மணமாகாத ஆண் சந்திக்கும் அனுபவங்கள் #HisChoice

#HisChoice

''நீ ஒரு முட்டாளாதான் இருக்கணும். இன்னமுமா பழைய காதலையே நினைச்சிட்டு இருப்ப, நிகழ்காலத்தோட வாழ பழகு'' எனது திருமணம் குறித்து மீண்டும் வலியுறுத்திய என நண்பன் கூறிய ஆலோசனை இது.

எந்த பதிலும் கூறாமல் நான் அமைதியாக இருந்தேன்.

''அமைதியாக இருந்தா புத்திசாலினு நினைப்பா?'' மீண்டும் நண்பன் என்னை தூண்ட, 'உனக்கு என்னடா ம…. , இது என் வாழ்க்கை, என் முடிவு என்று அவனை முகத்தில் குத்த விருப்பப்பட்டேன்.

ஆனால், இது போல எத்தனை பேரை நான் முகத்தில் குத்த முடியும்? நான் என்ன தவறு செய்தேன்?

இது போன்ற கேள்விகளுக்கு நான் எதிர்வினையாற்ற நினைத்தால் அதற்கு முடிவே இருக்காது.

மற்றவர்கள் வினோதமாக பார்க்கும் அளவுக்கு அப்படி என்ன நான் செய்துவிட்டேன்?

எனது காதல் தோல்வியில் முடிந்தபிறகு வேறு யாரையும் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படவில்லை.

உணர்ச்சிவசப்படாமல் மிகவும் நிதானமாக நான் எடுத்த முடிவு இது என்றாலும், அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு இந்த முடிவை நான் எடுத்ததாகவே நினைக்கின்றனர்.

திருமணம் செய்யாமல் ஒருவர் தனியாக வாழ முடிவெடுத்தால், இந்த நூற்றாண்டிலும் பலருக்கு பதில் கூற வேண்டியுள்ளது.

37 வயதில் நான் தனித்துவமான அல்லது வித்தியாசமான நபராக நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்களால் கருதப்படுவது எனது திறமை, பணி அல்லது தோற்றதால் அல்ல.

விண்ணப்பங்களில் திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்ற வினாவுக்கு இல்லை என்றும், சிங்கிள் என்று நான் குறிப்பிடுவதால்தான்.

இதனால் பலரின் புருவங்கள் வியப்பில், திகைப்பில் உயர்ந்ததுண்டு. இதனால் ஒருவரை வித்தியாசமான(!) நபராக கருதும் சமூகம், அந்த நபரின்பால் அவர் வெட்கி தலைகுனியும் அளவு அனுதாபமும் காட்டுவர்.

என்னென்ன கேள்விகள்; என்னென்ன கற்பனைகள்

நான் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு பெருநகரத்தில்தான். வசிப்பிடமும் மேல்தட்டு மக்கள் வசிக்கும் இடம்தான்.

அடுத்த வீட்டில் இருப்பவர்களை கவலைப்படாமல் தங்கள் வேலையை மட்டும் பார்த்து கொண்டிருக்கும் இந்த நவீனநகரவாசிகள் ஒரு விஷயத்தில் மட்டும் வியப்படைவதுண்டு.

'' இன்னும் கல்யாணம் ஆகலையா?'' என அவர்கள் அழுத்தும் தொனி, நான் இன்னமும் பள்ளியில்தான் படித்து கொண்டிருக்கிறேன் என்று கூறினால் வரும் வியப்பு போல இருக்கும்.

அத்தருணங்களில் நண்பர்கள் சிலர் என்னை காப்பாற்றுவதாக எண்ணி, ''இந்த வருஷத்துக்குள்ள அவனுக்கு கல்யாணம் ஆயிரும்'' என்பார்கள் .

இதுதான் இனி வரப்போகும் நாட்களில் எனக்கு மிகப்பெரிய தர்மசங்கடமாக இருக்கும்.

இது போதாதென்று தேவையில்லாமல் என்னை சில பெண்களுடன் இணைத்து பேசி அந்த நட்பை முறிக்கும் புண்ணியவான்களும் உண்டு.

''திருமணம் ஆனதோ, ஆகவில்லையோ, அது பரவாயில்லை! நீங்க வெர்ஜினா இல்லை…..'' ஆர்வம் கொப்பளிக்க வினவியர் பலருண்டு.

பாலியல் ரீதியாக என்னால் இயங்கமுடியுமா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்று சிலர் வெளிப்படையாக கேட்பதுண்டு.

ஒருவர் ஆர்வ மிகுதியில் நான் தன்பாலின சேர்க்கையில் விருப்பமுள்ளவனா என்று கேட்டார்.

இந்த கேள்விகளுக்கு கோபத்துடன் நான் பதிலளித்தாலோ, உங்கள் வேலையை மட்டும் பாருங்க என்று கூறினாலோ, நட்பாக பழகத் தெரியாதவன், சிடுமூஞ்சி என்று ஏராளமான பட்டங்கள் எனக்கு இலவசமாக கிடைக்கும்.

என் மீது இவர்களுக்கு எவ்வளவு அக்கறை என்று சிரித்து கொண்டே இருக்க வேண்டும். இதுதான் நான் காலகாலமாக செய்து கொண்டிருப்பது.

திருமணம் ஆகிவிட்டதா என்று நேரடியாக கேட்பதற்கு பதில், ''நீங்க செட்டில் ஆயிட்டீங்களா?'' என்று சாதுர்யமாக (!) சிலர் வினவுவதுண்டு.

''நான் நல்ல கம்பெனில தான் வேலை பாக்குறேன், பேங்க் பாலன்ஸ் பரவயில்லை; கடன் எதுவும் இல்லை, ஸோ, செட்டில் ஆயிட்டேன்னு நினைக்கிறேன் ''

''நல்லா ஜோக் பண்றீங்க! கல்யாணம் எப்போ?'' - இது பாயிண்ட். சுற்றிவளைத்து ஏன் கேட்க வேண்டும், நேரடியா கேட்டிருக்கலாமே.

'நீ தனியாதான இருக்க?

மணமாகாத ஓர் இளைஞனுக்கு இந்த சமூகம் அளிக்கும் சலுகைகள் மற்றும் வெகுமதிகளை சற்றே அலசுவோம்.

முன்பு நான் பணியாற்றிய ஒரு நிறுவனத்தில் மேலாளருக்கு வார இறுதிகளில் எனது ஞாபகம் வந்துவிடும்.

''உங்களுக்குதான் ஃபேமிலி இல்லையே. வீக் எண்ட்ல ஒர்க் பண்றது உங்களுக்கு பிரச்சனையா இருக்காது எங்களுக்கு பாருங்க கமிட்மெண்ட்ஸ்'' என்பார்.

அட பாவிகளா! அப்பா, அம்மா எல்லாம் ஃபேமிலி இல்லையா? கல்யாணம் ஆகாதவங்களுக்கு வேற வேலை, ஆசைகள் இருக்கக்கூடாதா? - அது சரி, சொல்ல நினைப்பதை எல்லாம் சொல்லி விடமுடியுமா?

''நீ தனியா தான இருக்க, பிறகு குளிச்சிக்கலாமே! ஃ பேமிலியா குழந்தைகளோட இருக்கிறவங்க முதலில் குளிச்சிக்கட்டும், வாட்டர் ஸ்கேர்சிட்டி பாரு !'' தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க வீட்டு உரிமையாளருக்கு தோன்றிய யோசனை இது.

மற்றவர்களை போல நானும் வாடகை கொடுக்கிறேன். ஏன் எப்போதும் நான் மட்டுமே விட்டுக் கொடுக்கவேண்டும்?

''மாப்பிளை, என் வீட்டு கிரஹப்பிரவேசத்துக்கு எல்லாருக்கும் இன்விடேஷன் வைச்சுட்டேன், உனக்கு எதுக்கு தனியா இன்விடேஷன் வைச்சுட்டு? வந்து சேருடா '' நண்பனுக்கும் தெரிகிறது; அச்சிட்ட அழைப்பிதழ் யாருக்கு வைக்க வேண்டும் , யாருக்கு வாட்ஸப் அழைப்பு என்று.

இதை பற்றி கேட்டால், நட்பு குறித்து ஒரு மணி நேரம் வகுப்பு எடுப்பான். அதனால் வேண்டாம் என விட்டுவிடுவேன்.

இது போன்ற பல நிகழ்வுகள், என் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் சமூக புறக்கணிப்புகள் ஏன் நிகழ்கின்றன?

ஒருவர் மணமாகாமல் தனியாக வாழ நினைப்பது பாவமா? தகுதி குறைவான ஒன்றா?

நான் கொஞ்சமும் முயற்சி செய்யாமல் கிடைத்தது இலவச அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள்தான்.

'காலம் கடந்து போச்சு! இனி எதிர்பார்ப்பை கொஞ்சம் குறைச்சுகோங்க''

''என்ன எதிர்பார்ப்பு? எதை குறைக்கணும்?''

''வயசு, படிப்பு எதையும் பார்க்காதீங்க! ஏற்கனவே கல்யாணம் ஆகி விவாகரத்து ஆனாலும் பரவாயில்லை , இப்ப நீங்க டிமாண்ட் பண்ற நிலைமைல இல்லை''

உதவி செய்வதாக, ஆலோசனை கூறுவதாக நினைத்துக் கொண்டு இதை விட ஒருவரை தரம் தாழ்த்த, அவமானப்படுத்த முடியுமா?

திருமணமாக வேண்டுமென நான் எப்போது கேட்டேன் அல்லது ஏங்குவதாக வெளிப்படுத்தினேனா? இதை கேட்டால் 'உதவி செய்பவனை உதாசீனம் செய்கிறான்' என்ற பழியை நான் சுமக்க வேண்டும்.

இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள், உரையாடல்கள், அற்புதமான (!) ஆலோசனைகள் கொஞ்சம் கொஞ்சமாக அனைவரிடம் இருந்தும் என்னை விலகச் செய்துவிட்டது.

முன்பெல்லாம் நண்பர்கள், உறவினர்கள் வீட்டு திருமணங்களில் நான் தவறாது கலந்து கொள்வேன்.

நாளடைவில் நான் சந்தித்த கேள்விகள் திருமண அழைப்பிதழ்களை மதித்து அந்த வைபவத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையே மாற்றிவிட்டது.

வாழ்த்து சொல்ல வந்த எனக்கு பின்னால் யார் இருக்கிறார் என்பது போல பார்த்துவிட்டு, ''இன்னமும் சிங்கிளா ? நீயும் தான் ஒவ்வொரு விஷேசமா வந்து போற. உனக்குத்தான்….'' ஒரு சிரிப்பு அலை அங்கு எழும். ஆம். இது காலத்தால் மறக்க முடியாத மிகப்பெரிய நகைச்சுவை அல்லவா?

'ஸ்வீட்டா? என்ன விஷேசம்?'

அலுவலகத்தில் இருந்து விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றால் பிரசித்தி பெற்ற இனிப்புகள் மற்றும் உணவு வகைகளை வாங்கி வருவது என் வழக்கம்.

அப்போதெல்லாம் உடனடியாக, ''எப்போ மேரேஜ் ?'' என்ற கேள்வியோ, ''கங்கிராட்ஸ்'' என்ற வாழ்த்தோ தான் உடனடியாக வரும்.

அது இல்லை என்று தெரிந்தவுடன், 'ஓ, நானும் மேரேஜ்னு நினைச்சேன்'' என அவர்கள் முகம் மாறிவிடும்.

அவர்களை குறைகூறமுடியாது. அது என் மீதுள்ள அக்கறையின்பால் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், நான் வேண்டாம் என்று மறுத்துவிட்ட, மறக்க நினைக்கும் ஒரு விஷயத்தை மீண்டும், மீண்டும் நினைவுபடுத்துவது சரியா?

என்ன செய்வது? திருமணம் மற்றும் குழந்தை ஆகிய இரண்டு மட்டுமே மகிழ்ச்சி தரும் விஷயங்கள் என்ற எண்ணம் சமூகத்தின் ஆழ்மனதில் விதைக்கப்பட்டுள்ளது.

அப்போதெல்லாம் ஆதரித்தவர்கள் இப்போது மட்டும் ஏன் கேள்வி எழுப்புகின்றனர்?

பள்ளி பருவத்தில் அனைவரும் கிரிக்கெட்டை தேர்ந்தெடுக்க நான் மட்டும் ஹாக்கி விளையாட்டை தேர்வு செய்தேன். அப்போது யாரும் அது குறித்து கேள்வி எழுப்பவில்லை.

நவீன பைக்குகளை விட பழைய மாடல் பைக்குகளையே நான் விரும்பினேன்.

வெளிர் நிறங்கள்தான் என் தோல் நிறத்துக்கு பொருந்தும் என்றாலும் நான் அடர்த்தியான நிறங்களிலேயே உடை அணிய விரும்பினேன்.

நான் படித்தது வேறு. இப்போது பணிபுரிவது முற்றிலும் வேறு ஒரு துறையில்.

அப்போதெல்லாம் எனது தேர்வுகளுக்கு ஊக்கமும், ஆதரவும் அளித்தது என் நண்பர்களும், இந்த சமூகமும்தான்.

இப்போதும் திருமணம் குறித்த எனது முடிவுக்கு இவர்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

எதிர்காலத்தில் ஒருவேளை நான் திருமணம் செய்யக்கூடும் அல்லது தனியாகவே வாழ்வது என்ற முடிவையே தொடரக்கூடும். எதிர்காலம் எப்படி அமையும் என்று தற்போது எப்படி சொல்ல முடியும்?

கடந்த கால காதல் அனுபவங்களில் இருந்து தற்போது நிச்சயம் விலகி வந்துவிட்டேன். ஆனால், மற்றொரு பந்தத்துக்கு, உறவுக்கு தயாராகிவிட்டேனா? இத்தருணத்தில் இல்லை என்றுதான் சொல்ல முடியும்.

தற்போதைக்கு நான் தனியாக வாழ்கிறேன். இது இன்றைய நிலை. நாளை என்பது மற்றொரு நாள்.

தங்கள் வாழ்வில் மீண்டும் ஒரு காதல் பூக்குமா என்று யார்தான் கூறமுடியும்? அந்த தருணம் வரும்போதுதான் அது பற்றி பேசமுடியும்.

தனியாக வாழ நினைப்பது குற்றமோ, விசித்திரமோ இல்லை நண்பர்களே.

(இந்த #HisChoice சிறப்புத் தொடர் பிபிசி செய்தியாளர் சுசீலா சிங்கால் தயாரிக்கப்பட்டது.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்