பிரிந்து சென்ற மனைவி: மறுமணம் செய்யாமல் மகளுக்கு தாயாக வாழும் தந்தை #HisChoice

பிரிந்து செல்லுதல் - சித்தரிப்பு படம்

(ஆண்களுக்கே உரிய பிரச்சனைகள், தடுமாற்றங்கள், அழுத்தங்கள் குறித்து இந்தியாவில் பிபிசி வெளியிட்ட சிறப்புக் கட்டுரைத் தொடரில் வெளியான தமிழகத்தைச் சேர்ந்த ஓர் ஆணின் கதை இது. ஆண்கள் தினத்தை ஒட்டி இதனை மீண்டும் பகிர்கிறோம்.)

அது ஒரு பின்னிரவு. எங்கள் அறையில் என் மனைவியின் செல்போன் மணி அடித்துக் கொண்டே இருந்தது. போனை எடுத்துப் பேசாமல் அவர் தவிர்த்துக்கொண்டே இருந்தார்.

எங்கள் மகள் தூங்கிக்கொண்டிருந்தாள். போனை எடுத்துப் பேசும்படி பலமுறை கூறியும் மனைவி அதைத் தவிர்த்துவிட்டார். மீண்டும் போன் மணியடித்தது. எனவே நானே கையில் எடுத்துப்பேசப் போனேன்.

திடுக்கிட்ட என் மனைவி, திடு திடுவென குளியலறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டார். நான் கதவைத் தட்டினேன். அவர் திறக்கவில்லை.

பயந்துபோன நான் கதவை மோதித் திறந்தேன். அங்கே அவர் வேறொரு போனில் மெசேஜ் டைப் செய்து அனுப்பிக் கொண்டிருந்தார்.

அதைப் பிடுங்கிப் பார்த்தபோது, "எனக்கு போன் செய்யவேண்டாம். என் போன் என் அண்ணனிடம் இருக்கிறது" என்ற குறுந்தகவல் திரும்பத் திரும்ப அழைத்துக்கொண்டிருந்த அந்த நபருக்கு சென்றிருந்தது.

நான் அதிர்ந்துபோனேன். ஆனால், நான் வாய் திறக்கவில்லை. நான் ஏதாவது பேசப் போய் அவள் மீண்டும் தாழிட்டுக்கொண்டாலோ, வேறு ஏதாவது செய்துகொண்டாலோ என்ன செய்வது என்று சும்மா இருந்துவிட்டேன்.

மறுநாள் காலை என்னுடைய இரண்டு நண்பர்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களில் ஒருவர் என்னுடைய அண்ணன் போன்றவர். முன்பே எங்களுக்குள் சண்டை வந்து பிரிந்திருந்தபோது பேசி எங்களை மீண்டும் சேர்த்து வைத்தவர்.

என்னோடு நல்லவிதமாக சேர்ந்து வாழும்படியும், சிறிது நாள் சென்றால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் என் மனைவியிடம் இருவரும் பேசினர்.

ஆனால், இந்த முறை என் மனைவி பிடிவாதமாக இருந்தார். "இந்த" வாழ்க்கையை இனி வாழ முடியாது என்று சொல்லிவிட்டார்.

ஆனால் முன்பு போல அல்லாமல், இந்த முறை எங்கள் மூன்று வயது மகளை என்னிடமே விட்டுவிட்டுச் சென்றார். பிறகு விவாகரத்து விண்ணப்பித்து விவாகரத்தும் பெற்றார்.

நீதிமன்றத்தில்கூட "குழந்தையை அவரது தந்தை நன்கு கவனித்துக் கொள்வார். எனவே அவரிடமே அவள் இருக்கட்டும்," என்று நீதிபதி முன்பு கூறினார்.

என் மனம் உடைந்துபோனது. ஆனால், ஒரே மகிழ்ச்சி எங்கள் மகள் என்னோடு.

எங்களுடையது காதல் திருமணம். கல்லூரியில் ஒன்றாகப் படித்துக் கொண்டிருந்தபோது காதலித்தோம். அலை பாயுதே படத்தில் வருவதைப் போல, யாருக்கும் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொண்டு அமைதியாக இருந்தோம். கடைசியாக இருவரின் வீட்டிலும் சொன்னபோது பூகம்பம் வெடித்தது.

ஏராளமான பிரச்சனைகள். கடைசியாக இரு வீட்டிலும் ஒப்புக்கொண்டு அவர்கள் முறைப்படி கோயிலில் திருமணம் செய்துவைத்தனர்.

சிறிது காலம் என் பெற்றோருடன் சொந்த வீட்டில் வாழ்ந்தோம். எனக்கும் அப்பாவுக்கும் சிறிது கருத்து வேறுபாடு ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியே வந்து தனியாக வாடகை வீட்டில் நானும் மனைவியும் மட்டும் வாழ்ந்தோம்.

சொந்தமாக வீடுகட்டிய பிறகே குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றார் என் மனைவி.

திருமணத்துக்குப் பின் மனைவி ஐ.டி. துறையில் பட்டமேற்படிப்பு படித்திருந்தார். எனவே நாங்கள் இருவரும் சென்னையில் குடியேறவேண்டும் என்று வற்புறுத்தினார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. வேண்டாம் என்றேன். இதனால் கோபித்துக்கொண்டு அம்மாவீட்டுக்குச் சென்று சிறிதுகாலம் இருந்தார். பிறகு பிரச்சனையை பேசித் தீர்த்தோம். அவர் மீண்டும் வீட்டுக்கு வந்தார்.

குழந்தை இல்லாததால் எங்களுக்குள் பிரச்சனை வருவதாக நினைத்தோம். எனவே குழந்தை பெற்றுக்கொண்டோம்.

குழந்தை பிறந்து மூன்று மாதமானபோது, என் மனைவிக்கு சென்னைக்கு குடி பெயரவேண்டும் என்ற ஆசை மீண்டும் வந்தது. அதையே வலியுறுத்தினார். நான் மறுத்தேன். இந்த முறை அவர் தனியாக குழந்தையை தூக்கிக்கொண்டு சென்னை சென்றுவிட்டார். நான் பார்க்கச் சென்றதையும் அவர் விரும்பவில்லை. தம் விருப்பதை மீறி பார்க்க வருவதாக போலீசில் புகார் கொடுத்தார்.

நானும் அவரோடு சென்னைக்கு வரவில்லை என்று கோபம் என நினைத்தேன். பார்க்கப் போவதையும் தவிர்த்தேன்.

மனைவிக்கு சென்னையில் அவர் நினைத்ததைப் போல வேலை கிடைக்கவில்லை. திரும்பி ஊருக்கு வந்தும் தனியாகவே இருந்தார். ஒரு கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருந்தார். குழந்தை ஊரிலேயே ஒரு பள்ளியில் படித்தாள். ஆனால், குழந்தையை பார்க்கப் போவது, மனைவியை கோப்படுத்தி மீண்டும் ஒன்று சேரும் வாய்ப்பை கெடுத்துவிடும் என்று பயந்து நான் குழந்தையைக்கூட போய் பார்க்கவில்லை. இப்படி ஒன்றரை ஆண்டுகள் பிரிந்திருந்தோம். இந்நிலையில், அண்ணனைப் போன்ற என் நண்பர் மனைவியிடம் தூது சென்று எங்களை சேர்த்துவைத்தார்.

மீண்டும் வாழ்க்கை நன்றாகப் போவதாகவே தெரிந்தது. அப்போது என் மனைவிக்கு வேறொரு ஆணிடம் இருந்து அழைப்பு வந்தது. என்ன என்று விசாரித்தேன். பிரிந்திருந்த காலத்தில் அவரது அறிமுகம் ஏற்பட்டது என்றும். சட்டென துண்டித்தால் பிரச்சனை ஆகும் எனவே, மெதுவாக துண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு மாலைப் பொழுதில் கடற்கரை மணலில் அமர்ந்தபடி பேசினோம். "கடந்த காலத்தில் எது நடந்திருந்தாலும் பரவாயில்லை. பிரிந்திருந்த காலத்தில் ஏற்பட்ட சம்பவங்களால் எந்த பிரச்சனை என்றாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ அதைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அத்தொடர்பை துண்டி" என்று சொன்னேன். அவர் ஏற்றுக் கொண்டார்.

ஆனால், அதன் பிறகும் ஒரு நாள் அதே நபரிடம் இருந்து அழைப்பு வந்தது. ஆத்திரத்தில் நான் மனைவியின் போனை பறித்து வீசி உடைத்துவிட்டேன்.

அதன் பிறகும், இரவில் போன் வந்துகொண்டே இருந்தது. அவரையே பல முறை பேசச் சொன்னேன். பேசாததால் நான் எடுத்து பேசப்போனேன். பிறகு என்னென்னவோ நடந்துவிட்டது.

இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. அவர் பிரிந்து சென்று விவாகரத்து பெற்று வேறொருவரை திருமணமும் செய்துகொண்டார்.

நாங்கள் பிரிந்திருந்த காலத்தில் மீண்டும் மனைவியுடனும், குழந்தையுடனும் சேர்ந்து வாழவேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது அதில் ஒன்று மட்டும் நடந்துவிட்டது. குழந்தையோடு மட்டும் வாழ்கிறேன். மற்றொன்று நடக்கவில்லை. மனைவி திரும்ப வந்து சேரவில்லை. எங்கள் வீட்டில் நான், அப்பா, அம்மா, தங்கை, தங்கையின் கணவர் என்று அனைவரும் மகளைப் பார்த்துக் கொள்கிறோம்.

விவாகரத்து பெற்ற காலத்தில் நான் மிகவும் உடைந்து போயிருந்தேன். அதில் இருந்து மீண்டு வர அதிக காலம் பிடித்தது. அந்தக் காலத்தில் என் மகள்தான் எனக்கு ஆறுதல் தந்து தேற்றினாள்.

பிறகு எனக்கு ஒரு பெரிய விபத்து ஏற்பட்டு, உயிர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அப்போதும் அருகில் இருந்து பார்த்துக்கொண்டது என் மகள்தான். அம்மாவுக்கு சர்க்கரை நோய். எப்போதும் அவருக்கு மாத்திரை எடுத்துத் தருவதும், இன்சுலின் ஊசி போடுவதும் 13 வயதான என் மகள்தான். அவளுக்கு நான் ஆறுதலாக இருப்பதை விட எங்களுக்கு அவள் ஆறுதலாக இருப்பதுதான் அதிகம்.

யாராவது என்னை விமர்சித்தாலும் எனக்காக பரிந்து பேசுவது மகள்தான்.

என்னை மனைவி விட்டுப் பிரிந்த நாளில் இருந்து ஒரு முறைகூட அம்மாவை அவள் கேட்டதும் இல்லை. அது பற்றிப் பேசியதும் இல்லை.

சிறு வயதில் இருந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு செல்வது பாப்பாவுக்கு பிடிக்கும். எனவே அது போன்ற இடங்களுக்கு நிறைய அழைத்துச் சென்று விளக்குவேன். அது போன்ற பயணங்களின்போது யாராவது அவளிடம் அவள் தாயைப் பற்றி கேட்டால், அமைதியாக இருப்பாள். ஒன்று கேட்டவர் அந்தக் கேள்வியைக் கடந்து செல்லவேண்டும். அல்லது நான் தலையிட்டு சமாளிக்கவேண்டும்.

அம்மாவைப் பற்றி அவள் ஏதும் சொல்லாவிட்டாலும், அந்த மௌனம் புரிந்துகொள்ள முடியாததுதான். என் மனைவி உடன் இருந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்.

என்னை மீண்டும் திருமணம் செய்துகொள்ளும்படி சொல்கிறார்கள். எங்களுடையது காதல் திருமணம் என்பதால், பிரிவு, விவாகரத்து இதையெல்லாம் கடந்துவர எனக்கு நீண்டகாலம் பிடித்தது.

இப்போது என் மகளுக்கு 13 வயது. அவள் என்னோடு தனியாக அடிக்கடி பயணிப்பது எங்கள் பெற்றோருக்கு சங்கடமாக இருக்கிறது. அப்படி பயணிக்கும்போது அவள் பூப்பெய்திவிட்டால், என்னால் சமாளிக்க முடியாது என்று நினைக்கிறார்கள்.

அவளுக்கு கல்பனா சாவ்லா போல ஒரு விண்வெளி வீரராக வேண்டும் என்று ஆசை. நன்றாகவும் படிக்கறாள். நான் மீண்டும் திருமணம் செய்துகொண்டால் இப்போதுபோல என் மகளோடு அதிக நேரம் செலவிட முடியாது என்று அச்சம் எனக்கு.

மீண்டும் திருமணம் செய்வது என்று நான் முடிவெடுத்தால் அதற்கு பாப்பா தடை சொல்லப்போவதில்லை. அது தவிர, இரண்டாவது திருமணம் செய்வதில் பொதுவாக முதல் திருமணத்தின் ஆண் குழந்தைகள்தான் பெரிய பிரச்சனையாக இருப்பார்கள். பெண் குழந்தைகளால் பெரிய பிரச்சனைகள் இருக்காது.

ஆனால், வேறொரு பெண் என் வாழ்க்கையில் வந்தால் பிரச்சனை வரலாம். தவறான புரிதல் வரலாம். வருகிற பெண் சரியாகவே மகளைக் கண்டித்தாலும், எனக்கு அது வேறுவிதமாக தோன்றலாம்.

அதனால், மீண்டும் கணவன் மனைவி பிரச்சனை வரலாம். அது போன்று இன்னுமொரு பிரச்சனையை சந்திக்க நான் தயாரில்லை. அதனால்தான் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருக்க முடிவெடுத்தேன்.

இப்போது என் வாழ்க்கையின் மையப்புள்ளி என் செல்ல மகள் மட்டுமே.

(வட தமிழ்நாட்டில் வசிக்கும் ஒரு நடுத்தர வயது ஆணுடன் நிகழ்த்திய உரையாடலின் அடிப்படையில் இதை எழுதியவர் பிபிசி தமிழ் செய்தியாளர் அ.தா.பாலசுப்ரமணியன். ஆண்கள் சந்திக்கும் பிரத்தியேக சிக்கல்கள் தொடர்பான இந்த #HisChoice சிறப்புத் தொடரைத் தயாரிப்பவர் பிபிசி செய்தியாளர் சுசீலா சிங்.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: