நியூட்ரினோ திட்டம்: ஆய்வில் ஈடுபடும் தமிழக மாணவர்கள்

  • 12 அக்டோபர் 2018
மலையை தோண்டும் பணி படத்தின் காப்புரிமை Getty Images

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ நோக்கு கூடத்தில் நடைபெறும் ஆய்வுகளில் தமிழக மாணவர்கள் பங்குபெற வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தில் இடம்பெறும் அனைத்து சாதனங்களும் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளதாகவும், படிப்படியான ஆய்வுகளில் தமிழகத்தில் உள்ள இயற்பியல் மற்றும் வேதியல் துறையில் பயிலும் மாணவர்கள் பங்குபெறுவார்கள் என்றும் நியூட்ரினோ நோக்கு கூடம் திட்டத்தின் அறிவியல் செய்தி தொடர்பாளர் த. வி. வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

'' நியூட்ரினோ குறித்த அடிப்படையான ஆய்வுகளை நடத்த ஏற்ற இடமாக பொட்டிபுரம் மலைப்பகுதி உள்ளது.

இந்த திட்டத்திற்கான அனுமதி சான்றிதழ்களை பெறும் வேலைகள் நடந்துவருகின்றன. தமிழக அரசு இந்த திட்டத்திற்காக 60 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. அதேபோல ஆய்வுக்கு தேவையான தண்ணீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லை என்று தமிழக மாசுக்கட்டுப்பாடு ஆணையம் சான்றிதழ் அளித்த பின்னர், ஆய்வுக்கட்டடங்கள் அமைக்கப்படும்.

ஆனால் இந்த திட்டத்தின் ஒவ்வொரு படிநிலையில் உள்ளூர் மாணவர்களை ஈடுபடுத்தும் வண்ணம் அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளோம்,'' என்று அறிவியல் செய்தி தொடர்பாளர் த. வி. வெங்கடேஸ்வரன் கூறுகிறார்.

''பொட்டிபுரத்தில் திட்டமிட்டுள்ள நியூட்ரினோ கூடத்தில் வைக்கப்படவுள்ள ஆய்வுகருவிகளைப் போன்ற ஒரு மினி கலோரிமீட்டர் கருவியை மதுரையில் நாங்கள் சமீபத்தில் காட்சிப்படுத்தினோம்.

அந்த கருவியைத் தயாரிப்பதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஈடுபட்டனர்.

இதன்மூலம் நியூட்ரினோ ஆய்வு முழுவீச்சில் செயல்படும்போது இவர்களும் பங்குபெறுவார்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம். எதிர்கால ஆய்வுகளிலும் மாணவர்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவு இருக்கும்,'' என்றார்.

நியூட்ரினோ ஆய்வில் ஈடுபடும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறிய வெங்கடேஸ்வரன் அதற்கான செலவினங்களும் ஆய்விற்கான நிதியில் அடங்கியுள்ளன என்றார்.

''நியூட்ரினோவின் பயன்பாடு குறித்து உலகளவில் ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. தமிழகத்தில் அமையவுள்ள நோக்குகூடத்தில் அடிப்படையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

படத்தின் காப்புரிமை Facebook

இந்த கூடத்தில் நடக்கும் ஆய்வுகள் உடனடியாக என்ன பயன்களைத் தரும் என்று சொல்லமுடியாது. ஆனால் இத்தகைய முயற்சிகளை நாம் செய்துவருகிறோம் என்பது வரவேற்கத்தக்கது,'' என்றார் வெங்கடேஸ்வரன்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உள்ள ஆய்வு மாணவர்கள் (பி எச் டி) மற்றும் முதுகலை பட்டம் படிக்கும் மாணவர்கள் நியூட்ரினோ தொடர்பாக குறுகிய கால ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார்கள் என்றும் இளங்கலை படிக்கும் மாணவர்கள் நியூட்ரினோ தொடர்பான அடிப்படை தரவுகளை தெரிந்துகொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபடுகிறார்கள் என்றும் கூறுகிறார் இயற்பியல்துறை உதவி பேராசிரியர் ஸ்டீபன் இன்பராஜ்.

''தேனியில் அமையவுள்ள நியூட்ரினோ நோக்கு கூடம் திட்டத்தில் அமெரிக்கன் கல்லூரி ஆரம்ப கட்டத்தில் இருந்து ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுவருகிறது.

இயற்பியல் துறை மாணவர்கள் நியூட்ரினோ திட்டம் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள சிறப்பு பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

உள்ளூர் மாணவர்கள் இந்த திட்டம் பற்றி தெரிந்துகொண்டு மக்களிடம் பேசினால், பொது மக்கள் நன்கு உணர்ந்து கொள்ளவர்கள் என்று நம்புகிறோம்.

அவ்வப்போது பொட்டிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தங்கி விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்திவருகிறோம்,'' என்று கூறுகிறார் ஸ்டீபன் இன்பராஜ்.

நியூட்ரினோ நோக்கு கூடம் குறித்து தேனி மக்கள் பல சந்தேகங்களை கேட்டறிந்ததாக கூறும் ஸ்டீபன் இன்பராஜ் அவர்களின் கேள்விகள் என்னவாக இருந்தன என்றும் பிபிசிதமிழிடம் தெரிவித்தார்.

''நியூட்ரினோ நோக்கு கூடம் அமைக்கப்பட்டால் அந்த கிராமங்களில் கதிரியக்கத்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்து நிலவுகிறது.

மேலும் பிறக்கப்போகும் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். இந்த அச்சத்தைப் போக்க விளக்கக்கூட்டங்களை நடத்துகிறோம்.

இந்த திட்டத்தில் உள்ளூர் மாணவர்கள் ஆய்வுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை மக்கள் தெரிந்துகொண்டால், அவர்களின் பயம் நீங்கிவிடும்,''என்றார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: