பெண்களுக்கான பியூட்டி பார்லர் நடத்தும் ஆணின் கதை #HisChoice

உத்தராகாண்ட் மாநிலத்தின் ரூர்கி போன்ற ஒரு சிற்றூரில் பெண்களுக்கான பியூட்டி பார்லர் திறந்த இரண்டாவது ஆண் நான்.

பெண்களுக்கான பியூட்டி பார்லர் நடத்தும் ஆண் நான் என்பது அனைவருக்கும் வியப்பு ஏற்படுத்துகிறது. பெண்கள் செய்யும் இந்த வேலையை, ஒரு ஆண் செய்வது அவர்களின் புருவங்களை உயர்த்த செய்யும், பார்க்கும் கோணம் மாறும்.

உற்றார்-உறவினர், அறிந்தவர்கள்-தெரிந்தவர்கள் என அனைவரும் என்னை வித்தியாசமாக பார்த்தார்கள், மனதிற்கு தோன்றியபடி பேசினார்கள்.

வாடிக்கையாளர்களுக்கு என் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதும், அழகுணர்ச்சியிலும், அலங்காரம் செய்வதிலும் எந்தவொரு பெண்ணுக்கும் எந்தவிதத்திலும் நான் குறைந்தவன் அல்ல என்பதையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

என்னுடைய பார்லருக்கு வரும் பெண்களின் கணவர், சகோதரன் அல்லது தந்தை, அலங்காரமோ அல்லது வேறு திருத்தங்களோ செய்யப்போவது ஒரு ஆண் என்று தெரிந்ததும், திரும்ப அழைத்துச் சென்று விடுவார்கள்.

காரணம்? ஒரு பெண்ணுக்கு பார்லரில் செய்யப்படும் அலங்காரம், புருவம் திருத்துவது, முடி வெட்டுவது, பேஷியல் செய்வது போன்றவற்றை ஒரு ஆண் செய்கிறான் என்பதுதான்.

வெறும் புருவம் திருத்துவதற்கு கூட என்னை பெண்கள் அனுமதித்ததில்லை. 8X10 அளவுள்ள ஒரு அறையில் ஒரு ஆண், அவர்களின் அருகில் நின்று, அவர்களை தொட்டு வேலை செய்வது அசெளகரியமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

எனக்கும் சிலவிதமான தயக்கங்கள் இருந்தன. அலங்கார கலையில் நிபுணராக இருக்கும் ஒரு பெண்ணிடம் தங்கள் மனதில் இருப்பதை சொல்வதைப் போல், அலங்கார கலை நிபுணரான ஒரு ஆணிடம், பெண்கள் வெளிப்படையாக பேசுவார்களா என்ற தயக்கமும் இருந்தது.

ஆனால் இதுபோன்ற பல கேள்விகள் என் மனதில் இருந்தாலும், என் மனதுக்கு பிடித்த அலங்காரக் கலையையே என்னுடைய தொழிலாக செய்ய விரும்பினேன். அதற்கான சந்தர்பம் வரும்போது அதை ஏன் தவிர்க்க வேண்டும்?

பிபிசியின் #HisChoice இந்திய கணவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைக் கதைகள்.

இவை 'நவீன இந்திய ஆண்கள்' பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், சவால்கள், அவர்களின் விருப்பங்கள், தெரிவுகள், மற்றவர்கள் அவர்களை எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு புதிய பார்வையைக் கொடுக்கும்.

அலங்கார கலையில் எனக்கு எப்படி விருப்பம் ஏற்பட்டது? என் சகோதரியின் திருமணத்தின்போது, கையில் மருதாணி வைப்பதற்காக வந்தது ஒரு இளைஞன்.

அந்த இளைஞன் போட்ட மருதாணி டிசைன் மனதை கொள்ளைக் கொண்ட அற்புதமாக இருந்தது. பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டினார்கள்.

அந்த நிகழ்வுதான் என் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது, அந்த மருதாணியின் டிசைன் என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.

விளையாட்டுத்தனமாக மருதாணி போடும் கூம்பு வடிவ 'கோன்' செய்ய கற்றுக் கொண்டேன், காகிதத்தில் என் கைவண்ணத்தை காட்டினேன். பிறகு, பொழுதுபோக்காக குழந்தைகளின் கைகளில் 'மெஹந்தி' போட்டேன்.

என் வீட்டில் இதுபற்றி தெரியவந்ததும், ஏச்சும் பேச்சும் வசவுகளும் கிடைத்தன.

பெண்ணைப் போல நடந்துக் கொள்ள வெட்கமாக இல்லையா என்று அப்பா மிகவும் கடுமையாக திட்டினார். ராணுவத்தில் பணிபுரிந்த அப்பா, நானும் அவரைப் போலவே ராணுவச் சேவைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினார். எனவே, அவருக்கு என்னுடைய விருப்பம் கோபத்தை ஏற்படுத்தியது நியாயமே.

ஆனால், எனக்கு ராணுவத்தில் பணியாற்றவோ, வேறு எந்த வேலைக்கு செல்லவோ விருப்பம் இல்லை.

இதற்கிடையில், ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தபோது, பெண்களின் கைகளில் மருதாணி போட்டுவிட்டேன். நான் போட்ட டிடைன் அனைவருக்கும் பிடித்திருந்தது. எனக்கு 21 ரூபாய் கொடுத்தார்கள்.

வாழ்க்கையில் நான் முதன்முதலில் சம்பாதித்த பணம் அது. என்னுடைய இந்த கலையுணர்வை உடன்பிறந்தவர்கள் உணர்ந்துக் கொண்டார்கள். ஆனால் அப்பாவால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் என்மீது கோபத்திலேயே இருந்தார்.

அப்பாவின் கோபத்தை தாங்க முடியவில்லை, அவருடைய வார்த்தைகளை மீற முடியாமல், ஹரித்வாரில் ஒரு வேலையில் சேர்ந்தேன். காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை பார்க்கும் வழக்கமான அலுவலக வேலை அது.

ஒரு ஆண் செய்யக்கூடிய வேலையை செய்கிறேன் என்பது, குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. என் மனதில் 'நீறு பூத்த நெருப்பாக' கனன்றுக் கொண்டிருந்த மருதாணி வரையும் கலையின் விருப்பத்தை நீருற்றி அணைக்கவே முடியவில்லை.

நான் பார்க்கும் அலுவலக வேலையால் சுமாரான சம்பளமும், வேலை பார்க்கிறான் என்ற மதிப்பும் கிடைத்தது என்றாலும், என் மனதிற்கு பிடிக்காத வேலையாகவே அது இருந்தது.

இதற்கிடையில், நோய்வாய்ப்பட்ட அப்பாவின் எதிர்பாராத மரணம் வாழ்க்கையையே புரட்டி போட்டது. குடும்ப பொறுப்பு முழுவதும் என் தோளில் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

குடும்ப பொறுப்பு எனக்கு புதிய வாய்ப்பை திறந்துவிட்டது. குடும்பத்தின் தேவைகளுக்காக நான் அதிகம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம். எனவே, அலுவலக பணி முடிந்த பிறகு, திருமணங்களுக்கும், சுப நிகழ்ச்சிகளிலும் 'மெஹந்தி' போடுவதற்கு சென்றேன்.

அலுவலகத்தில் மாதம் 1.500 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன். அதோடு, கூடுதலாக மருதாணி இடும் பணியால் மாதம் 500 ரூபாய் சம்பாதித்தேன்.

மருதாணி இடும் தொழிலில் கிடைத்த பணம் குடும்பத்திற்கு தேவையானதாக இருந்ததால், அப்போது வீட்டில் இதற்கு எதிர்ப்பு கிளம்பவில்லை.

என்னுடைய சக பணியாளர் ஒருவர், அலுவலக நேரத்திற்கு பிறகு, தனது மனைவியின் 'பியூட்டி பார்லர்'இல் மனைவிக்கு ஒத்தாசையாக இருக்கிறார் என்பதையும், இருவரும் நன்றாக சம்பாதிக்கிறார்கள் என்றும் தெரிந்துக் கொண்டேன்.

அதற்கு பிறகுதான், நானும் ஏன் பியூட்டி பார்லர் திறக்கக்கூடாது என்ற கேள்வி என் மனதில் தோன்றியது.

ஆனால் இதுபற்றி குடும்பத்தினரிடம் பேசியபோது யாரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பெண்கள் செய்யும் வேலையில் ஆண்கள் ஈடுபடுவது கெளரவத்திற்கு இழுக்கானது என்ற எண்ணமே குடும்பத்தினரின் மறுப்புக்கு அடிப்படையான காரணமாக இருந்தது.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்ற பழமொழிக்கு ஏற்ப, அலங்கார கலை மீது எனக்கிருந்த உள்ளார்ந்த விருப்பம் இறுதியில் வெற்றி பெற்றது.

என் ஒன்றுவிட்ட சகோதரி (மாமாவின் மகள்) பியூட்டி பார்லரில் வேலை கற்றுக் கொண்டிருந்தாள். நான் அவளிடம் இருந்து வேலை கற்றுக் கொள்ளத் தொடங்கினேன்.

பிறகு நாங்கள் இருவரும் சேர்ந்து பியூட்டி பார்லர் தொடங்கினோம். ஆரம்ப காலத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும், அவற்றை ஒன்றுவிட்ட சகோதரியின் உதவியாலே சமாளித்தேன்.

பார்லரின் என்னுடன் ஒரு பெண்ணும் இருந்தது, வாடிக்கையாளர்களின் தயக்கத்தை குறைத்தது.

முதலில், ஒரு சிறிய அறையில், நடுவில் திரைச்சீலை போட்டுதான் பார்லரை ஆரம்பித்தோம். ஒருபுறத்தில் ஒன்றுவிட்ட சகோதரி பெண்களுக்கு 'வேக்சிங்' செய்வார், மறு பகுதியில் நான் புருவம் திருத்துதல் மற்றும் மேக்கப் செய்வேன்.

காலம் செல்லச்செல்ல என்னுடைய செயல்பாடுகளும், அனுபவமும் என் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

திருமணத்திற்கு பெண் பார்க்கத் தொடங்கியபோது கேள்விக்கணைகளை மீண்டும் எதிர்கொள்ள நேர்ந்தது. இந்த வேலையை ஏன் தேர்ந்தெடுத்தாய்? என்ற கேள்வி மீண்டும் ஒருமுறை என்னை பதம் பார்த்தது.

ஆனால் 'இது எனக்கு பிடித்த வேலை, இட்ஸ் மை சாய்ஸ்' என்ற என்னுடைய பதில் அன்றும், இன்றும் என்றும் மாறவேயில்லை. திருமணம் ஆகிவிட்டது.

அதன்பிறகு, இன்று வரை என் மனைவி என்னுடைய வேலையை பற்றி கேள்வி எழுப்பியதே இல்லை.

என்னைவிட பத்து வயது குறைந்த மனைவியால் என்னிடம் கேள்வி கேட்க முடியவில்லை.

ஆனால், திருமணத்திற்கு பிறகு மனைவியை என்னுடைய பியூட்டி பார்லருக்கு அழைத்துச் சென்று வாடிக்கையாளர்களையும், பணியாளர்களையும் அறிமுகப்படுத்தினேன். அவளுடைய மனதில் எந்தவித சந்தேகமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று விரும்புகிறேன்.

13 ஆண்டுகளில் 8x10 என்ற அளவில் இருந்த எனது பியூட்டி பார்லர் தற்போது மூன்று அறைகள் கொண்டதாக விரிவடைந்துவிட்டது.

தொடக்கத்தில் என்னை விமர்சித்த உறவினர்களும் தற்போது மதிக்கிறார்கள். பெண்கள் பார்க்கும் வேலையை பார்க்கும் ஆண் என்று என்னை இடித்துரைக்கும் ஆண்களும், இப்போது தங்கள் வீட்டு பெண்களை என்னுடைய பியூட்டி பார்லரில் விட்டுச் செல்கின்றனர்.

இதற்கு காரணம், என்னுடைய திடமான நம்பிக்கை, என் விருப்பத்திற்குரிய வேலையை தேர்ந்தெடுத்தது, விமர்சனங்களை பொருட்படுத்தாமல் ஈடுபாட்டுடன் வேலை செய்வது என்று நினைக்கிறேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

இந்தச் செய்தி குறித்து மேலும்