முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்

பரிதி இளம்வழுதி படத்தின் காப்புரிமை TWITTER

முன்னாள் தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 58. உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பரிதி இளம்வழுதி மாரடைப்பால் காலமானார் என்று தெரியவந்துள்ளது.

26வயதில் சட்டமன்ற உறுப்பினராகி, அரசியல் வாழ்வை தொடங்கிய பரிதி இளம்வழுதி, நீண்ட காலம் திமுகவுடன் இயங்கிவந்தார். 2013ல் அதிமுகவில் இணைந்தார், பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டிடிவி தினகரனுடன் இணைந்தார்.

1984ல் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதி, பெரம்பூர் தொகுதியில் அதிமுகவின் சத்தியவாணி முத்துவை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினரானார்.

1985ல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஒன்றில், ''அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அவரது முன்னிலையிலேயே சட்டமன்றத்தில் 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி' என்ற எம்.ஜி.ஆரின் பாடலைப் பாடி 'மின்வசதி அடிக்கடி துண்டிக்கப்பட்டால் எப்படி நல்ல பிள்ளைகளை படிக்க வைத்து உருவாக்க முடியும்' என வினா எழுப்பினார்'' என பரிதி இளம்வழுதியின் அதிகாரபூர்வ இணையதளம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1989முதல் 2011வரை எல்லா தேர்தல்களிலும் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் பரிதி இளம்வழுதி. 1991-1996 தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட அனைவரும் தோல்வியடைந்தபோது, திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி மற்றும், பரிதி இளம்வழுதி மட்டுமே வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி பரிதி இளம்வழுதியை வீரஅபிமன்யு என்று புகழந்தார்.

1996-2001 காலத்தில் தமிழக சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகப் பதவி வகித்தார். 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் இவர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்தார்.

2011 தேர்தலில் தோல்வியடைந்த அவர், 2013ல் அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தபோது, ஓபிஎஸ் அணியில் இணைந்தார். பின்னர் அந்த அணியில் இருந்து விலகி, கடந்த ஆண்டு டிடிவி தினகரனுடன் இணைந்தார்.

2012ல் பரிதி இளம்வழுதி மீது சொத்துகுவிப்பு வழக்கு பதியப்பட்டது. செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவானது.

பரிதி இளம்வழுதியின் அரசியல் பயணம் குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் ஆர்.பகவான் சிங், "திமுகவின் கோட்டையாக சென்னை அறியப்பட்ட அதே சமயத்தில், எழும்பூர் தொகுதியை தனது கோட்டையாக தக்கவைத்துக்கொண்டவர் பரிதி என்கிறார்."

''1991 தேர்தலில் அதிமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் போட்டியிட்டது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட சமயத்தில் அதிமுக கூட்டணி அனுதாப ஓட்டுகளை அள்ளியது. விடுதலை புலிகளுடன் இணைத்து பேசப்பட்ட திமுக அந்த தேர்தலில் பெரிய தோல்வியை சந்தித்தது. திமுகவில் வெற்றி பெற்ற கருணாநிதி மற்றும் பரிதி இளம்வழுதி மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக இருந்ததால், பரிதி மிகவும் கவனம் பெற்றார். கருணாநிதி சட்டமன்ற வருகைபதிவேட்டில் கையொப்பம் இட்டுசென்றுவிடுவார். அதிமுகவின் கோட்டையாக காட்சியளித்த சட்டமன்ற கூட்டத்தில், பரிதி இளம்வழுதி தனியாக எதிர்குரல் எழுப்புவார். அவர் பேசும்போது ஜெயலலிதா ரசித்துகேட்பார். திமுகவில் திறமையான பேச்சாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற சிறப்பு பெற்றவராக இருந்தார்,'' என்கிறார் சிங்.

திமுகவில் இருந்து அதிமுகவுக்கு கட்சி தாவியபிறகு, பரிதி இளம்வழுதியின் அரசியல்வாழக்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்கிறார் சிங். ''திமுகவில் தனக்கு அங்கீகாரம் இல்லை என்ற முடிவுக்கு வந்த பரிதி, அதிமுகவில் இணைந்தார். ஆனால் ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து, பிளவு ஏற்பட்டது. ஓபிஎஸ் அணியில் இருந்தார். பின்னர் விலகி டிடிவி தினகரனுடன் சேர்ந்துகொண்டார்,''என்று கூறினார் சிங்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்