பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்

இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி - "பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்"

படத்தின் காப்புரிமை AdrianHillman

'மீ டூ'வை ( #MeToo) தொடர்ந்து பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக 'வீ டூ' என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், நடிகர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆண்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் #MeToo என்ற ஹேஸ்டேக்கில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் 'வீ டூ மென்' என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளனர்.

"பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக இந்த இயக்கத்தை தொடங்கி உள்ளோம். இந்த இயக்கத்தில் நடிகர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். விருப்பத்தின் பேரில் ஆண்களுடன் சேர்ந்து பழகும் பெண்கள் மனக்கசப்பு ஏற்பட்டதும் பாலியல் புகாரை கையில் எடுக்கின்றனர். பணம் பறிக்கும் நோக்கத்தில் சில பெண்கள் செயல்படுகின்றனர்" என்று அந்த இயக்கத்தின் உறுப்பினரான திரைப்பட இயக்குனரும், பத்திரிகையாளருமான வாராகி கூறியுள்ளார்.

இதுபோன்ற புகார்களை அனுமதித்தால் ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். எனவே, இதுபோன்ற புகார்களை ஏற்பது தொடர்பாக உரிய வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை அணுக உள்ளோம் என்று அவர் மேலும் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தமிழ் - "ஆறே மாதத்தில் கசிந்த 100 கோடி ஆதார் தகவல்கள் - அதிர்ச்சி தகவல்"

படத்தின் காப்புரிமை Getty Images

2018ம் ஆண்டின் முதல் ஆறு மாதங் களில் 100 கோடி ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக கெமல்டோ என்ற சர்வதேச அளவிலான இணையப் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கெமல்டோ என்ற சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம், இணையத்தில் நடைபெறும் தகவல் கசிவு தொடர்பான விவரங்களைச் சேகரித்து வரும் கெமல்டோ நிறுவனம் சமீபத்தில் ஆதார் தகவல்களில் நடந்த அத்துமீறல்களைப் பதிவு செய்துள்ளது.

இந்த அறிக்கையில் ஆதார் தகவல் அத்துமீறல் நிகழ்வுகளில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 100 கோடி அளவிலான தனி நபர் தகவல்கள் கசிந்துள்ளதாகக் கூறுகிறது. இவற்றில் தனிநபருடைய பெயர், முகவரி மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களும் அடங்கும். மேலும் இதில் கவலை தரும் விஷயம் என்னவெனில், கசிந துள்ள தகவல்களில் 12ல் ஒரு தகவல் மட்டும்தான் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கெமல்டோ கூறியுள்ளது.

உலக அளவில் இந்த வருடத் தின் முதல் ஆறு மாதத்தில் 945 தகவல் அத்துமீறல்கள் நடந்துள்ளதாகவும் அதன் மூலம் 450 கோடி தகவல்கள் கசிந்துள்ளதாகவும் கெமல்டோ கூறுகிறது. இது கடந்த 2017ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் கசிந்த தகவல்களைக் காட்டிலும் 133 சதவீதம் உயர்வு என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

'டைம்ஸ் ஆஃப் இந்தியா' - 'பாஜக இல்லாத மாநிலங்களில் வெல்வதற்கு சுனாமியை உருவாக்க வேண்டும்' : அமித் ஷா

படத்தின் காப்புரிமை Getty Images

வரவிருக்கும் மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை முற்றிலுமாக வீழ்த்த வேண்டும் என்று தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் அறைக்கூவல் விடுத்துள்ளது குறித்த செய்தியை 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் வெளியிட்டுள்ளது.

மேலும் அவர் பேசுகையில், ''காங்கிரஸ் கட்சியை வேரோடு சாய்க்க ஒரு சுனாமியை உருவாக்க வேண்டும். அந்த அலையின் அதிர்வு மேற்கு வங்காளம் போன்று பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் உணரப்பட வேண்டும்'' என்று கூறினார்.

நவம்பர் 28-ஆம் தேதியன்று தேர்தல் நடக்கவுள்ள இந்த மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வது மட்டும் போதாது என்றும் அவர் கூறினார்.

2003-ஆம் ஆண்டு முதல் மத்திய பிரதேசத்தில் ஆட்சியில் பாஜக உள்ள சூழலில், இங்கு ஆட்சிக்கு வருவதற்கு எதிர்க்கட்சிகள் பகல்கனவு காண்பதாக தெரிவித்துள்ளதார் என்று அந்த நாளிதழ் செய்தி குறிப்பிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :