தி க்வின்ட் செய்தி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

  • 11 அக்டோபர் 2018
ராகவ் படத்தின் காப்புரிமை THEQUINT

தி க்வின்ட் செய்தி தளத்தை நடத்தும் குவின்டிலியன் மீடியா லிமிட்டட் நிறுவனத்தின் அலுவலகம், அதன் உரிமையாளரான ராகவ் பால் என்பவரது இல்லம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.

இந்த அலுவலகம் டெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ளது. இதன் ஒரு மாடியில் தேடுதல் நடத்தியதாகவும், ஒரு மாடியில் சர்வே நடத்தியதாகவும் இந்த சோதனைக்குத் தலைமை வகித்த ஓர் அலுவலர் தெரிவித்தார்.

அத்துடன் இந்நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி ரீத்து கபூரின் இல்லத்துக்கும். இந்த கார்ப்பரேட் குழுமத்தை சேர்ந்த க்வின்டைப் என்ற நிறுவனத்துக்கும், குவின்டலியன் மீடியா பங்கு வைத்திருக்கும் நியூஸ்மினிட் செய்தி நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகத்துக்கும் வருமான வரித்துறை அலுவலர்கள் சென்றனர்.

இதுதொடர்பாக எடிட்டர்ஸ் கில்டுக்கு ராகவ் எழுதியுள்ள அறிக்கையில், "இன்று காலை நான் மும்பையில் இருந்தபோது, வருமான வரித்துறை அதிகாரிகள் பலர் என் இல்லத்திற்கும், அலுவலகத்திற்கும் சென்றுள்ளனர். முறையாக வருமான வரியை செலுத்தியுள்ளோம். தேவையான நிதி ஆவணங்களை வழங்குவோம்" என்று தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"செய்தி வெளியிடுவது தொடர்பான எந்த விவரங்களையும், இ மெயில்களையும், ஆவணங்களையும் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். அப்படி ஏதேனும் அவர்கள் செய்தால், வலுவான உதவியை நாடுவோம்" என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வருமான வரித்துறை அதிகாரிகள், அவர்களின் மொபைலில் எந்த ஆவணத்தையும் புகைப்படம் எடுக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இது ஊடக சுதந்திரத்தை முடக்கும் பா.ஜ.கவின் முயற்சி என்று கூறியுள்ளார்.

ஊடக அலுவலகங்களில் சோதனை நடத்தி, துன்புறுத்தி, ஒடுக்க வேண்டும் என்பதே பா.ஜ.கவின் நோக்கம் எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தி பிரின்ட் செய்திதளத்தின் நிறுவனர் சேகர் குப்தா, இது தொடர்பாக அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

"உள்நோக்கத்துடன் கூடிய வருமான வரிச் சோதனைகளும், சர்வேக்களும் ஊடக சுதந்திரத்தை மோசமாக பாதிக்கும். அரசு இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது" என்று எடிட்டர்ஸ் கில்டு என்ற பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :