முதல்வர் மீதான ஊழல் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் - மேல்முறையீடு செய்கிறது அதிமுக

ஆதிமுக செய்தியாளர் சந்திப்பு

தமிழக நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் வழங்குவதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் புகார்களை மறுத்துள்ள அ.தி.மு.க, நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று இரவு சுமார் 9 மணியளவில் திடீரென செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்தனர்.

திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஏ.டி. ஜகதீஷ் சந்திரா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவிநாசிபாளையம் நான்கு வழிச் சாலை, திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் நான்கு வழிச் சாலை, மதுரை ரிங் ரோடு நான்கு வழிச் சாலை, வண்டலூர் - வாலாஜாபாத் ஆறு வழிச்சாலை, மற்றும் ராமநாதபுரம், விருதுநகர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களின் நெடுஞ்சாலை பராமரிப்புப் பணி ஆகிய பணிகளுக்கான ஒப்பந்தம் முதலமைச்சரின் உறவினர்கள் நடத்தும் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாக தி.மு.க. குற்றம் சாட்டியிருந்தது.

இது தொடர்பாக கடந்த ஜூன் 16ஆம் தேதியன்று தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையிடம் தி.மு.க. புகார் செய்திருந்தது.

இந்த விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக விசாரிக்காத நிலையில், நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிட வேண்டுமென தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் மாதத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், இந்த விவகாரத்தில் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டதாகவும் ஊழல் நடந்ததற்கான முகாந்திரம் ஏதும் இல்லையென்பதால், கண்காணிப்பு ஆணையரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த பதில் தனக்கு திருப்தியளிக்கவில்லையெனத் தெரிவித்தார்.

மேலும், அதிகாரத்தில் இருப்பவர்களின் கீழ் உள்ள எந்த அமைப்பும் நேர்மையான, சுதந்திரமான விசாரணையை நடத்த முடியாது என்பதால், வழக்கை சுதந்திரமான ஓர் அமைப்பிடம் ஒப்படைப்பது அவசியம் என்று கூறிய நீதிபதி, வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக மத்தியப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மத்திய புலனாய்வுத் துறை மூன்று மாதங்களுக்குள் முதற்கட்ட விசாரணைகளை நடத்தி முடிக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதில் குற்றம் நடந்திருப்பது உறுதிசெய்யப்பட்டால், சட்டப்படி மேற்கொண்டு நடவடிக்கையைத் தொடரலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை வரவேற்றுள்ளன.

இன்று பிற்பகலில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ். பாரதி, வெறும் 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்க வேண்டிய சாலையை 1,510 கோடி ரூபாய் செலவில் போடுவதற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

"ஒரு கிலோ மீட்டர் சாலையை புதிதாக போட 2 கோடியே 20 லட்ச ரூபாய்தான் அதிகபட்சமாக செலவாகும்.

ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலை ஏறத்தாழ 70 கி.மீ. நீளத்தைக் கொண்டது. இதற்கு 140 கோடிக்கு மேல் செலவாகாது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், முதல் கணக்கீட்டிலேயே 715 கோடி என்று சொன்னார்கள், பிறகு அதே ஒப்பந்தத்தை 1,515 கோடிக்கு உயர்த்தி தன்னுடைய சம்பந்திகளுக்குக் கொடுத்திருக்கிறார் முதல்வர்.

இந்தப் பணிகள் அனைத்தும் 3,150 கோடி ரூபாயில் முடிய வேண்டும். ஆனால், திட்டச் செலவை நான்காயிரத்து நானூறு கோடிக்கு உயர்த்தியிருக்கிறார்கள்." என ஆர்.எஸ். பாரதி குற்றஞ்சாட்டினார்.

நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் இரவு சுமார் 9 மணியளவில் திடீரென செய்தியாளர்களைச் சந்தித்போது, "இந்த விவகாரத்தில் ஊழலுக்கான முகாந்திரமில்லையென லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை அளித்த பிறகு நீதிமன்றம் இவ்வாறு சொல்லியிருப்பது ஏற்புடையதல்ல. மேல் முறையீடு செய்வோம்" என முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளருமான பொன்னையன் கூறினார்.

ஒரு கிலோ மீட்டர் சாலையை 2 கோடி ரூபாய் செலவில் போட்டுவிட முடியுமென்ற நிலையில், தமிழக அரசு 10 கோடி ரூபாய் அளித்திருப்பதாக தி.மு.க. குற்றம்சாட்டியிருந்தது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தேசிய சாலைப் போக்குவரத்து ஆணையம் 11 கோடி ரூபாய் வரை 1 கிலோ மீட்டர் சாலையை போடுவதற்கு அளித்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.

மேலும் 2009ல் வண்டலூர் - நெமிலிச்சேரி சாலையைப் போடுவதற்கு தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ மீட்டருக்கு 33 கோடி ரூபாய் அளிக்கப்பட்டதாகவும் இதற்கு ஏன் விசாரணை கோரவில்லையென்றும் பொன்னையன் கேள்வியெழுப்பினார்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மடத்துக்குளம் - பொள்ளாச்சி சாலைக்கு ஒரு கி.மீக்கு 11.22 கோடி ரூபாயும் கல்லகம் - கருப்பூர் சாலைக்கு ஒரு கி.மீக்கு 14.4 கோடி ரூபாயும் திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம் சாலைக்கு ஒரு கி.மீக்கு 14.74 கோடி ரூபாயும் திருச்சி - கல்லகம் சாலைக்கு ஒரு கி.மீக்கு 25.62 கோடி ரூபாயும் கொடுத்திருப்பதாக பொன்னையன் பட்டியலிட்டார்.

படத்தின் காப்புரிமை Creative Touch Imaging Ltd./NurPhoto via Getty Ima

இதைக் கேட்ட செய்தியாளர்கள், நீதிமன்றத்தில் இந்த வாதத்தை வைத்தீர்களா எனக் கேள்வியெழுப்பியபோது, பத்திரிகையாளர்கள்தான் பெரிய நீதிமன்றம் என்பதால் அவர்கள் முன்பாக இந்த விவரத்தைச் சொல்வதாக பொன்னையன் கூறினார்.

மேலும், தற்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதி, முன்னாள் அமைச்சர் ஜிஆர் எட்மன்டின் அக்கா மகன் என்ற காரணத்தால், தி.மு.க. ஆட்சியில் இந்த நீதிபதி அரசுத் தரப்பு வழக்கறிஞராக இருந்தார் என்பதால் இப்படி ஒரு தீர்ப்பை அளித்தார் என்று சொல்லப்போவதில்லையென்றும் பொன்னையன் கூறினார்.

முதலமைச்சரின் உறவினர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பது குறித்துக் கேட்டபோது, உறவினர் என்றால் யார் என்பதை 1962ல் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறிய பொன்னையன், சம்பந்தப்பட்ட அமைச்சர், அவரது பெற்றோர், குழந்தைகள், மனைவி, சகோதரர்கள், மாமனார், மருமகன்-மருமகள்கள், தந்தையின் இரண்டாவது மனைவி, அவருடைய குழந்தைகள் ஆகியோர்தான் உறவினர் என்ற வரையறையில் வருகிறார்கள். இந்த வரையறைக்குள் வருபவர்கள் யாருக்கும் ஒப்பந்தம் அளிக்கப்படவில்லையென்றும் பொன்னைய்யன் விளக்கமளித்தார்.

மேலும் தற்போது ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள ஆர்சிசிஎல் - கேஎம்சி ஜாயின்ட் வெஞ்சர் நிறுவனத்திற்கு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் பொன்னையன் கூறினார்.

உங்கள் பக்கம் உண்மை இருந்தால் சி.பி.ஐ. விசாரித்து அந்த உண்மையைச் சொல்லட்டுமே, ஏன் மேல் முறையீடு செய்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டபோது, பொய்வழக்கை அம்பலப்படுத்தவே மேல் முறையீடு செல்கிறோம் என்று அமைச்சர்கள் விளக்கமளித்தனர்.

நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தம் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டதும், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அதனை வரவேற்றன. செய்தியாளர் சந்திப்புகளையும் நடத்தின. இந்த நிலையில், இரவு எட்டே முக்கால் மணியளவில் திடீரென செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இந்த சந்திப்பு நடத்தப்பட்டது.

"பசுமையை அழித்துவிட்டு பசுமை சாலை அவசியமா?"

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
“பசுமையை அழித்துவிட்டு பசுமை சாலை அவசியமா?”

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: