆழமான பள்ளத்தாக்குகளில் 263 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட தளத்தின் மீதுதான், ஓடுபாதை உட்பட முழு விமான நிலையமும் கட்டப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான "வலுவூட்டப்பட்ட" சுவர்களில் ஒன்று இது என பஞ்ச் லாய்ட் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை RAJIV SRIVASTAVA

அக்டோபர் நான்காம் தேதி முதல், பாக்யாங்கில் வர்த்தக விமான போக்குவரத்து தொடங்கும்.

பல சிகரங்கள், பனிப்பாறைகள் மற்றும் உயரமான ஏரிகள் என அற்புதமான இயற்கை பேரழகு கொண்ட தளங்களை தன்னகத்தே கொண்டுள்ள சிக்கிம் மாநிலத்தின் சுற்றுலாத் துறையை இந்த விமான நிலையம், மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: