புழல் சிறையில் சிக்கன் பிரியாணி விலை எவ்வளவு?

சிக்கன் பிரியாணி படத்தின் காப்புரிமை Boston Globe

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

புழல் சிறையில் ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி எவ்வளவு?

புழல் சிறையில் சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதாக சிறப்பு கட்டுரை தீட்டியிருக்கிறது தினமணி நாளிதழ். சமீபத்தில் அங்கு நடைபெற்ற 5 சோதனைகளில் 70 எப்.எம் ரேடியோக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஐந்து கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். தமிழகத்தில் 6 சிறை கண்காணிப்பாளர்கள் மற்றும் புழல் சிறையில் 17 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 65 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் சிறைத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனால் சட்டவிரோத செயல்கள், அத்துமீறல்களுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பார்த்தால் அதற்கு நேர்மாறாக சட்ட விரோத பொருள்கள் இன்னும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

செல்வந்தர்களாக உள்ள கைதிகளை அவர்களது குடும்பத்தினர் நேரில் பார்க்க பெரும் பணம் லஞ்சமாக பெறுவதாக சிறையில் உள்ள சில கைதிகள் குற்றம் சாட்டுவதாக தினமணி தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறது.

எளிய கைதிகளுக்கு ஒரு அணுகுமுறை மற்றும் செல்வாக்குமிக்க கைதிகளுக்கு மற்றொரு அணுகுமுறையையும் சிறை துறையினர் கையாள்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சோதனைகள் தொடர்ந்து நடைபெற்றாலும் புழல் விசாரணை கைதிகள் சிறையில் பீடி, சிகரெட்,கஞ்சா , லைட்டர், போதைப்பாக்கு ஆகியவற்றின் விற்பனையும் தடையின்றி நடக்கிறது. மேலும் பிரியாணி, மட்டன் குழம்பு உள்ளிட்ட அசைவ உணவு வகைகளும் விற்பனை செய்கின்றனர். ஆனால் முன்பை விட அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

ஒரு பீடி கட்டு தற்போது ரூ.500க்கும் ஒரு ஆம்லெட் ரூ.100க்கும் ஒரு பிளேட் சிக்கன்-65, ஆயிரம் ரூபாய்க்கும் மட்டன் குழம்பு 1,500 ரூபாய்க்கும் சிக்கன் பிரியாணி 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

புழல் சிறையில் கைதிகளிடம் சோதனை நடத்திய சிறைத்துறை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என விவரிக்கிறது அந்த செய்தி.

படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN

சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்கி செய்து கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை

தேனியில் பத்து வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி கிணற்றில் வீசி கொலை செய்த மூவருக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது.

உத்தமபாளையம் தாலுகா காமாட்சிபுரத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி அரசு 2014-ல் டிசம்பர் 1 அன்று தனது பெரியம்மா வீட்டிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் 19 வயது குமரேசன் சிறுமியின் வீட்டிற்கு சென்று உளறியுள்ளார்.

போலீஸ் நடத்திய இவ்விசாரணையில் சுந்தர்ராஜ், ரவி, குமரேசன் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கழுத்தை நெரித்து கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது.

இந்த வழக்கில் தேனீ மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி திலகம், இம்மூவருக்கும் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனை மற்றும் தலா 50 ஆயிரம் அபராதம் விதித்தார் என செய்தி வெளியிட்டுள்ளது தினமலர்.

'ரெட் அலர்ட்' அறிவிப்பு 7-ந்தேதி மிக பலத்த மழை பெய்யும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (வெள்ளிக்கிழமை) உருவாக இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8-ந்தேதி (திங்கட்கிழமை) வரை 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், குறிப்பாக 7-ந்தேதி மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதாவது 7-ந்தேதிக்கு ரெட் 'அலர்ட்' அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் மழை குறித்த முன்னெச்சரிக்கையை தெரிவிக்கும் வகையில் தமிழகத்துக்கு 'ரெட் அலர்ட்' விடுத்து உள்ளது.

'ரெட் அலர்ட்' அறிவிப்பை தொடர்ந்து தயார் நிலையில் இருக்குமாறும், போதிய நிவாரண முகாம்களை அமைக்குமாறும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்ததந்த மாவட்ட கலெக்டர்கள் அங்குள்ள நிலவரத்தை பொறுத்து முடிவு எடுப்பார்கள்.

தமிழக பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் 'உஷார்' நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் என தமிழக கூடுதல் தலைமைச்செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான சத்யகோபால் செய்தியாளர்களிடம் கூறியதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Mint

பதவிவிலகியசந்தா கோச்சர்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகியுள்ளார் சந்தா கோச்சர்.

தனிப்பட்ட ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்பு மற்றும் முறைகேடாக உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொண்டுள்ளார்.

வீடியோகான் நிறுவனத்துக்கு 3,600 கோடி ரூபாய் கடன் வழங்கி, தன் கணவர் தீபிக் கோச்சார் நிறுவனத்திற்கு ஆதாயம் பெற்றுத்தந்தாக சந்தா கோச்சார் மீது குற்றச்சாட்டு உள்ளது.

சந்தா கோச்சர் வகித்த இவ்விரு பதவிகளுக்கும் தற்போது சந்தீப் பக்ஷி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :