அயோத்தி மேல்முறையீட்டை அரசமைப்பு சட்ட பெஞ்ச் விசாரிக்குமா: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை இந்திய உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தைச் சுற்றிலும் இருந்த இடத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது.

மசூதி இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் இடம் என்பதால் அதை அரசு கையகப்படுத்தக்கூடாது என்று 1994ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் டாக்டர் இஸ்மாயில் ஃபரூக்கி என்பவர் தொடர்ந்த வழக்கில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மசூதி தேவை இல்லை என்றும் திறந்தவெளி உள்ளிட்ட எந்த இடத்திலும் தொழுகை நடத்தலாம் என்று ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கூறியிருந்தது.

இவ்வாறு கூறப்பட்ட கருத்து, பிரச்சனைக்குரிய நிலத்தில் இரு பங்கை இந்துக்களுக்கும் ஒரு பங்கை இஸ்லாமியர்களுக்கும் பிரித்து வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தெரிந்தோ தெரியாமலோ வழிவகுத்தது என இஸ்லாமியர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

எனவே உயர் நீதிமன்றத் தீர்ப்பு மீதான மேல் முறையீட்டை மீண்டும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வே விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

எனினும் 1994இல் உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துக்கும், 2010இல் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள், வாதங்கள் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதால் அந்தத் தீர்ப்பின் மேல் முறையீட்டை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வே விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

வரும் அக்டோபர் 29 முதல் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தரப்பில் இந்த வழக்கின் தீர்ப்பு 2019 மே மாதத்துக்கு முன்பு வழங்கப்பட்டு, அது ஒருவேளை இந்துக்களுக்கு அது பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான சூழலைப் பொது தேர்தலில் உண்டாக்கலாம் என்பதால், ஜூலை 2019க்கு மேல் தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த வழக்கை ஒரு நிலப் பிரச்சனையாக மட்டுமே விசாரிக்கிறோம் என்று அப்போது நீதிமன்றம் கூறியிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்