“தத்தளிக்கும் உலக பொருளாதாரமும், இந்தியாவின் கடன் சுமையும்” - ஆறுதல் தரும் செய்தி

  • 11 அக்டோபர் 2018
"தத்தளிக்கும் உலக பொருளாதாரமும், இந்தியாவின் கடன் சுமையும்" படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: 'இந்தியாவின் கடன் சுமை'

சர்வதேச அளவில் வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவின் கடன் சுமை மிகவும் குறைவாக உள்ளது என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) குறிப்பிட்டுள்ளது. இருந்தபோதிலும் சர்வதேச அளவிலான கடன் சுமை மிகவும் அதிகரித்து, அபாய அளவைத் தொட்டு விட்டதாக ஐஎம்எப் நிதி விவகாரத்துறை இயக்குநர் விடோர் கஸ்பர் எச்சரித்துள்ளார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை Getty Images

2017-ம் ஆண்டில் உலகின் கடன் சுமை 182 டிரில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளதாக அவர் கூறினார் என்கிறது அந்நாளிதழ்.

இந்தியாவின் கடன் சுமையானது அந்நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி திறனுடன் (ஜிடிபி) ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது. 2017-ம் ஆண்டில் இந்தியாவில் தனியார் நிறுவனங்களின் கடன் சுமை ஜிடிபி அளவில் 54.5 சதவீத மாக இருந்தது. அரசின் கடன் சுமை 70.4 சதவீதமாக இருந்தது. ஆக ஒட்டுமொத்த கடன் சுமை ஜிடிபி-யில் 125 சதவீதமாகும். அதேசமயம் சீனாவின் ஒட்டுமொத்த கடன் சுமை 247 சதவீதமாக உள்ளது என்றும் ஐஎம்எப் சுட்டிக் காட்டியுள்ளது.

உலகின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனுடன் (டபிள்யூஜிடிபி) இந்தியாவின் கடன் சுமை குறைவாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார் என்று விவரிக்கிறது அந்நாளிதழ்.

'ரஃபேல் விமான ஒப்பந்த நடைமுறைகளை சீல் வைத்த கவரில் சமர்ப்பிக்க வேண்டும்'

ரஃபேல் போர் விமானங்களை வாங்க முடிவெடுக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளை வரும் 29-ம் தேதிக்குள் சீல் வைக்கப்பட்ட உறையில் வைத்து சமர்ப்பிக் கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்திய விமானப் படைக்கு 36 அதிநவீன ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா, வினீத் தண்டா, மேலும் சிலர் உச்ச நீதிமன்றத் தில் மத்திய அரசுக்கு எதிராக பொதுநல மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்." என்கிறது அந்நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை Getty Images

"ரஃபேல் போர் விமா னங்களை தயாரிக்கும் பிரான்ஸ் நிறுவனம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித் துள்ள அறிக்கையில், ஒரு ரஃபேல் ரக விமானத்தின் விலை 71 மில்லியன் யூரோ (ரூ.606 கோடி) என்று கூறப்பட் டுள்ளது. இந்த விலை விவ ரம் சர்வதேச சந்தையில் வெளிப்படையாக பட்டிய லிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ள ஒரு விமானத்தின் விலை 206 மில்லியன் யூரோ (ரூ.1758 கோடி) என்று தெரிகிறது. எனவே, இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது. இதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக இந்து தமிழ் கூறுகிறது.

"ரஃபேல் ஒப்பந்தம் குறித்த முடிவு எடுக்கப்பட்ட நடை முறைகளை சீல் வைக்கப்பட்ட உறையில் வரும் 29-ம் தேதிக் குள் மத்திய அரசு சமர்ப் பிக்க வேண்டும். இதை அதிகாரப்பூர்வ நோட்டீஸ் என்று கருதக்கூடாது. இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட விதத்தை நீதிமன்றம் தெரிந்து கொள்ள விரும்புகிறது. அதில் விலை விவரம், ரஃபேல் குறித்த தொழில்நுட்ப விவரம் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மனுக்கள் மீது முடிவெடுக்கும் முன்பு நீதிமன்றம் திருப்தி அடைவதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது." என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அந்நாளிதழ் விவரிக்கிறது.

தினமணி: 'காதலியை சுட்டுக் கொன்று காவலர் தற்கொலை'

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதன்கிழமை அதிகாலை காதலியுடன் ஏற்பட்ட தகராறில், அவரை காவலர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, தானும் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"சரஸ்வதி (23)-க்கும், தமிழ்நாடு காவல் துறை கமாண்டோ பாதுகாப்புப் பிரிவில் பணிபுரிந்த கார்த்திவேலுக்கும் (27) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது.

படத்தின் காப்புரிமை facebook

இவர்கள் இருவரின் காதலுக்கு சரஸ்வதியின் தந்தை சேகர் பெரிதாக எதிர்ப்புத் தெரிவிக்காததால், கார்த்திவேல் அவ்வப்போது சரஸ்வதியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். எனினும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சேகர்-சரஸ்வதி இடையே கருத்து வேறுபாடு எழுந்தது.

இந்த நிலையில், தனது பிறந்த நாளை (அக்டோபர் 10) குடும்பத்தினருடன் கொண்டாட சென்னையில் இருந்து அன்னியூருக்கு சரஸ்வதி திங்கள்கிழமை வந்தார். இதையறிந்து, கார்த்திவேல் பிறந்த நாள் கேக் வாங்கிக் கொண்டு, சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டார். அன்னியூரில் உள்ள சரஸ்வதியின் வீட்டு இரவு 11.30 மணியளவில் வந்தார்.

நள்ளிரவு 12 மணியளவில் பிறந்த நாளை கொண்டாட குடும்பத்தினர் ஆயத்தமாயினர். அப்போது, சரஸ்வதியும், கார்த்திவேலும் ஓர் அறையில் தனியாக பேசிக்கொண்டிருந்தனர். ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த பேச்சின்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற கார்த்திவேல், பாதுகாப்புப் பணிக்காக தான் வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து சரஸ்வதியின் மார்பில் இரு முறை சுட்டதில் அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினத்தந்தி: 'தமிழகத்தில் யாருடைய சொத்துகளும் பாதுகாப்பாக இல்லை'

பத்திரப்பதிவு துறையில் உள்ள சொத்து ஆவணங்கள் எல்லாம் சேதமடைந்த நிலையில் உள்ளது என்றும், தமிழகத்தில் யாருடைய சொத்துகளும் பாதுகாப்பாக இல்லை என்ற நிலை நிலவுவதாகவும் ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"பத்திரப்பதிவு அலுவலகத்தில் சொத்துப்பத்திரங்கள் எதுவும் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. அவை அனைத்தும் சேதமடைந்த நிலையில் உள்ளது. சேதமடைந்த பத்திரத்தில் உள்ள விவரங்களை எல்லாம் மாற்றி, புதிய பத்திரத்தை அதிகாரிகள் உருவாக்குகின்றனர். இதில் மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது"ஐகோர்ட்டில் பூபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார் என்கிறது அந்த செய்தி.

இந்த வழக்கில் நீதிபதி கிருபாகரன், "சார்-பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் அடிப்படையிலேயே, சொத்து யாருடையது என்று இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது. ஏழைகள் சிறுக சிறுக பணத்தை சேர்த்து ஒரு நிலத்தை வாங்குவதற்கு முன்பு, பதிவாளர் அலுவலகத்தில் தான் சொத்து தொடர்பான வில்லங்க சான்றிதழ்களை பெறுகின்றனர்.

அப்படிப்பட்ட ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என்றால், மக்கள் யாரிடம் போய் தங்களது சொத்து விவரங்களை கேட்பார்கள்?. தமிழகத்தில் யாருடைய சொத்துகளும் பாதுகாப்பாக இல்லை என்ற நிலை தான் தற்போது உள்ளது. பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய சொத்து ஆவணங்கள் எப்படி சேதமடைகிறது? அதிகாரிகள் மனச்சாட்சியுடன் பணியாற்றினால், இதுபோன்ற நிலை ஏற்படாது" என்று கருத்து தெரிவித்தார் என்கிறது அந்நாளிதழ்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் : ‘ஒடிசாவில் கரையை கடந்தது 'டிட்லி' புயல்'

படத்தின் காப்புரிமை Getty Images

மணிக்கு 126 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய டிட்லி புயல் இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் ஓடிசா மாநிலத்தில் உள்ள கோபால்பூர் அருகே கரையை கடந்ததாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் வெளியிட்டுள்ளது.

புயல் கரையை கடக்க தொடங்கியதில் இருந்து அப்பகுதியில் மிகவும் வேகத்துடன் காற்று வீசுவதாகவும், கடும் மழை பெய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

டிட்லி புயல் காரணமாக ஏறக்குறைய 3 லட்சம் மக்கள் அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இருந்து புதன்கிழமையன்று மாநில அரசால் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டதாக அந்த செய்தி மேலும் தெரிவித்துள்ளது.

மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்த செய்தி, புயல் பாதிப்பால் எந்த உயிரிழப்பும் ஏற்படக்கூடாது என்பதை நோக்கமாக கொண்டு பணிகள் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :