நிதின் கட்கரி: 'ஏமாற்றியதற்காக திட்டுவதா, உண்மையை சொன்னதற்காக பாராட்டுவதா?'

  • 11 அக்டோபர் 2018
நிதின் கட்கரி படத்தின் காப்புரிமை Pti

"2014-ல் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால், பெரிய வாக்குறுதிகளை கொடுத்தோம்," என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

"மத்திய அமைச்சரின் இந்த கருத்து அரசியல் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் சீர்குலைக்குமா," என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

"மக்கள் ஏமாளிகளாக இருந்ததால் நாங்கள் ஏமாற்றினோம் என சொல்கின்ற ஆணவம் அரசியல்வாதிகளுக்கு வந்துள்ளது சனநாயகத்திற்கு விடப்பட்ட சவால். சனநாயகம் என்பதே ஏமாற்று வேலை என்பதை அரசியல் கட்சிகள் நன்கு புரிந்து வைத்துள்ளன. மக்கள் ஏமாறும் வரை அரசியல்வாதிகள் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள்," என்கிறார் நகினம் சிவம் எனும் பெயரில் ஃபேஸ்புக்கில் பதிவிடும் நேயர்.

"இப்படி ஏமாற்றியதற்காக திட்டுவதா, உண்மையை சொன்னதற்காக பாராட்டுவதா," எனக் கேள்வி எழுப்புகிறார் சிவ் ராம் சர்மா எனும் பெயரில் பதிவிடும் ஃபேஸ்புக் நேயர்.

"மக்களின் வாக்கு உறுதியானாலும், அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றமாட்டார்கள," என்று கூறியுள்ளார் மைதீன் ரிஃபா.

"தவறான விளம்பரம் கொடுத்து மக்களை ஏமாற்றும் கம்பெனிகளுக்கு தண்டனை உண்டு. ஆனால் தவறான பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து விளம்பரம் செய்து அவற்றை செய்யாமல் மக்களை ஏமாற்றும் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் இந்தியாவில் தண்டனை கிடையாது. அதை விட கொடுமை வாக்குறுதி என்ன ஆச்சு என்று கேள்வி கேட்டால் தேசத் துரோக வழக்கு. புதிய இந்திய அரசியல் சாசனம் அப்படி மாற்றிவிட்டார்கள். சட்டங்களும், அதை நடைமுறைப்படுத்தும் விதமும், நீதி பரிபாலனங்களும் இந்தியாவில் ஒரு பெரும் கேலிக்கூத்து, மோசடி," என்பது மனோகர் எனும் நேயரின் கருத்து.

"பெரிய வாக்குறுதிகள் என்பதை விட பொய்யான வாக்குறுதிகள் தந்தார்கள். தேர்தல் அறிக்கையில் பட்ஜெட் போன்று முதல் வருடம் தொடங்கி ஐந்தாம் வருடம் வரை செய்ய உள்ளதை ஆதாரத்தோடு விளக்க வேண்டும். இதை போன்ற ஒப்புதல் வாக்குமூலத்தால் பாஜக மீதான நம்பிக்கை மேலும் கெடும்," என்கிறார் வசந்தராஜ் எனும் ட்விட்டர் நேயர்.

இவர் எதிர்க் கட்சியின் ஸ்லீப்பர் செல்லாக இருப்பாரோ என்று எள்ளலாக கூறியுள்ளார் சுப்புலட்சுமி எனும் நேயர்.

"இப்படித்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி", என பாலன் சக்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் 'பிராகரஸ் ரிப்போர்ட்' சமர்ப்பிக்கும் முறையை ஏற்படுத்த வேண்டும். அதை கண்காணிக்க வேண்டும்," என்கிறார் அனீஸ் கான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்