‘புராதன சிலைகள், ஓவியங்கள்’ - என்னென்ன மீட்கப்பட்டன அரண்மனையிலும், பண்ணைவீட்டிலும்?

'சட்டத்திற்கு முரணாக வழக்கு பதிவுசெய்ய சொல்லி பொன். மாணிக்கவேல் மிரட்டுகிறார்' படத்தின் காப்புரிமை ARUN SANKAR

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: 'பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு'

"மேல்மருவத்தூர் மற்றும் தாம்பரம் அருகே உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷாவுக்குச் சொந்தமான 2 பண்ணை வீடுகளில் நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். இச்சோதனையில் 2 பண்ணை வீடுகளில் இருந்தும் 132 பழமையான கற்சிலைகளை போலீஸார் மீட்டனர்." என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கோயில் சிலைகள் திருடப்பட்டு, உள் நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் கடத்தப்பட்டுள்ளது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் ரன்வீர்ஷா என்பவருக்கு சொந்தமான வீட்டில் சில சிலைகள் இருப்ப தாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கடந்த 27-ம் தேதி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை செய்து ரன்வீர்ஷாவின் சைதாப்பேட்டை வீட்டில் இருந்து 12 ஐம்பொன் சிலைகள் உட்பட 89 சிலைகளை பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த 30-ம் தேதி தஞ்சாவூர் அருகே திருவையாற்றில் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் சிலை கடத்தல் பிரிவு போலீஸார் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்குப் பிறகு போலீஸார் ''இந்த அரண்மனையில் ஏதேனும் சிலைகள், மூலிகை ஓவியங்கள் இருக்கலாம். நீதி மன்ற அனுமதி பெற்று இங்கு தொடர்ந்து முழுமையான ஆய்வு நடத்தப்படும்'' என்று அறிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக மேல்மருவத்தூர் அடுத்த மோகல்வாடியில் உள்ள ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சோதனை நடத்த போலீஸார் முடிவு செய்தனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமை யில் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று இந்த பண்ணை வீட்டுக்கு வந்து சோதனை நடத்தினர். இந்த வீடு 50 ஏக்கர் கொண்ட பண்ணைக்கு நடுவே அமைந்துள்ளது.

அதில் பூட்டப்பட்டிருந்த இரு அறைகளின் பூட்டை உடைத்து போலீஸார் சோதனை செய்ததில் முருகன், பெருமாள், அம்மன், நந்தி போன்ற கற்சிலைகளும், கலை நயம் மிக்க அலங்கார சிலைகள், கற்தூண்கள் ஆகியவையும் இருந்தன.

இந்த வீட்டை முழுமையாகச் சோதனை செய்த போலீஸார் பழமையான சிலைகள் என்று கருதப்பட்ட 89 சிலைகளைக் கைப்பற்றினர். இதனை 2 லாரிகள் மூலம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு எடுத்துச் சென்றனர். இந்தச் சிலைகள் எவ்வளவு ஆண்டுகள் பழமையானது? எந்தக் கோயிலுக்குச் சொந்தமானது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்." என அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'துல்லிய தாக்குதல் தினத்தை அனுசரிக்காத கல்லூரிகள்'

கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் செப்டம்பர் 29 ஆம் தினத்தை 'துல்லிய தாக்குதல்' தினமாக அனுசரிக்க வேண்டுமென பல்கலைக்கழக மானிய குழு வலியுறுத்தி இருந்தது. ஆனால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் இத்தினத்தை அனுசரிக்கவில்லை.

பயங்கரவாதிகளுக்கு எதிராக சர்ஜிகல் ஸ்டிரைக் நடந்த இந்த தினத்தை கல்லூரிகளில் அனுசரிக்க சொல்வதற்கு எதிராக பலதரப்பினர் முன்பே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தினத்தந்தி: 'தாயின் உடல் மீது அமர்ந்து வினோத பூஜை நடத்திய அகோரி'

திருச்சி அருகே உள்ள சுடுகாட்டில் தாயின் உடல் மீது அமர்ந்து, அகோரி வினோத பூஜை நடத்தினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை தினத்தந்தி

"திருச்சி அருகே அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையோரம் ஜெய் அகோர காளி கோவிலை அகோரி மணிகண்டன் என்பவர் கட்டி பூஜை நடத்தி வருகிறார்.

அகோரி மணிகண்டனின் தாய் மேரி (வயது 67) கடந்த 30-ம் தேதி காலமானார். அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யும் நிகழ்ச்சி அரியமங்கலம் மத நல்லிணக்க சுடுகாட்டில் நேற்று முன்தினம் நடந்தது. அவரது உடலுக்கு வழக்கமான இறுதி சடங்கினை உறவினர்கள் செய்தனர். மேரியின் உடல், அடக்கம் செய்வதற்காக படுத்த நிலையில் வைக்கப்பட்டது. அப்போது அகோரி மணிகண்டன் இறந்த தனது தாயார் உடல் மீது ஏறி சம்மணமிட்டு அமர்ந்து, தியான நிலையில் ருத்ராட்ச மாலையை விரல்களால் உருட்டியபடி மந்திரங்கள் ஓதி பூஜை செய்தார்." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

அகோரிகள் என்பவர்கள் வட இந்திய சைவ சமயத்தவர் ஆவர். நடிகர் ஆர்யா நடித்த "நான் கடவுள்" திரைப்படத்தில் அகோரிகளின் வாழ்க்கை பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் என்கிறது அந்நாளிதழ் செய்தி.

'விவசாயிகள் மீது தடியடி; கண்ணீர் புகை வீச்சு'

கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி ஊர்வலமாக வந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், தடையை மீறி நகருக்குள் நுழைய முயன்றனர். இதனால் அவர்களை கலைக்க, போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள் என்ற செய்தி தினத்தந்தி நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

"பல கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடந்த 23-ந் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் நகரில் இருந்து பஸ்கள், டிராக்டர்களில் 'பாரதீய கிசான் யூனியன்' என்னும் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் அதன் தலைவர் நரேஷ் திகாயத் தலைமையில் டெல்லி ராஜ்காட்டை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

உத்தரபிரதேச மாநிலத்தின் வழியாக வந்தபோது மேலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஊர்வலத்தில் இணைந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தை தலைநகர் டெல்லியில் மகாத்மா காந்தியின் பிறந்த தினமான நேற்று முடிப்பதற்கு விவசாயிகள் திட்டமிட்டு இருந்தனர்.

ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்கான விவசாயிகள் வாகனங்களுடன் தேசிய தலைநகர் டெல்லிக்குள் நுழைந்தால் சட்டம், ஒழுங்கு சீர்குலையலாம் என்று கருதிய டெல்லி போலீசார், கிழக்கு மற்றும் வட கிழக்கு டெல்லி பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். மேலும் டெல்லி-உத்தரபிரதேச மாநில எல்லையில் உள்ள காஜியாபாத் நகரிலும் 2500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் தடையை மீறி காஜியாபாத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். எனினும் ஊர்வலத்தில் வந்தவர்கள் உத்தரபிரதேச போலீசார் சாலையின் நடுவே வைத்திருந்த தடுப்புகளை டிராக்டர்களால் இடித்து தள்ளிவிட்டு டெல்லியை நோக்கி முன்னேறினர்.

அப்போது ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே பலத்த தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் துணை போலீஸ் கமிஷனர் உள்பட 7 போலீசார் காயம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்தும், 20-க்கும் மேலான கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டினர். எனினும், இதையும் மீறி ஊர்வலத்தில் வந்தவர்கள் டிராக்டர்களுடன் டெல்லி எல்லைக்குள் நுழைய முயன்றனர்.

டெல்லி போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பின்னர் விவசாயிகளின் ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்டது."

- இவ்வாறு விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி: 'அரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்'

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ சார்பில் வியாழக்கிழமை (அக். 4) தற்செயல் விடுப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

இந்தப் போராட்டம் தொடர்பான ஊதியப் பிடித்தம் போன்ற எச்சரிக்கைகளுக்கு தாங்கள் அஞ்சப்போவதில்லை என இந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர் என்கிறது அச்செய்தி.

"புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ -ஜியோ அமைப்பு சார்பாக வரும் நவம்பர் 27 -ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.

அதற்கு ஆயத்தமாகும் வகையில் வியாழக்கிழமை (அக்.4) ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்புப் போராட்டம் நடைபெற உள்ளதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு (அனைத்து அரசு ஊழியர்கள்-ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு) அறிவித்துள்ளது. இதில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :