புட்டசாமி: ஆதார் கட்டாயத்தை முதன் முதலில் எதிர்த்த 92 வயது முன்னாள் நீதிபதி

aadhaar
Image caption முன்னாள் நீதிபதி புட்டசுவாமி

பல்வேறு அரசு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து முதன் முதலில் நீதிமன்றத்தை நாடிய முன்னாள் நீதிபதி புட்டசுவாமி, தனது 92ஆம் வயதிலும் கவனமாக பதில் அளிக்கிறார்.

இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நியாயமானதாகவே தோன்றுகிறது என்று அவர் கூறுகிறார். நீதிபதி புட்டசுவாமி கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், ஆந்திரப் பிரதேச பிற்படுத்தபோட்டோர் ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

ஆதார் வழக்கில் மட்டுமல்ல அந்தரங்க உரிமையை அடிப்படை உரிமையாக அறிவிக்ககோரிய வழக்கிலும் முதல் மனுதாரர் இவர்தான்.

2012இல் ஆதார் வழக்கில் இவர் பொது நல வழக்கு தொடர்ந்தபோது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு வழக்குகளில் இவர் முக்கிய அங்கமாக இருப்பார் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

"நீதிபதி புட்டசுவாமி மிகவும் பணிவான மனிதர். அவர் எப்போதும் அப்படித்தான் நடந்துகொள்வார்," என்கிறார் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இவருடன் நீதிபதியாகப் பணியாற்றிய நீதிபதி ராமா ஜாய்ஸ்.

படத்தின் காப்புரிமை Getty Images

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், பீஹார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ள ராமா ஜாய்ஸ் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

பொதுநல வழக்கு தொடுக்கும் முன்பு இவருடன்தான் புட்டசுவாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.

"2010இல் டெல்லியில் இருந்து வந்த சிலருடன் தேநீர் அருந்திக்கொண்டே என் தந்தை பேசிக்கொண்டிருந்தார். ஒரு நிர்வாக ஆணையின்மூலம் குடிமக்களின் கைரேகைகளை அரசு வாங்கக் கூடாது," என்று அப்போதுதான் பேச்சு எழுந்தது என்கிறார் புட்டசுவாமியின் மகன் ஸ்ரீனிவாஸ்.

"எந்த வழியில் பொது நல வழக்கு தொடர முடியும் என்று அப்போது ஆலோசித்தார். இவர் நேராக உச்ச நீதிமன்றம் சென்று வாதிடவில்லை. வழக்கறிஞர்கள்தான் வாதிட்டனர்," என்கிறார் ராமா ஜாய்ஸ்.

இந்த வழக்கில் முதலில் வாதிட்ட வழக்கறிஞர்களில், புகழ்பெற்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒருவரான கோபால் சுப்பிரமணியனும் ஒருவர்.

"நான் வழக்கு தொடுத்தபோது அது நிர்வாக ஆணையாக மட்டுமே இருந்தது. ஆதார் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அரசியலமைப்பு பிரிவு 19க்கு எதிராக இருந்த அந்தச் சட்டத்தின் பிரிவுகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன," என்கிறார் பிபிசி இடம் பேசிய புட்டசுவாமி.

"ஆதார் சட்டம், சட்டத்தை மீறுவோரை கண்டறிய உதவும். ஆனால், நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு இதனால் பயனில்லை," என்று கூறும் புட்டசுவாமி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுதும் படிக்காமல் என்னால் அதுகுறித்து கருத்து சொல்ல முடியாது என்று கூறிவிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்