தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - தொடங்கியது சிபிஐ விசாரணை

  • 14 அக்டோபர் 2018

இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - தொடங்கியது சிபிஐ விசாரணை

படத்தின் காப்புரிமை Getty Images

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தொடரப்பட்ட வழக்குகளை மத்திய புலனாய்வுத்துறை சிறப்புப்பிரிவு விசாரிக்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், முதல் கட்ட விசாரணை தொடங்கப்பட்டதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார். அவர்கள் இதுகுறித்து விசாரித்து வந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்தது.

இந்நிலையில், சிபிஐ சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரி சரவணன் தலைமையில் 4 குழுவினர் சனிக்கிழமையன்று தூத்துக்குடி வந்து தங்களது முதல்கட்ட விசாரணையை தொடங்கியதாக அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.

தினமலர் : பிரதமர் மோதிக்கு மீண்டும் கொலை மிரட்டல்

படத்தின் காப்புரிமை The India Today Group

பிரதமர் நரேந்திர மோடியை, வரும் ஆண்டில் கொலை செய்ய உள்ளதாக, தில்லி போலீஸ் கமிஷனருக்கு, 'இ - மெயில்' வந்ததையடுத்து, பிரதமரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி கூறுகிறது.

குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, மோடிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்தது. பிரதமராக பதவியேற்ற பின், இந்த அச்சுறுத்தல் அதிகரித்தது. இதையடுத்து, முந்தைய பிரதமர், மன்மோகன் சிங்குக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை விட, இரு மடங்கு அதிகமாக, பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தில்லி போலீஸ் கமிஷனர், அமுல்யா பட்நாயக்குக்கு வந்த, இ - மெயிலில், 2019ல், குறிப்பிட்ட தேதியில், பிரதமரை கொல்ல இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து, பாதுகாப்பு படையினர் மற்றும் உளவுத்துறையினரை, டில்லி போலீசார் எச்சரித்துள்ளனர். இதனால், பிரதமரின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அசாம் சிறையில் இருந்து, கொலை மிரட்டல் இ - மெயில் வந்ததால், அங்கு, பாதுகாப்பு படையினர் மற்றும் உளவுத் துறையினர் விசாரணையை துவக்கியுள்ளதாக அச்செய்தி விவரிக்கிறது.

தி இந்து (ஆங்கிலம்) :ராஜஸ்தானில் வேகமாக பரவும் சிகா வைரஸ்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மேலும் பலருக்கு சிகா வைரஸ் தொற்று இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்தம் 55 பேரும் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார் என தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் 38 பேர் சிகிச்சைக்கு பிறகு நலமாக இருப்பதாக கூடுதல் தலைமை செயலாளர் (மருத்துவம் மற்றும் உடல்நலம்) வீனு குப்தா கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: