சபரிமலையில் பெண்கள் அனுமதி: "தெய்வக்குற்றம் என்பது தீண்டாமையின் மறுவடிவம்"

  • 9 அக்டோபர் 2018
சபரிமலை விவகாரம்: "தெய்வக்குற்றம் என்பது தீண்டாமையின் மறுவடிவம்" படத்தின் காப்புரிமை Twitter

'மாதவிடாயை காரணம் காட்டி அனுமதி மறுப்பது பெண்களின் தனிப்பட்ட கண்ணியத்துக்கு எதிரானது. இதுவும் ஒரு வகையான தீண்டாமைதான்'' என நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

இந்நிலையில், சபரிமலையில் வழிபட அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டம் நடத்துவது குறித்து நேயர்களின் கருத்தை பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

"பெண்களும் ஆண்களும் சமம் என்ற நோக்கில் தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. கோயிலுக்குள் நுழைவதா வேண்டாமா என்பது ஒவ்வொரு தனிப்பட்ட பெண்ணின் விருப்பம். அதில் எந்த ஒரு தனி மனிதரோ (பெண் உள்பட) அமைப்போ தலையிடுதல் முறையற்றது" என்று ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார் திருமூர்த்தி என்னும் நேயர்.

"நீதிமன்றங்கள் மத நம்பிக்கையில் தலையிட கூடாது. நிர்வாகத்தில் மட்டுமே தலையிட வேண்டும் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் வேறுபாடு உண்டு. அப்படிதான் கடவுள் படைத்து இருக்கிறார். ஐயப்பன் பக்தர்களை இழிவுப்படுத்திவிட்டார்கள்" வெங்கட் என்பவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

"போவதா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டியவர் பெண்களே. போகிறவர்கள் போகட்டும், விருப்பமில்லாதவர்கள் விடட்டும்" என்று குகநாதன் ராமசாமி தெரிவித்துள்ளார்.

"முந்தைய காலங்களில் தலித்துகள் கோயிலுக்குள் வந்தால் தீட்டு என்று சாஸ்திரம் சொல்லியது அதே சாஸ்திரம் தான் இன்று பெண்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று கூறுகின்றது" என்று பிரபாகரன் என்ற நேயர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

"பெண்கள் அனைவரும் கண்டிப்பாக ஐயப்பன் கோயிலுக்குச் சென்றுதான் ஆகவேண்டும் என யாரும் கட்டாயப்படுத்தவில்லையே! உண்மையில் பெண்களுக்கு கிடைத்த வெற்றியாய் இதை கொண்டாடவேண்டும். நல்ல ஒருதீர்ப்பை எதிர்க்க ஒரு கூட்டம் மக்களை மயக்குகிறது என்றால், நாம் அதற்கு இரையாகலாமா?" என மற்றொரு நேயர் கருத்து பதிவிட்டுள்ளார்.

"சம்பந்தப்பட்ட மதத்தினர் பேசி முடிவெடுக்கட்டும். நம்பிக்கையற்றவர்கள் இதில் தலையிட கூடாது" என்று அமீன் அப்துல் ஜப்பார் என்பவர் தெரிவித்துள்ளார்.

"உரிமைக் கோரி போராடி பார்த்திருக்கேன். ஆனால், கிடைத்த உரிமையை மறுத்து மற்றவர்களுக்கும் கிடைக்க விடாமல் செய்யும் போராட்டத்தை இப்பொழுது தான் பார்க்கிறேன். எத்தனையோ உண்மையான பக்தர்களுக்கு போக வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. அவர்களின் எண்ணத்தையும் மதிக்க முன் வர வேண்டும். விருப்பமில்லை என்றால் போக வேண்டாம், ஆனால் பிறர் போவதை போராடி தடுக்கவும் வேண்டாம்" என்கிறார் மணிமலர் என்ற நேயர்.

"ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமநிலை வேண்டும் என்பது எல்லா வகையிலும், எல்லாவற்றுக்கும் ஏற்புடையது அல்ல" என்று குமரேசன் என்ற ஃபேஸ்புக் பயன்பாட்டாளர் பதிவிட்டுள்ளார்.

"தீர்ப்பு மனித நேயம் மிக்கது! பெண்கள் கோவிலுக்கு செல்லலாமே ஒழிய, கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை! பக்தியுள்ளவர்கள் போகட்டும்! புத்தியுள்ளவர்கள் விலகட்டும்!" என்று ஈஸ்வர மூர்த்தி என்ற நேயர் கருத்து பதிவிட்டுள்ளார்.

"கோயில் வாயிலை மிதித்தாலோ வீட்டில் இருக்கும்போது தெய்வத்தை தொட்டாலோ தெய்வகுற்றம் என்று கூறுவது நிச்சயம் தீண்டாமைதான். இது எந்த மதத்தில் இருந்தாலும் எந்த உருவில் இருந்தாலும் களையப்படவேண்டிய ஒன்று. இதை சொல்ல மனிதன் என்ற உரிமை மட்டும் போதும்" என்று ஃபேஸ்புக் பயன்பாட்டாளர் ஒருவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :