கடலூரில் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி

இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

கடலூரில் கண்டெடுக்கப்பட்ட 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி

படத்தின் காப்புரிமை Eric Lafforgue/Art in All of Us
Image caption படத்தில் உள்ளது மாதிரி மட்டுமே. கடலூரில் கண்டெடுக்கப்பட்ட தாழி இப்புகைப்படத்தில் இல்லை.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே சுமார் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிஞ்சிப்பாடி அருகே அரசடிக்குப்பம் கிராமத்தில் மழைநீரை வெளியேற்றுவதற்காக நிலத்தை தோண்டியபோது இந்த தாழி வெளிப்பட்டுள்ளது. நில உரிமையாளர் அளித்த தகவலின்படி ஆத்தூர் அரசு கலை கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில் அரசடிக்குப்பம் கிராமத்தில் கிமு 5-ம் நூற்றாண்டு முதல் மக்கள் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

இந்த தாழி 120 செ.மீ உயரம் கொண்டது. தாழியின் அருகே, மூட்டுகள் தாழியைச் சுற்றி வட்டவடிவில் வைக்கப்பட்ட லாட்ரைட் கற்கள் காணப்பட்டன.

தாழியின் உள்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டவருக்கு பிடித்தமான உணவுப் பயன்படுத்தப்பட்ட சிறிய வகை கருப்பு, சிவப்பு மட்கலன்களின் உடைந்த பாகங்கள் இருந்தன. பானை ஓட்டின் கழுத்துப்பகுதியில் கீறல் குறியீடு இருந்தது. இந்த குறியீடுகள் படிப்படியாக வளர்ந்து தமிழ் பிராமி எழுத்து வடிவத்தை எட்டியது என தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர் என அந்நாளிதழின் செய்தி விவரிக்கிறது.

பொதுத்திட்டங்களுக்கு மக்களிடம் கருத்து கேட்பு கூடாது

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் டெல்லியில் நேற்று மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ஹர்ஷவர்தனை அவரது அலுவலகத்தில் சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்தார்

முக்கியமான பொதுத் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகள் கேட்பது வழக்கம். கடந்தகாலங்களில் இதுபோன்ற சில கருத்துகேட்பு கூட்டங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டன. சுயநலத்துக்காக சிலரின் குறுக்கீட்டால் கூட்டம் இடையிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியவில்லை. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பெரும் இழப்புகளை சந்தித்தனர்.

எனவே, பிரிவு ஏ மற்றும் பிரிவு பி1 திட்டங்களுக்காக கருத்துகேட்பு நடத்தாமலேயே மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்க விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என கருப்பணன் தனது மனுவில் கோரிக்கை வைத்திருக்கிறார் என்கிறது இன்றைய தினத்தந்தி நாளிதழின் செய்தி.

சட்டவிரோதமாக வந்த 1750கிலோ ஆட்டிறைச்சி

படத்தின் காப்புரிமை Anadolu Agency

சென்னை மாநகராட்சியில் சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், புளியந்தோப்பு ஆகிய மூன்று இடங்களில் ஆடு மற்றும் மாடு வெட்டி விற்பனை செய்யப்படுகிறது. இவ்விடங்களில் வெட்டப்படாத இறைச்சியை விற்போர் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ரயில் வாயிலாக ராஜஸ்தானிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஆட்டிறைச்சி வருவதாக கிடைத்த தகவலின்படி சென்னை மாநகராட்சி அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சென்னை ரயில்வே அதிகாரிகள் உதவியுடன் சோதனை நடத்தியபோது சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 1750 கிலோ ஆட்டிறைச்சியை பறிமுதல் செய்துள்ளனர் என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உங்கள் குடும்ப வருமானம் 10 ஆயிரமா?

மாதம் குடும்பத்துக்கு பத்தாயிரத்துக்கு மேல் வருமானம், குளிர்சாதனப் பெட்டி, இருசக்கர வாகனம் ஆகியவை இருந்தால் பிரதமர் மோதியின் சுகாதார காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட மாட்டாது என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தி வெளியாகியுள்ளது.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மற்றும் ஜன் ஆரோக்ய யோஜனா திட்டங்களை செயல்படுத்தும் தேசிய சுகாதார முகமை மாநிலங்களுக்கு இந்த ஆணையை பிறப்பித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூக பொருளாதார மற்றும் ஜாதி கணக்கெடுப்புப்படி `அடிநிலையில் இருக்கும்.10.74 கோடி குடும்பங்களுக்கு இந்த திட்டம் வழங்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது மேலும் இந்த திட்டத்தின்படி 50 கோடி இந்தியர்கள் மருத்துவமனையில் 5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்