காபி குடிக்க அழைத்துச்சென்ற போலீசாரின் பைக்கில் தப்பிய கைதி

இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி - "காபி குடிக்க அழைத்துச்சென்ற போலீசாரின் பைக்கில் தப்பிய கைதி"

படத்தின் காப்புரிமை Meilun

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கைதி, காபி குடிக்க அழைத்துச் செல்லுமாறு போலீஸ்காரர்களிடம் கெஞ்சி கேட்டு பின்னர் அவர்களுடைய மோட்டார் சைக்கிளிலேயே தப்பி சென்றுவிட்டதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் பாபு. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பல்சர் பைக்கில் சென்று வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டு வந்ததால் பல்சர் பாபு என்ற அடைமொழி வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேப்பேரி போலீசார் வழிப்பறி வழக்கில் பல்சர் பாபுவை கைது செய்தனர். பின்னர், தொடர் குற்றசெயலில் ஈடுபட்டதாக அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட பாபு, சிகிச்சைக்காக நேற்று முன்தினம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அதிகாலை 6 மணி அளவில் பல்சர் பாபு, காபி குடிக்க வேண்டும் என்று பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் கூறினார். ஆனால் போலீசார் முதலில் அதற்கு மறுத்துவிட்ட நிலையில், கஜேந்திரன், சுந்தர் இரண்டு போலீசாரும் மனம் மாறி மோட்டார்சைக்கிளில் தங்களுக்கு நடுவில் பல்சர் பாபுவை அமர வைத்து ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இருந்த வெளியில் அழைத்துச் சென்றனர்.

அப்போது பல்சர் பாபு, வாய் கொப்பளிப்பது போல் நடித்து, போலீசார் சற்று அசந்து இருந்த நேரத்தில் சாவியுடன் இருந்த போலீஸ்காரர்களின் மோட்டார் சைக்கிளில் ஏறி, அதில் இருந்த துப்பாக்கியை தூக்கி கீழே போட்டு விட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதை கண்ட போலீஸ்காரர்கள் கஜேந்திரன், சுந்தர் இருவரும் அதிர்ச்சி அடைந்ததாகவும், அவரை பிடிப்பதற்கு இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

'டைம்ஸ் ஆஃப் இந்தியா' - 2-0: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா

படத்தின் காப்புரிமை Getty Images

ஹைதராபாத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே நடந்த இரண்டாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2-0 என்று தொடரை வென்றது குறித்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, தனது முதல் இன்னிங்சில் 311 ரன்கள் எடுத்தது. உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சில் இந்திய அணி 367 ரன்களை எடுத்தது.

தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணி 127 ரன்களை மட்டுமே எடுக்க, இந்தியாவுக்கு 72 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய தொடக்க வீரர்கள் கே. எல். ராகுல் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரும் தலா 33 ரன்கள் எடுக்க விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை இந்தியா எட்டியது.

ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார் என டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் மேலும் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக ராஜ்கோட்டில் நடந்த முதல் கிரிக்கெட் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியசாத்தில் இந்தியா வென்றது.

இந்து தமிழ் - ரஃபேல் விவகாரம் - ரிலையன்ஸ் குழுமத்தின் கணக்கில் 30,000 கோடி வந்ததா?

படத்தின் காப்புரிமை DASSAULT RAFALE

ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத் தில் புதிய திருப்பமாக, டசால்ட்-ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமி டெட்(டிஆர்ஏஎல்) நிறுவனத்தின் 2016-17 ஆண்டறிக்கையில் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்திய விமானப் படையின் தேவைக்காக 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க அரசு முடி வெடுத்தது. இதற்காக பிரான்ஸைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், 30 ஆயிரம் கோடியும் டிஆர்ஏஎல் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுவிட்டதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதனை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்தார்.

ஆனால் ரிலையன்ஸ் குழுமம் கடந்த செப்டம்பரில் வெளியிட்ட அறிக்கையில் ரூ. 6,600 கோடி முத லீடு பெறப்பட்டதாக அறிவித்தது. இது பத்து சதவீதத்தைவிட 2 மடங்கு. இந்த நிலையில் ரிலை யன்ஸ் குழுமத்தின் 2016-17 நிதி ஆண்டுக்கான அறிக்கையில் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டு பங்காக காட்டப்பட்டுள்ளது. ஆனால், 2017-18 நிதி ஆண்டுக் கான அறிக்கையில் இதுகுறித்த விவரங்கள் எதுவும் இல்லை" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி - "நாடுமுழுவதும் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம், ஆர்.சி புத்தகம்"

படத்தின் காப்புரிமை Getty Images

அடுத்தாண்டு ஜூலை முதல் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஒரே மாதிரியான வண்ணம், வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்கள் வழங்கவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துறை அமைச்சக அதிகாரியொருவர், இந்த புதிய ஓட்டுநர் உரிமம், ஆர்.சி புத்தகம் ஆகியவை ஏடிஎம் கார்டுகளை போன்று ஸ்மார்ட் கார்டுகளாக கியூ.ஆர் குறியீடு மற்றும் மைக்ரோ சிப்புடன் இருக்குமென்றும் கூறினார்.

கியூ.ஆர் கார்டை ஸ்கேன் செய்வதன் மூலம் ஓட்டுநர் உரிமத்தின் உரிமையாளரை பற்றி பல்வேறு தகவல்களை தெரிந்துக்கொள்ள முடியுமென்றும் இது அடுத்தாண்டு ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் ஒரே சமயத்தில் அறிமுகப்படுத்துவதற்கு மத்திய திட்டமிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: