"கடந்த ஓராண்டில் நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்குள் வந்ததேயில்லை": தமிழக ஆளுநர் மாளிகை

  • 12 அக்டோபர் 2018
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் படத்தின் காப்புரிமை HTTP://WWW.TNRAJBHAVAN.GOV.IN/
Image caption "கடந்த ஓராண்டில் நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்குள் வந்ததேயில்லை": தமிழக ஆளுநர் மாளிகை

நிர்மலாதேவி விவகாரத்திற்கும் தமிழக ஆளுநருக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும் கடந்த ஓராண்டில் நிர்மலாதேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததில்லை என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

நக்கீரன் இதழில் வெளியான கட்டுரை குறித்து கடும் கண்டனங்களையும் ஆளுநர் மாளிகை தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து வாரமிருமுறை வெளியாகும் நக்கீரன் இதழில், கல்லூரி பேராசிரியையான நிர்மலா தேவி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக கூறப்படும் விவகாரம் குறித்த செய்தியில், ஆளுநர் மாளிகையும் தொடர்பு படுத்தப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பேரில், நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், சில தினங்களுக்கு முன்பாக கைதுசெய்யப்பட்டார்.

Image caption ஆளுநரின் பணிகளைச் செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி, அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 124வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதற்கு தமிழகத்தில் பரவலாக கண்டனம் எழுந்தது. அரசியல் தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கோ, ஆளுநர் மாளிகைக்கோ எவ்விதத் தொடர்பும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறையில் நிர்மலா தேவி அளித்துள்ள வாக்குமூலமே உண்மையை வெளியில் கொண்டுவரும் என்றும், மாநிலத்தின் முதல் குடிமகனை மிக மோசமாகவும், கோழைத்தனமாகவும் ஆபாசமாகவும் தாக்குவதை நிறுத்துவதற்காக பெரும் யோசனைக்குப் பிறகு சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் ஊடக சுதந்திரம் பறிபோனதாக சொல்வது நகைப்பிற்குரியது என்றும் ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

Image caption கடலூரில் பயணம் மேற்கொண்டபோது தமிழக ஆளுநர் நடத்திய கூட்டம்

'எல்லா விஷயங்களுக்குமே ஓர் எல்லையுண்டு. இந்த விவகாரம் வெளிவந்து சட்ட நடவடிக்கை துவங்கியதிலிருந்து கடந்த ஆறு மாதங்களாக கண்ணியத்திற்குரிய மௌனத்தை ஆளுநர் மாளிகை கடைப்பிடித்து வருகிறது. இப்போது நிர்மலா தேவி விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.

எல்லாப் புலனாய்வும் முடிந்துவிட்ட நிலையில், செப்டம்பர் மாதம் வெளியான நக்கீரன் இதழில் மீண்டும் மஞ்சள் பத்திரிகைத்தனம் வெளிப்பட்டது அதிர்ச்சிக்குரியது.

புலனாய்வு இதழியலை மேற்கொள்வதாக சொல்லிக்கொள்பவர்கள் நிர்மலா தேவி காவல்துறையிடம் கொடுத்த வாக்குமூலத்தைக்கூட பரிசீலிக்கவில்லை.

அந்தக் கட்டுரையை வெளியிட்டதன் மூலம் இதழியல் நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் இருந்த அலட்சியம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.

கடந்த ஓராண்டில் திருமதி நிர்மலா தேவி ராஜ் பவனுக்குள் நுழைந்ததேயில்லையென்பதுதான் உண்மை.

Image caption செய்தியாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை தமிழக ஆளுநர் தட்டியது பெரும் சர்ச்சையை எழுப்பியது.

ஆளுநருடனோ, ஆளுநரின் செயலருடனோ அல்லது ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் எந்த ஒரு அதிகாரியுடனோ நிர்மலா தேவிக்கு எவ்விதப் பழக்கமும் இல்லை.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடந்த அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஆளுநர் மதுரை சென்றபோது பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்குப் போகவேயில்லை. அந்த விடுதியில் அவர் தங்கவேயில்லை.

ஆளுநர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்குப் போன எந்தத் தருணத்திலும் அவருடைய செயலர் உடன் சென்றதில்லை.

நக்கீரன் இதழில் வந்திருப்பது போன்ற ஒரு கட்டுரையை உண்மையின் மீது நல்லவற்றின் மீதும் வெறுப்பு கொண்ட ஒரு பத்திரிகையாளரே எழுதியிருக்க முடியும்.

படத்தின் காப்புரிமை Facebook

இம்மாதிரியான பொய்யையும் மஞ்சள் இதழியலையும் விஷயங்களை ஆராயாது மரியாதைக்குரியவர்கள் ஆதரிப்பது வருத்தத்திற்குரியது.

அரசு அதிகாரத்தை அதீதமாக பயன்படுத்துவதை சிறிதளவுகூட ஆளுநர் மாளிகை ஆதரிக்காது. தொடர்ச்சியாக செய்யப்பட்டுவரும் அவதூறுகளால்தான் சட்டத்தின்படி புகார் கொடுக்கப்பட்டது.

நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆளுநருக்கு விடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

இம்மாதிரியான ஓர் உயர்ந்த பதவியின் கண்ணியத்தைக் குலைக்கும் செயல்களால் ஆளுநர் மாளிகை பணிந்துவிடாது' என ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

நக்கீரன் இதழின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை ஆளுநர் மாளிகை சுமத்தியிருக்கும் நிலையில், அந்த இதழின் கருத்தைக் கேட்டபோது, விரைவில் அந்த இதழின் ஆசிரியர் கோபால் இது குறித்து தெரிவிப்பார் எனக் கூறப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: