நான் ஏன் விந்து தானம் செய்கிறேன்?: பொறியியல் மாணவனின் கதை #HisChoice

விந்தணு

2012 இல் வெளிவந்த இந்தித் திரைப்படம் "விக்கி டோனர். அதில், விந்து தானம் செய்வதுதான் கதைக்கரு. இந்தக் கதை நிதர்சன வாழ்க்கையில் தொடரந்து விந்து தானம் செய்யும் இளைஞனின் கதை.

விந்து நன்கொடை கொடுக்கப்போகும் இடம் மிகவும் சுகாதாரமானதாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? ஆனால் உண்மையில் அப்படி இல்லை. ஒரு கழிவறையில் தான் விந்துவை வெளியேற்றி ஒரு பாட்டிலில் விடவேண்டும். சுவரை ஒட்டிய ஒரு அலமாரி. வாஷ்பேஷின், தண்ணீர் குழாய் கொண்ட ஒரு சாதாரண கழிவறை அது.

விந்து நன்கொடை வழங்க முதன்முறையாக நான் சென்றபோது, எனக்கு சங்கடமாக இருந்தது. எனது வீட்டில் ஒரு அறையில் சுய இன்பத்தின் மூலம் விந்தை வெளியேற்றுவது போல அது இயல்பான மகிழ்ச்சி தரும் அனுபவமாக இல்லை. ஆய்வகம் ஒன்றில் உள்ள கழிவறையில் சுய மைதுனம் செய்து விந்தை வெளியேற்றுவது என்பது மனதிற்கு இனிய அனுபவமாக இருக்கும் என்பற்கான வாய்ப்பு இல்லை.

கழிவறையில் என் பெயர் எழுதி ஒட்டப்பட்ட ஒரு பிளாஸ்டிக் குடுவை வைக்கப்பட்டிருந்தது. நான் சுய மைதுனம் செய்து, விந்தை அதில் நிரப்பிக் கொடுத்தேன் அதற்கு 400 ரூபாய் கொடுத்தார்கள்.

உங்களிடம் அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளும் நான் 22 வயது பொறியியல் கல்லூரி மாணவன். ஆச்சரியமாக இருக்கிறதா?

ஒரு கல்லூரி இளைஞனுக்கு காதலி இருப்பதும் அவருடன் உல்லாசமாக இருப்பதும் பொதுவாக இயல்பானதாக கருதப்படும் வயதில் நான் விந்து தானம் செய்கிறேன் என்பது திகைப்பாக இருக்கிறதா?

பிபிசியின் #HisChoice இந்திய ஆண்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைக் கதைகள். இந்த சிறப்புத் தொடர் உங்களை சிந்திக்கத் தூண்டும் ஓர் ஆக்கபூர்வமான தொடர். மற்றவர்களை பார்க்கும் உங்கள் கோணத்தை மாற்ற உதவும் தொடர் என்று உறுதி கூறுகிறோம்.

இவை 'நவீன இந்திய ஆண்கள்' பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், சவால்கள், அவர்களின் விருப்பங்கள், தெரிவுகள், மற்றவர்கள் அவர்களை எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு புதிய பார்வையைக் கொடுக்கும் தொடர் இது.

ஆனால் காதலியே இருந்தாலும் சரி, உடலுறவு என்பது இயல்பானதல்ல. ஆனால், ஒரு இளைஞனின் உடல் தேவைகள் சுய இன்ப பழக்கத்திற்கு இட்டுச் செல்லும் என்பது இயல்பானது.

சிற்றூர் ஒன்றில் பிறந்து வளர்ந்த எனக்கு திருமணத்திற்கு முன் உடலுறவு என்பதை கற்பனைக்கூட செய்து பார்க்க முடியாது. இளம் வயதினர் அனைவருக்கும் உடலுறவு மற்றும் பாலியல் ரீதியிலான ஈர்ப்புகள் இருக்கும் என்றாலும், திருமணத்திற்கு முன் அதை எதிர்பார்ப்பது தவறு என்ற எண்ணமே பொதுவானது, அதே மனநிலையில் தான் நானும் இருக்கிறேன்.

எனவே சுய இன்ப பழக்கம் இருந்தாலும், முதல்முறையாக விந்து நன்கொடை கொடுக்க கழிவறைக்கு சென்றபோது அசூசையே ஏற்பட்டது. அதெல்லாம் சரி, நான் ஏன் விந்து தானம் செய்தேன் என்று கேட்கிறீர்களா?

விந்து நன்கொடை பற்றிய விஷயத்தை ஒரு பத்திரிகையில் படித்தேன். ரத்த தானத்தைப் பற்றி அறிந்திருந்த எனக்கு விந்து தானம் என்பது ஆர்வமூட்டும் விஷயமாக இருந்தது. எனவே அதைப் பற்றி கவனமாக படித்தேன்.

ரத்த தானம் போன்ற ஒன்றுதான் என்பதையும், ரத்தத்தைப் போலவே, அதுவும் இயல்பாக உடலில் ஊறுவதுதான். ரத்த தானம் செய்யாவிட்டாலும், ரத்த அணுக்கள் எப்படி குறிப்பிட்ட காலத்தில் உருவாகி, பிறகு அழிந்துக் கொண்டே இருக்குமோ அதே போன்று, ஒரு ஆண், விந்தை வெளியேற்றாவிட்டாலும் அது தானாகவே உருவாகி, வெளியேறும் என்பதை தெரிந்துக் கொண்டேன்.

எனவே ரத்த தானம் கொடுப்பதைப் போன்றதே விந்து தானமும் என்பதையும் புரிந்துக் கொண்டேன்.

இருந்தாலும், ரத்த தானம், கண் தானம் போன்ற நன்கொடைகள் இயல்பாக எடுத்துக் கொள்ளப்படுவதைப் போல விந்து தானம் இயல்பானதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஏனெனில் இது ஒரு குழந்தையை உருவாக்குவது, பாரம்பரியம், கலாசார உணர்வுகளுடனும், தனிமனிதர்களின் மனதின் உணர்ச்சிகளுடன் தொடர்புடையது.

விந்து தானம் தொடர்பான அந்த கட்டுரைகளில் இருந்து எனக்கு பரிச்சயமில்லாத பல விஷயங்களை தெரிந்துக் கொண்டேன். நம் நாட்டில் லட்சக்கணக்கான தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சனை இருக்கிறது.

அதற்கு காரணங்கள் மாறுபட்டாலும், விந்துவின் தரம் குறைவு என்பதும் ஒரு முக்கியமான காரணம்.

அந்த நிலையில் மருத்துவ ரீதியாக பல முயற்சிகளை மேற்கொண்டு, இறுதியில் விந்து தானம் பெற்று கருவுறலாம் என்ற முடிவுக்கு பலர் வந்துவிடுகின்றனர். இந்தப் போக்கு அதிகரித்து வருவதால் விந்து நன்கொடை என்பது அதிகரித்து வருகிறது என்பதை தெரிந்துக் கொண்டேன்.

டெல்லியில் நான் வசிக்கும் இடத்தில் விந்து வங்கி ஒன்று இருப்பதையும் தெரிந்துக் கொண்டேன். இதுபோன்ற விஷயங்களை தெரிந்துக் கொண்டதன் தொடர்ச்சியாக, சுய இன்பம் செய்து அந்த விந்துவை வீணாக்குவதற்கு பதிலாக ஏன் அதை நன்கொடையாக கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது.

இதைப் பற்றி மனதிற்குள்ளே அசை போட்டுக் கொண்டிருந்தேன். சரி ஒருமுறை அங்கு சென்று பார்த்துவிட்டு வரலாம் என்ற எண்ணம் தோன்றியது.

நான் சிவப்பானவன், நல்ல உயரமும், பருமனும் கொண்ட இளைஞன், கூடைப்பந்து விளையாடுபவன். பார்த்த முதல் தோற்றத்திலேயே பிறரை கவர்பவன் என்று என்னைப் பற்றி நான் சொல்வது மிகைப்படுத்தப்படுவதாக உங்களுக்கு தோன்றினாலும் அதுதான் உண்மை.

மனதில் தோன்றிய எண்ணத்தை செயல்படுத்தும் முடிவில் பத்திரிகையில் பார்த்த முகவரிக்குச் சென்று அங்கிருந்த மருத்துவரை சந்தித்தேன். என்னுடன் பேசிய அவருக்கு என்னுடைய தோற்றத்தில் திருப்தி ஏற்பட்டது. ஆனால் வெறும் தோற்றம் மட்டுமே விந்து நன்கொடைக்கு போதுமானதல்ல என்பதை மருத்துவரின் தொடர் கேள்விகள் உறுதிப்படுத்தின.

விந்து தானம் கொடுப்பதற்கு என்னுடைய வெளித் தோற்றம் மட்டுமே போதுமானதல்ல. என்னுடைய உடல் தகுதிகளும் சரிபார்க்கப்படும் என்பது முதலில் எனக்கு ஆச்சரியமளித்தது.

எனக்கு சில மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று மருத்துவர் சொன்னார். நான் ஒப்புக் கொண்டேன். என்னுடைய ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, எச்.ஐ.வி., நீரிழிவு, ரத்த அழுத்தம் உட்பட வேறு ஏதாவது பிரச்சனைகள் இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்டது.

எடுக்கப்பட்ட எல்லா பரிசோதனைகளும், நான் விந்து தானம் கொடுக்க தகுதியானவன் என உறுதி செய்தன.

பரிசோதனைகள் எடுக்கப்பட்ட அதன் முடிவுகள் வர ஓரிரு நாட்கள் ஆனது. தகுதியானவன் என்று தெரிவு செய்யப்பட்டதும், காலை ஒன்பது மணிக்கு விந்து வங்கிக்கு வருமாறு அழைப்பு வந்தது.

அங்கு சென்றதும், என்னுடைய தனிப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்ய ஒரு படிவம் வழங்கப்பட்டது. அந்த தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டது. அதன்பிறகு கழிவறைக்கு அனுப்பப்பட்டேன்.

பிறகு நான் சுய மைதுனம் செய்து, விந்தை அந்த பாட்டிலில் சேகரித்து வைத்துவிட்டு வெளியே வந்தேன், கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு திரும்பிவிட்டேன்.

நான் செய்த தானத்தால் ஒரு பெண் கருவுற முடியும் என்பது எனக்கு திருப்தியளித்தது.

ஒரு முறை தானம் கொடுத்த பிறகு அடுத்த மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் விந்து நன்கொடை வழங்கலாம். அதாவது 72 மணி நேரம் கழித்து மீண்டும் நான் விந்து தானம் வழங்க தகுதி பெறுவேன். இப்படியாக எனது விந்து தானம் தொடர்ந்தது.

சில மாதங்களில் எனக்குக் கொடுக்கப்படும் பணம் குறைவாக இருக்கிறதோ என்ற எண்ணம் மனதில் தோன்றியது. விக்கி டோனர் திரைப்படத்தில் விந்து தானம் செய்யும் கதாநாயகன் பெரிய செல்வந்தராகி விடுவார். உண்மையில் ஒரு முறை விந்து தானம் செய்யும் எனக்கு 400 ரூபாய் வழங்கப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை.

வாரத்திற்கு இருமுறை நான் விந்து தானம் கொடுத்து வாரம் 800 ரூபாயும், மாதம் 3200 ரூபாயும் சம்பாதிக்கிறேன். இது எனக்கு ஏமாற்றமாகவே இருக்கிறது.

ஆனால் மனதில் ஒரு எண்ணம் வந்துவிட்டால் சும்மா இருப்பேனா என்ன? நேராக விந்து வங்கிக்கு சென்று, விக்கி டோனர் திரைப்படத்தை குறிப்பிட்டு, எனக்கு மிகவும் குறைவாக பணம் கொடுப்பதாக பேசினேன்.

கம்பீரமான ஆணுக்கு உரிய எல்லாத் தகுதிகளையும் கொண்ட 22 வயது இளைஞனான எனக்கு இது அவமானம் என்று சீறினேன். ஆனால் அவர்கள் காட்டிய கணினித் திரை எனது கர்வத்தை பங்கமாக்கிவிட்டது.

விந்து தானம் செய்வதற்காக தங்கள் பெயரை பதிவு செய்துவிட்டு வரிசையில் காத்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையை பார்த்ததும் எனக்கு வாயடைத்துப் போய்விட்டது.

சரி, நான் ஒன்றும் விக்கி டோனர் திரைப்பட நாயகன் ஆயுஷ்மான் குரானா அல்ல, சாதாரண மனிதன் தானே என்று சொல்லி மனதை தேற்றிக் கொண்டேன்.

மேலும், பணம் குறைவாக கிடைத்தாலும், நான் செய்யும் செயல் ஆக்கப்பூர்வமானது என்று நினைத்து திருப்தியடைகிறேன். சரி, விந்தை பணத்திற்காக விற்பனை தானே செய்கிறாய், ஏன் விந்து தானம், விந்து நன்கொடை என்று சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா?

இவ்வளவு குறைவாக பணம் கொடுப்பதால்தான் இதை நன்கொடை என்று சொல்கிறார்களா? பார்க்கப்போனால் குழந்தை வேண்டுபவரின் விந்து தரமானதாக இல்லாததால் தானே நிறைய செலவு செய்து தானம் பெற்று, பல்வேறு மருத்துவ பரிசோதனைகள், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு என்று செயற்கை முறையில் கரு தரிக்கிறார்கள்?

விந்து என்பது இந்த தொழிலில் கருப்பொருளாக அல்லது மூலப்பொருளாக இருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் தேவை அதிகரித்திருப்பது போல, வழங்குதலும் அதிகரித்து விட்டது. எது எப்படியிருந்தாலும் விந்தை வீணாக்கக்கூடாது என்று எனக்கு தோன்றுகிறது.

நான் விந்து தானம் செய்யத் தொடங்கிய பிறகு, வீட்டின் தனியறையில் சுய இன்பம் செய்யும் பழக்கம் நின்று போய்விட்டது. அதையே ஒரு கழிவறையில் செய்து மற்றொருவரின் வாழ்க்கைக்கு உதவுவதற்காக கொடுக்கிறேன், அது எனக்கு ஓரளவு பணத்தையும் கொடுக்கிறது.

சரி, நான் எந்தவித தவறான வேலையும் செய்ய முடியவில்லை என்பது நன்றாக புரிந்தாலும், இதை வெளிப்படையாக, பெருமையாக என்னால் வெளியே சொல்ல முடியுமா?

அதாவது நான் செய்வது தவறில்லை, யாருக்கும் தீங்கு விளைவிக்கவில்லை. வெளியில் சொல்வதற்கு பயப்படவும் இல்லை, மாறாக ஒரு நல்ல காரியத்திற்கு பயன்படுகிறேன். ஆனால் நான் சொல்வதை புரிந்து கொள்ளும் அளவுக்கு நமது சமூகம் பக்குவமடைந்திருக்கிறதா?

நான் வெளிப்படையாக சொன்னால், அதைப் பற்றி எப்படி சிந்திப்பார்கள், என்ன பேசுவார்கள் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதற்காகத் தான் இதை வெளியில் சொல்ல தயங்குகிறேன்.

வெளிப்படையாக சொல்வது ஒருபுறம் இருக்கட்டும், இதை என் பெற்றோரிடமோ, குடும்பத்தினரிடமோ சொல்லவும் முடியாது என்றே தோன்றுகிறது. ஆனால் இது எனது நண்பர்கள் வட்டாரத்தில் தவறாகவோ, சமூகக் களங்கமாகவோ பார்க்கப்படுவதில்லை. என்னுடைய நண்பர்கள் சிலரும் விந்து நன்கொடை செய்கின்றனர்.

உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் சொல்வதுதான் பிரச்சனை. என்னுடைய காதலியிடம் சொல்வதிலும் எனக்கு எந்தவித சிக்கலும் இல்லை. எனக்கு இப்போது பெண் தோழியோ காதலியோ இல்லை.

நான் காதலிக்கும் பெண் நன்றாக படித்தவராகவும், எனது உணர்ச்சியை புரிந்து கொள்பவராகவும் இருக்கவேண்டும். ஆனால் தனது கணவன் விந்து தானம் செய்வதை மனைவியால் இயல்பாக ஏற்றுக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமே.

விந்து தானம் என்பது வேறு எதற்கும் அல்ல, ஒரு பெண்ணை கருவுறச் செய்வதற்கு மட்டுமே என்பது வெளிப்படையாக தெரியும் நிலையில், கணவன் தனக்கு மட்டுமே உரிமையானவன் என்ற நமது பாரம்பரிய, கலாசார எண்ணங்கள், தனது கணவன் விந்து தானம் செய்வதை ஏற்றுக் கொள்ளச் செய்யுமா என்பது சந்தேகமே. எனவே விந்து தானம் செய்ததை எனது மனைவியிடம் சொல்லமாட்டேன்.

இதில் மற்றொரு சுவராசியமான விஷயம் என்னவென்றால், விந்து தானம் பெற விரும்புபவர்கள், தானம் கொடுக்கும் ஆண் திருமணமாகதவராக இருந்தால் அதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். அதிலும் 25 வயதுக்கு குறைந்த இளைஞராக இருந்தால் இன்னும் சிறப்பு.

விந்து நன்கொடையாளர் என்ற தகுதி என் வாழ்நாள் முழுவதும் தொடரப்போவதில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் வாழ்நாள் முழுவதும் விந்து தானம் செய்யவும் முடியாது. திருமணமாகிவிட்டால் விந்து தானத்திற்கான வாய்ப்புகளும் அரிதாகிவிடும்.

விந்துக் கொடையாளர் என்று நான் அறியப்பட்டால், அது என் அம்மாவுக்கு அவமானத்தைக் கொடுக்கும் என்பதும் எனக்குத் தெரியும், அதோடு எந்தவொரு பெண்ணும் என்னை திருமணம் செய்துக் கொள்ள தயாராக இருக்கமாட்டார் என்பதையும் உணர்ந்திருக்கிறேன்.

இளைஞன் ஒருவனுக்கு சுய இன்ப பழக்கம் இருப்பது இயல்பானது என்பது தாயோ அல்லது மனைவியோ உணர முடியாத விஷயமா என்ன?

விந்து தானம் என்பது வெட்கப்படக்கூடிய அவமானகரமான விஷயம் என்றால், சுய இன்ப பழக்கம் மட்டும் தவறானதில்லையா? இரண்டுமே தவறில்லை என்றே நான் நினைக்கிறேன்.

இதை நான் வெளிப்படையாக சொல்ல முடியாததற்கு காரணம், இது சமூக களங்கமாக பார்க்கப்படும் என்பது மட்டுமே.

(டெல்லியில் வசிக்கும் மாணவர் ஒருவரின் வாழ்க்கை அனுபவத்தை பேசும் இந்த கட்டுரை இது. இந்த #HisChoice சிறப்புத் தொடர் பிபிசி செய்தியாளர் சுசீலா சிங்கால் தயாரிக்கப்பட்டது.)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பெண்களுக்கு ஏற்படும் பிசிஓடி பிரச்னை குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: