பிறமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகிறதா குஜராத்?

  • 12 அக்டோபர் 2018
குஜராத் படத்தின் காப்புரிமை SHAILESH CHAUHAN

20 வயதான சுமித் கதெரியா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது கிராமத்தில் இருந்து வெளியேறி, வேறு இடத்தில் வேலை தேடினார். வறுமையால் பள்ளியை பாதியில் விடவேண்டிய சூழல் ஏற்பட்டதையடுத்து அவருக்கு வந்த முதல் யோசனை வேலை தேட வேண்டும் என்பதுதான். கான்பூரில் பல்புர் கிராமத்தை சேர்ந்த அவர், குஜராத் காந்திநகரில் தஹேகமில் உள்ள பேக்கரியில் பணிபுரிய தொடங்கினார்.

பிரதமர் நரேந்திர மோதி பிறந்த மாநிலமான குஜராத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக இன்று சுமித் நிற்கிறார்.

தஹேகமில் ஒரு வாடகை வீட்டில் இருந்த அவரை, 24 மணி நேரத்துக்குள் குஜராத் மாநிலத்தை விட்டு வெளியேறவில்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஒரு சிலர் அச்சுறுத்தியுள்ளனர். இவருக்கு இன்னும் ஊதிய பாக்கி வரவேண்டியுள்ளதால், அவர் சொந்த கிராமத்துக்கு செல்லாமல் உள்ளார்.

"இங்கு பாதுகாப்பில்லாமல் உணர்கிறேன். இங்கிருந்து எவ்வளவு விரைவாக செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாக செல்ல வேண்டும்" என்று பிபிசி குஜராத்தியிடம் பேசிய சுமித் தெரிவித்தார்.

செப்டம்பர் 28, 2018ஆம் ஆண்டு, 14 மாத பெண் குழந்தையை பாலியல் வல்லுறவு செய்ததாக பிகாரை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போதில் இருந்து பிற மாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்த கைதிற்கு பிறகு, குடியேறிகளாக வந்த தொழிலாளிகள் பலரும் மாநிலத்தின் பல பகுதிகளில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

அப்படி ஒர அனுபவத்துக்குதான் சுமித்தும் உள்ளாகியுள்ளார். அக்டோபர் 6ஆம் தேதி அவர் வீட்டிற்கு ஒரு கும்பல் சென்றுள்ளது. இதுகுறித்து சுமித் விவரிக்கையில், "அவர்கள் என் சொந்த ஊர் எது என்று கேட்டனர். நான் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவன் என்று கூறினேன். உடனே அவர்கள் என்னை அடிக்க ஆரம்பித்தனர். 24 மணி நேரத்துக்குள் என் இடத்தை காலி செய்ய வேண்டும் என்றனர்."

இதனை கேள்விபட்ட சுமித்தின் தாய், உடனடியாக அவரை சொந்த ஊருக்கு வரும்படி கூறியுள்ளார். "என்னிடம் திரும்பிப் போக பணம் இல்லாததால் இங்கேயே தங்கியுள்ளேன்" என்று சுமித் தெரிவிக்கிறார்.

மாதம் 7,500 ரூபாய் ஊதியம் பெறும் அவர், 6,500 ரூபாயை தன் வீட்டுக்கு அனுப்புகிறார். "இதுதான் என் குடும்பத்தின் மொத்த வருமானமும்" என்கிறார் சுமித். குஜராத்தில் இருந்து வேலை பார்க்க வேண்டும் என்று நினைத்தாலும், அவர் அங்கிருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேறுகிறார். இந்த வருமானத்தை நம்பியே அவரது குடும்பம் இருந்தது. மேலும், அவரது தம்பியையுடம் தங்கையையும் இவரே படிக்க வைக்கிறார்.

சுமித்துக்கு இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்பதே ஆசை. ஆனால், அது நிறைவேறாமல் போனது. சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட அவர் தொழிற்சாலைகளில் வேலை செய்ய முடிவெடுத்தார்.

சுமித் மாதிரி பலரும் குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், இந்தி மொழி பேசும் மாநிலங்களான உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து வந்து தாக்குதலுக்கு உள்ளாகும் தொழிலாளர்கள், அம்மாநிலத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை.

வன்முறை

பிகாரை சேர்ந்த 19 வயது இளைஞன், 14 மாத குழந்தையை பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குற்றஞ்சாட்டப்பட்டவர் ஹிம்மத்நகரில் பணிபுரிந்து வந்தார். செப்டம்பர் 28ஆம் தேதி இந்த சம்பவம் நடக்க, அன்றே அவர் சபர்கந்தா போலீசால் கைது செய்யப்பட்டார்.

பிற மாநிலத்தவர்களுக்கு தொழிற்சாலைகளில் வேலை வழங்குவதுதான் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என காங்கிரஸ் எம்.எல்.ஏ அல்பேஷ் தாக்கொர் கூறியதையடுத்து இந்த விவகாரம் பெரிதானது.

படத்தின் காப்புரிமை ALPESH THAKOR / FACEBOOK
Image caption காங்கிரஸ் எம்.எல்.ஏ அல்பேஷ் தாக்கொர்

அப்போதில் இருந்து, வன்முறையை தூண்டியது, காங்கிரஸ் கட்சியும் முக்கியமாக அல்பேஷ் தாக்கொரும்தான் என ஆளும் பா.ஜ.க குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், இதனை மறுத்துள்ள காங்கிரஸ், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பா.ஜ.கவை வலியுறுத்தியுள்ளது.

எனினும், வன்முறை பரவியபோது, ஃபேஸ்புக் நேரலைகளில் பேசிய அல்பேஷ், தங்கள் ஆதரவாளர்களை அமைதியாக இருக்கக் கூறியதோடு, பிற மாநில தொழிலாளர்களை தாக்குவதை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சபர்கந்தா, வட குஜராத்தில் இருக்கும் மஹசனா, அகமதாபாத்தின் நகர்புற மற்றும் கிராமப்புற பகுதிகள், காந்திநகர் என பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய டி ஜி பி ஷிவானந்த் ஷா, இதுபோன்ற குற்றங்களை இனி பொறுத்துக்கொள்ளப்படாது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக 57 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வண்முறை பரப்பியத்தற்காக 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அமைச்சர் பிரதீப்சின்ஹ ஜடேஜா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பிற மாநில தொழிலாளர்களும் அவர்களது வறுமையும்

வன்முறையில் இருந்து தப்பித்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுமார் 60 இளைஞர்கள், அகமதாபாத்தில் உள்ள வஸ்த்ரல் பகுதியில் ஒரு இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதில் பலரும் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த சில வருடங்களாக குஜராத்தில் வேலை செய்து வந்தனர்.

அக்டோபர் 6ஆம் தேதியன்று இவர்களை சிலர் தாக்கியுள்ளனர். கண்ணத்தில் அறைந்து, அம்மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு மிரட்டப்பட்டுள்ளனர். "என் கன்னத்தில் அறைந்து குச்சியால் அடித்தார்கள். நான் எந்த மாநிலத்தை சேர்ந்தவன் என்று கேட்டார்கள். நான் உத்தரப்பிரதேசம் என்று கூறியதும், என்னை அடிக்க ஆரம்பித்தார்கள். எனக்கு இப்போது என் வீட்டிற்கு செல்ல வேண்டும்" என்று கூறுகிறார் உ.பியின் பவ்னிபுரா கிராமத்தை சேர்ந்த ஹரிகிஷன் குஷ்வா.

படத்தின் காப்புரிமை SHAILESH CHAUHAN

கான்பூரை சேர்ந்த 19 வயதான அன்ஷூ குமாரிடம் பேசினோம். எட்டாம் வகுப்பை பாதியில் விட்ட அவர், அருகில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்கிறார். அவர் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் நிலையான வருமானம் இல்லை. விவசாயத்திற்கு நீரும் இல்லை, குஜராத்தில் இருப்பதுபோல எந்த வேலையும் அங்கு இல்லை. நான் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்கிறேன்" என்றார்.

அந்த விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த 40 பேரிடம் பிபிசி குஜராத்தி குழு பேசியது. அவர்கள் யாருமே, அகமதாபாத்தின் பிரதான சந்தைக்கு சென்றதில்லை. திரையரங்கத்திற்கும் சென்றதில்லை. "நாங்கள் வேலை செய்வோம், வீட்டிற்கு சென்று, சமைத்து சாப்பிட்டு, தூங்கிவிடுவோம். அடுத்த நாள் எழுந்து மீண்டும் வேலைக்கு செல்வோம். இதுதான் வாடிக்கை" என்கிறார் கான்பூரை சேர்ந்த ராகுல் குமார்.

50 வயதான போலா திவாரி, மூன்று தலைமுறைகளாக

குஜராத்தில் வசித்து வருகிறார். 70 ஆண்டுகளுக்கு முன், இவரது தாத்தா, கான்பூரில் இருந்துவந்து இங்கு குடியேறிவிட்டார். குஜராத்தின் முன்னேற்றம் என்பது குடியேறிகளாக வரும் கூலி தொழிலாளர்களால்தான் என்கிறார் திவாரி.

"நல்ல பணியாற்றலை இந்த தொழிலாளிகள் அளிக்கிறார்கள். இதனால்தான் தொழிற்சாலைகள் வளம்பெற்று, இந்தியாவின் முன்னனி மாநிலங்களில் ஒன்றாக குஜராத் இருக்க வழிவகை செய்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

இந்தக்கூலி தொழிலாளர்கள்தான், அவர்கள் வாழுமிடம் அருகில் உள்ள உள்ளூர் சந்தைகளை விருத்தியடைய செய்கின்றனர். உதாரணமாக, சனந்தில் இருக்கும் போட் கிராமத்தின் பொருளாதாரம் குடியேறிகளின் எண்ணிக்கை குறைவால் சரிந்துள்ளது என்றும் திவாரி கூறுகிறார்.

நிரம்பி வழிந்த பேருந்து, ரயில் நிலையங்கள்

உத்தர் பாரதீய விகாஸ் சங்கதன் என்ற அமைப்பு குஜராத் மாநிலத்தில் உள்ள பிற மாநில தொழிலாளர்களின் நலனுக்காக செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பின் கணக்கீடுபடி, குஜராத்தில் இருந்து தன் சொந்த ஊர்களுக்கு இதுவரை 80,000 பேர் திரும்பி சென்றதாக கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை SHAILESH CHAUHAN
Image caption நிரம்பி வழிந்த பேருந்து நிலையங்கள்

வன்முறை சம்பவங்கள் தொடங்கியதில் இருந்து ரயில்களிலும் பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததாக இந்த அமைப்பின் தலைவர் ஷ்யாம் தாக்கூர் தெரிவித்தார்.

அப்படி செல்லும்போது, 56 பேர் மட்டுமே அமரக்கூடிய பேருந்தில், 150 பேர் பயணம் செய்துள்ளனர்.

ரயிர் நிலையத்தை நேரில் பார்வையிட்டார் அகமதாபாத் கலெக்டர் விக்ராந்த் பாண்டே. "சிலர் விழாக்களுக்காக தங்கள் ஊருக்கு சென்றனர், ஆனால் சிலர் இங்கிருக்க அஞ்சி இங்கிருந்து சென்றுவிட்டனர். அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முயற்சித்து, குஜராத்தில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை உறுதி செய்ய முயற்சித்தோம்" என்று அவர் தெரிவித்தார்.

இயல்பு நிலை திரும்புகிறதா?

பிற மாநிலத் தொழிலாளர்களை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக குஜராத் தொழில் வணிக சபை மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. மாநிலத்தில் உள்ள தொழிலாளர்களில் சுமார் 30 சதவீதம் பேர் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று இந்த சபை மதிப்பிட்டுள்ளது.

"மாநிலத் தலைவர்கள், அரசு, போலீஸ் ஆகியோரின் முயற்சியால் அங்கே வாழ முடியும் என்ற நம்பிக்கை மீண்டும் துளிர்த்த பிறகு, ஏராளமான தொழிலாளர்கள் வெளியேறும் எண்ணத்தைக் கைவிட்டு மாநிலத்திலேயே தங்கிவிட்டனர்" என்று இச்சபையின் தலைவர் ஜெய்மின் வாசா பிபிசி குஜராத்தியிடம் தெரிவித்தார்.

முதன்மையாக, மாநிலத்தின் வட பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் தொழிலாளர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றன என்று கூறிய அவர், ஆனால் இந்த பிரச்சனையால் ஒரு தொழிலகமும் மூடப்படவில்லை என்கிறார்.

படத்தின் காப்புரிமை JULIE RUPALI

பிற மாநிலங்களில் இருந்து குஜராத்துக்கு குடிபெயர்வு நடக்கும் விதம் பற்றி ஆய்வு செய்திருக்கிறார் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்திராகாந்தி தேசிய பழங்குடி பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் டாக்டர் ஆனந்த் சுகந்தே.

பிபிசியிடம் தொலைபேசி மூலம் பேசிய அவர், மும்பையில் இருந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மீது அரசியல் கட்சிகள் தாக்குதல் தொடுக்கத் தொடங்கிய பிறகு அவர்கள் மகாராஷ்டிரத்தில் இருந்து குஜராத்துக்கு குடிபெயரத் தொடங்கினர் என்றார். "2008-ம் ஆண்டு முதல் இப்படி ஏராளமான தொழிலாளர்கள் குஜராத்துக்கு வந்தனர்," என்று கூறினார் அவர்.

குஜராத்துக்கு குடிபெயர்ந்துள்ள பிற மாநிலத் தொழிலாளர்களில் குறைந்தது 38.93 சதவீதம் பேர் சூரத் நகரில் வேலை செய்வதாகவும், அதற்கு அடுத்தபடியாக 18.29 சதவீதம் பேர் அகமதாபாத்தில் வேலை செய்வதாகவும் தாம் வெளியிட்ட ஓர் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் சுகந்தே.

"மகாராஷ்டிரத்தை ஒப்பிடும்போது, குஜராத் பாதுகாப்பான இடம் என்று கருதப்பட்டதால் தொழிலாளர்கள் அங்கு சென்றனர்" என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்