பேருந்தை ஓட்டிய குரங்கு; வைரலான காணொளி

படத்தின் காப்புரிமை YOUTUBE

கர்நாடகாவில் குரங்கை பேருந்து ஓட்டுவதற்கு அனுமதித்த ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குரங்கு ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டும்போது அதில் பயணம் செய்தவர்கள் புகாரளித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மாறாக குரங்கு பேருந்து இயக்குவதை போன்ற காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிய பிறகு கர்நாடக அரசு போக்குவரத்துறை அதிகாரிகள் இந்நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

"பேருந்தின் இயக்கத்தை ஒரு குரங்கிடம் கொடுத்துவிட்டு பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் ஓட்டுநரின் செயலை ஏற்றுக்கொள்ளமுடியாது" என்று கர்நாடக அரசு போக்குவரத்துத்துறையின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், ஆச்சர்யமளிக்கும் விதமாக போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் ஓட்டுநர் மீதான நடவடிக்கையை பொது மக்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர்.

"அருமையான காணொளி. எதற்கு அந்த ஓட்டுநரை பணியிடைநீக்கம் செய்யவேண்டும்? இதேபோன்று இன்னொருமுறை செய்யக்கூடாது என்று எச்சரித்து விட்டிருக்கலாமே" என்று பராக் ஹெடா என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமையே நடந்தேறியுள்ள நிலையில், இதுகுறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலான பிறகே தங்களுக்கு தெரியவந்ததாக கர்நாடக அரசு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குரங்கு பயணி ஒருவருடன் பேருந்தில் ஏறியதாகவும், ஓட்டுநரின் இருக்கை தவிர மற்ற இடத்தில் அமர்வதற்கு அது மறுத்துவிட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் பேருந்தின் கட்டுப்பாட்டை குரங்கிடம் கொடுத்த அந்த ஓட்டுநரின் பெயர் பிரகாஷ் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த ஓட்டுநர் ஒரு கையில் பேருந்தை இயக்குவதை வழக்கமாக கொண்டவர் என்று குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது. குரங்கு பேருந்தை இயக்கிக்கொண்டிருந்தபோது பிரகாஷ் சாலையை பார்த்துக்கொண்டிருப்பது காணொளியில் தெரிகிறது.

தான் இறங்கிய வேண்டிய இடம் வந்ததும் பேருந்தின் கட்டுப்பாட்டை ஓட்டுநரிடம் ஒப்படைத்துவிட்டு அந்த குரங்கு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: