அம்பேத்கர் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வேண்டும் என்றாரா?

  • பிரசாந்த் நனவரே
  • பிபிசி மராத்திக்காக
அம்பேத்கர்

(கடந்த ஆண்டு பிபிசி தமிழில் வெளியான இந்தக் கட்டுரை பீம்ராவ் அம்பேத்கரின் 128வது பிறந்தநாளை முன்னிட்டு மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.)

"10 ஆண்டுகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு முறை தேவை என அம்பேத்கர் கூறியிருந்தார். ஒடுக்கப்பட்ட சமூகங்களை 10 ஆண்டுகளுக்குள் உயர்த்த வேண்டும் என்று அவர் நினைத்திருந்தார். சமூக ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தார். ஆனால், நாம் என்ன செய்தோம்? சுயபரிசோதனை செய்ய தவறிவிட்டோம். தங்கள் தோல்வியை மறைக்க, மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் அமர்ந்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடஒதுக்கீட்டு முறையை நீட்டித்து கொண்டே இருந்தனர். ஒருமுறை இடஒதுக்கீடு 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. இங்கு என்ன நடக்கிறது?"

ஆர்.எஸ்.எஸ்- அமைப்போடு இணைந்த பிரத்ன்யா ப்ரவா என்ற அமைப்பு நடத்திய நான்கு நாள் கூட்டத்தில், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இவ்வாறு பேசினார்.

இதனையடுத்து மீண்டும் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக ஊடகங்களில் விவாதங்கள் நடக்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அம்பேத்கர் 10 ஆண்டுகள் மட்டுமே இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று எந்த சூழலில் கூறினார் என்பதை ஆராய்ந்தது பிபிசி மராத்தி.

10 ஆண்டுகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு வேண்டும் என்று அம்பேத்கர் நினைத்தாரா?

இதுகுறித்து மூத்த அறிஞரும் எழுத்தாளருமான டாக்டர் ஹரி நார்கேயிடம் பேசினோம்.

"இடஒதுக்கீடு என்பது மூன்று வகைப்படும். அரசியலில் இடஒதுக்கீடு (தனித் தொகுதிகள்), கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு. அரசமைப்புச் சட்டத்தின் 334 பிரிவின்படி, அரசியல் இட ஒதுக்கீட்டிற்கு மட்டும்தான் 10 ஆண்டு வரம்பு உள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இருக்கும் இட ஒதுக்கீட்டிற்கு எந்த வரம்பும் கிடையாது," என்கிறார் நார்கே.

மேலும் அவர் கூறுகையில், அரசியல் நிர்ணய சபை நடவடிக்கை அறிக்கையின் எட்டாவது பகுதியின்படி, அரசியல் இடஒதுக்கீட்டில் 10 ஆண்டுகள் வரம்பு வைக்க அம்பேத்கர் ஒப்புக் கொள்ளவில்லை. எனினும். அவர் ஒரு தீவிர ஜனநாயகவாதி என்பதால் 10 ஆண்டு வரம்பிற்கு ஒப்புக் கொள்ள வேண்டிய சூழல் உருவானது.

பின்னர் ஆகஸ்ட் 25, 1949 அன்று ஆந்திர மாநில உறுப்பினரான நாகப்பா, 150 ஆண்டுகளுக்கு அரசியல் இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இல்லையென்றாலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்களின் நிலை உயரும் வரை இது தொடர வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதற்கு அம்பேத்கர் அளித்த பதில் என்ன தெரியுமா? "தனிப்பட்ட முறையில் நீண்ட காலத்திற்கு இடஒதுக்கீடு முறை வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். தாழ்த்தப்பட்டோருக்கு நீண்ட காலத்திற்கு இடஒதுக்கீட்டை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், நான் ஏற்கனவே கூறியதுபோல, 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு முறை பின்பற்ற இந்த சபை முடிவு செய்துள்ளது. எனினும், 10 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டோர் போதிய முன்னேற்றம் அடையாத நிலையில், காலவரம்பை மேலும் நீட்டிக்க அரசியல் அமைப்பில் வழி செய்திருக்கிறேன்" என்றார்.

அரசியல் இடஒதுக்கீடு என்றால் என்ன?

அரசியல் இடஒதுக்கீட்டின் அடிப்படையை தெரிந்து கொள்ள மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் அம்பேத்கருக்கு இடையே நடந்த வட்ட மேஜை மாநாட்டுப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட அரசியல் சர்ச்சையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் மராத்தி நாளிதழான லோக்சத்தாவின் இணை ஆசிரியர் மது காம்ப்ளே.

"தீண்டாமைக்கு உள்ளானவர்கள் அரசியல் உரிமை பெற, அவர்களுக்கென தனித் தேர்தல் நடத்த வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார். ஆனால், அதனை கடுமையாக எதிர்த்த காந்தி, சாகும்வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். இறுதியாக சமரசம் செய்துகொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்ட அம்பேத்கர், தனித் தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டார். இது 'பூனே உடன்படிக்கை' என்று அழைக்கப்பட்டது."

"சுதந்திர இந்தியாவின் அரசியல் அமைப்பிலும் இதே கருத்து ஒப்புக்கொள்ளப்பட்டது. தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப, மக்களவை மற்றும் சட்டசபையில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வழிவகுக்கும் சட்டப்பிரிவு கொண்டுவரப்பட்டது. இதுவே அரசியல் இடஒதுக்கீடு ஆகும்."

இதற்கு முதலில் 10 ஆண்டுகள் காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் வாக்குகளை பெற, அரசியல் கட்சிகளும் ஆட்சியாளர்களும் இதனை அவ்வப்போது நீட்டித்து கொண்டனர். ஆனால், மாநிலங்களவை மற்றும் மாநில சட்டமன்ற கவுன்சில்களில் தனி இடங்கள் என்பது கிடையாது.

பின்னர், உள்ளாட்சி தேர்தல்களில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரோடு, பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இதனால், அரசியல் செயல்முறையில் இல்லாத பலரும், அரசியல் அதிகாரம் பெற முடிந்தது. இது இடஒதுக்கீட்டின் சிறப்பான அம்சமாகும். ஆனால், இடஒதுக்கீட்டின் முக்கிய நோக்கங்களை இது நிறைவேற்றவில்லை என்று காம்ப்ளே கூறுகிறார்.

முறையான பிரதிநிதித்துவம் அடையும் வரை இடஒதுக்கீடு முக்கியம்

"சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சம வாய்ப்பு அளிக்க, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்றும் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை உயர்சாதியினரே வகிக்கின்றனர். அதனால், அரசாங்கத்தின் அனைத்து நிலைகளிலும் பிறப்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவம் இருக்கும்வரை, இடஒதுக்கீட்டு முறையை நிறுத்துவதற்கான கேள்வியே இல்லை" என்கிறார் பூனே ஐ எல் எஸ் சட்டக்கல்லூரியின் பேராசிரியர் நிதீஷ் நவ்சகரே.

அரசியல் இடஒதுக்கீட்டை மேலும் நீட்டிக்க வேண்டுமா?

இது தொடர்பாக அம்பேத்கர் இயக்கத்தின் மூத்த ஆய்வாளரான சுஹஸ் சொனவனே கூறுகையில், "அரசியல் சாசனத்தில் இருந்தாலும், எந்த தலித் அமைப்போ அல்லது அம்பேத்கரை பின்பற்றுவர்களோ அரசியல் இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் எனற கோரிக்கையை முன்வைக்கவில்லை" என்கிறார்.

"தனித் தொகுதிகளில் வெற்றி பெறும் பிற்படுத்தப்பட்டோர், அவர்களின் அரசியல் கட்சிகளுக்கு உட்பட்டே பணிபுரிகின்றனர். அவர்களுக்கன தனி அரசியல் நிலைப்பாடு இருப்பதில்லை. இந்த இடஒதுக்கீட்டால், அச்சமூகத்துக்கு எந்த பலனும் இல்லாத போது, இது வேண்டாம்" என்றும் சொனவனே தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: