புதிய தலைமைச் செயலகம்: மக்களின் வரிப்பணத்தை வீணாக்கிய விசாரணை - உயர்நீதிமன்றம் கண்டனம்

புதிய தலைமைச் செயலகம்: மக்களின் வரிப்பணத்தை வீணாக்கிய விசாரணை படத்தின் காப்புரிமை FACEBOOK

புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையைாக மாற்றியதிலும் முறைகேடு இருப்பதாகக் கூறி விசாரணை நடத்தியதில் மக்களின் வரிப்பணம் பெருமளவில் வீணாகியிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆர். ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இதற்கு எதிராக தி.மு.கவின் அப்போதைய தலைவர் மு.கருணாநிதி, மு.க. ஸ்டாலின், துரை முருகன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ரகுபதி ஆணையத்தின் செயல்பாடுகளை முடக்கிவைத்து உத்தரவிட்டது. இதையடுத்து அந்த ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதிபதி ரகுபதி ராஜினாமா செய்தார்.

இந்த வழக்கு இதற்கு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான தலைமை வழக்கறிஞர், புதிய தலைமைச் செயலகம் கட்டியது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அளிக்கப்பட்டுவிட்டதாகவும், விசாரணை ஆணையத்திற்கு புதிய நீதிபதியை நியமித்து விசாரணையைத் தொடரும் திட்டமில்லையென்றும் தெரிவித்தார். அடுத்த கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புக் காவல்துறை மேற்கொள்ளுமெனத் தெரிவித்தார்.

இதையடுத்து, விசாரணை ஆணையத்துக்கு எதிராக தாங்கள் தாக்கல் செய்த வழக்குகளைத் திரும்பப் பெற அனுமதி கேட்டு தி.மு.க. சார்பில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி, அரசியல் காரணங்களுக்காக அரசு எடுக்கும் முடிவுகளால் மக்களின் வரிப்பணம் பெரிதும் வீணடிக்கப்படுகிறது என அதிருப்தி தெரிவித்தார்.

புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியதில் மக்களின் பணம் பெரிதும் வீணடிக்கப்பட்டதோடு, அதில் முறைகேடு நடந்ததாகக் கூறி அதனை விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டதில் 5 கோடி ரூபாய் மேலும் செலவழிக்கப்பட்டது என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இப்படி தன்னுடைய வரிப்பணம் வீணடிக்கப்படுவது குறித்து கேள்வியெழுப்ப ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு எனக் கூறிய நீதிபதி, தி.மு.க. தரப்பினர் தங்கள் மனுவைத் திரும்பப் பெற அனுமதியளித்தார். இதற்குப் பிறகு இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

படத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைFACEBOOK/MK STALIN

தமிழகத்தின் சட்டப்பேரவையும் தலைமைச் செயலகமும் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை ராணுவத்திற்குச் சொந்தமானது. இதனால், அங்கிருந்து சட்டப்பேரவை அரங்கையும் தலைமைச் செயலகத்தையும் புதிய கட்டிடத்திற்கு மாற்ற 2006-2010ஆம் ஆண்டு காலத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு முடிவுசெய்தது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இதற்கான இடம் தேர்வுசெய்யப்பட்டு, ஜூன் 2008ல் இதற்காக அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி அடிக்கல் நாட்டினார். இரண்டு ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு 2010 மார்ச் 13ஆம் தேதியன்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த அலுவலகங்கள் படிப்படியாக புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டுவந்தன.

இந்த நிலையில், 2011ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்ததும், புதிய கட்டடம் அரசு இயங்குவதற்கு ஏதுவாக இல்லையெனக் கூறி, மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே தலைமைச் செயலகத்தை மாற்றினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.

புதிய தலைமைச் செயலகக் கட்டத்தை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றுவதாகவும் உத்தரவிட்டார். இதையடுத்து புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பட்டுவருகிறது.

புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அதனை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு ஆணையத்தையும் அமைத்தார்.

இந்த ஆணையம், மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்துத்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மு. கருணாநிதி உள்ளிட்ட 3 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :