திருமணத்துக்கு வெளியே உறவு: "திருமணமான பெண்கள் மீதான வன்முறைக்கான தீர்வின் முதல் படி"

கிருபா முனுசாமி படத்தின் காப்புரிமை Kiruba Munusamy
Image caption கிருபா முனுசாமி

திருமணமான பெண்ணுடன் கணவரின் அனுமதி இல்லாமல் பாலுறவு கொள்வதை தண்டனைக்குரிய குற்றம் என்று கூறும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 497 செல்லாது என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த சட்டப்பிரிவு அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாக இருப்பதாகவும், பெண்களை ஆணின் உடைமையாக கருதுவதாகவும் கூறி வெளிநாடுவாழ் இந்தியர் ஜோசஃப் ஷைன் என்பவர் தொடர்ந்த வழக்கில் வியாழக்கிழமை இந்தத் தீர்ப்பு வெளியானது.

இந்த தீர்ப்பு மகிழ்ச்சியாகவும் வியப்பளிப்பதாகவும் இருந்தாலும் இத்தீர்ப்பு நடைமுறை சாத்தியமாக இன்னும் சில காலம் ஆகும் என்கிறார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், செயல்பாட்டாளருமான கிருபா முனுசாமி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பெண்களுக்கு சொத்துரிமை ஏற்கனவே சட்டப்படி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அது நடைமுறையில் இல்லை. திருமணத்தின்போது வரதட்சணை கொடுக்க முன்வரும் குடும்பங்கள், தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு சொத்தில் பங்கு வழங்காமல் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே வழங்குகின்றன. சட்டப்படி குற்றமாகக் கருதப்படும் தீண்டாமை, சாதியப் பாகுபாடு ஆகிய இன்னும் நடைமுறையில் உள்ளன. அதேபோல்தான் திருமணத்துக்கு வெளியேயான உறவு இனி சட்டப்படி குற்றமில்லை என்றாலும் நடைமுறைக்கு இது உடனடியாக வர வாய்ப்பில்லை," என்கிறார்.

"நம் சமூகத்தில் சட்டத்தைவிட, கலாசாரத்தை முன்னிலைப்படுத்தியே எல்லாம் அணுகப்படுகின்றன. ஆயுள் முழுதும் ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ ஒருவர் மீது மட்டுமே ஈர்ப்பு இருக்காது என்பது இயல்பு. ஆனால், குழந்தைகள், குடும்ப கௌரவம் என காரணம் கூறி விருப்பத்துக்கு மாறாக திருமண உறவில் நீடிக்கும்படி பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்தத் தீர்ப்பு திருமணமான பெண்கள் மீதான வன்முறை, மணமுறிவு செய்துகொண்ட பெண்கள் எதிர்கொள்ளும் கேள்விகள் ஆகியவற்றின் தீர்வுக்கான முதல் படியாக இருக்கும்," என்கிறார்.

படத்தின் காப்புரிமை A.D.Balasubramaniyan
Image caption இந்திய உச்ச நீதிமன்றம்.

"வேலைக்கு செல்லும் ஆண்களுக்கு கார் வாங்க வேண்டும், வெளிநாட்டுக்கு போக வேண்டும் போன்ற இலக்குகள் இருக்கும். அதனால் வீட்டில் இருக்கும் பெண்களை கண்டுகொள்ளாமல் போகும்போது, தன்னை யார் விரும்புகிறார்களோ அவர்கள் மீது அப்பெண்ணுக்கு ஈர்ப்பு உண்டாவது இயல்பு. ஆனால், அப்பெண்களுக்கு நெருக்கடி கொடுத்து மீண்டும் கணவருடன் வாழ வற்புறுத்துவதால்தான் சில சமயங்களில் குழந்தைகளையே கொல்லும் நிலைக்கு போகிறார்கள், " என கிருபா முனுசாமி கூறினார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சென்டர் பார் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் சமூக ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் பிரவீனா கோடோத், "கணவரின் அனுமதியுடன் திருமணத்துக்கு வெளியே உறவுகொண்டால் அது குற்றமில்லை என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் கணவரே கட்டாயப்படுத்தி தன் மனைவியை வேறு ஒருவருடன் உறவுகொள்ள வைத்தால் என்ன தண்டனை என்பது குறித்து கூறப்படவில்லை," என்கிறார்.

சட்டப்பிரிவு 497ஐ நீக்கிவிட்டால் திருமணத்தின் புனிதம் கெட்டுவிடும் என்று வரும் விமர்சனங்கள் குறித்து பேசிய அவர், "மதங்களின் கட்டமைப்புகள் ஆண்களை ஒன்றுக்கும் மேலான திருமணங்கள் செய்துகொள்ள அனுமதித்தன. ஆனால் பெண்கள் அதே கணவருடன் வாழ வேண்டும் என்றும் பணிக்கப்பட்டார்கள். உலகில் தற்போது பல்வேறு விதமான திருமண ஒப்பந்தங்கள் உள்ளன. அவை இருவருக்குமான உரிமைகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளன."

"ஆனால், இந்திய திருமணங்களில் புனிதத்துவம் என்பது உள்ளுறையாக உள்ளது. அவரவர் மதங்கள் சொல்கிறபடியே திருமணங்கள் நிகழ்கின்றன. கட்டாயமாக ஒருவருடன் வாழ்தல், ஒரு திருமணம் மட்டுமே செய்துகொள்ளுதல், ஒருவருடனே உறவு கொள்ளுதல் ஆகியவை இந்தியத் திருமணங்களின் ஓர் அங்கமாக உள்ளன. இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஆண்களுக்கு இல்லை. ஆனால் பெண்கள் தங்கள் விருப்பங்களை தாங்களே தெரிவு செய்துகொள்ளும் வரலாற்றுத் தருணத்தில் நாம் இப்போது இருக்கிறோம்," என்கிறார் பிரவீனா.

கேரளாவில் பல பாதிரியார்களால் ஒரு திருமணமான பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை குறிப்பிட்ட அவர், இத்தகைய சூழலில் அந்தப் பெண்ணும் திருமணத்தை மீறிய உறவு கொண்ட குற்றவாளியாக கருதப்படும் வகையில் சட்டம் இருந்திருந்தால், அவரும் தண்டிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் பிரவீனா.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்