சபரிமலை: யாரும் அச்சப்பட வேண்டாம், முழு பாதுகாப்பு அளிக்கப்படும் - காவல்துறை #GroundReport

போராடும் பெண்கள் படத்தின் காப்புரிமை Getty Images

சபரிமலை நோக்கி செல்லும் பெண்களை தடுத்து பாஜக ஆதரவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழம) முதல் போராடி வந்த நிலையில், நிலக்கல் பகுதியில் கல்வீச்சு, தடியடி, கலவரமென போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

சபரிமலை நோக்கி சென்ற பக்தர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

போலீஸாருக்கு எதிராக போராட்டகாரர்கள் கல்வீசியதை தொடர்ந்து தடியடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பம்பையில் நடந்த போராட்டத்திலும் கல்வீச்சு நடந்துள்ளது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து பம்பையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பம்பையில் நடந்த போராட்டத்தில் போலிஸ்காரர் ஒருவர் மிக மோசமாக போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதனை சிறப்பு பாதுகாப்புபடை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் உறுதி செய்தார்.

இதனிடையே, சபரிமலைக்கு பெண்கள் வருவதை நாங்கள் எதிர்க்கவில்லை என சபரிமலை முன்னாள் தந்திரியின் மனைவி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பரிமலை: அதிகரிக்கும் பதற்றம்; போராட்டக்காரர்கள் கல்வீச்சு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சபரிமலையில் அதிகரிக்கும் பதற்றம்: போலீஸ் மீது கல்வீச்சு

நாங்கள் பெண்கள் அனைவரும் வருவதை எதிர்க்கிறோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையில்லை. பத்து வயது வரை உடைய பெண்கள் வரலாம் பின்பு 50 வயதுக்கு பின் பெண்கள் இங்கே வரலாம். நானே அந்த வயதில் சென்றிருக்கிறேன் என்கிறார் முன்னாள் தந்திரியின் மனைவி தேவிகா அந்தர்ஜனம்.

இவருக்கு இப்போது 84 வயதாகிறது.

இன்று இவரையும், உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக முதன்முதலாக கருத்து தெரிவித்த மற்றும் போராட்டத்தை முன்னெடுத்த ராகுல் ஈஸ்வரியின் தாய் மல்லிகா நம்பூதிரியையும் சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களை அச்சுறுத்துகிறார்கள் என்று போலீஸார் கைது செய்து, சில மணி நேரங்களில் விடுதலை செய்தனர்.

"நாங்களை இங்கு பிரார்த்தனைதான் செய்து வருகிறோம். எங்களை கைது செய்தது முறையல்ல" என பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும் அவர், "ஊடகங்களில் வருவதுபோல எங்களை யாரும் இயக்கவில்லை. தன்னெழுச்சியாக நாங்கள் எங்கள் பண்பாட்டை காக்க போராடுகிறோம்" என்றார்.

யாரும் அச்சப்பட வேண்டாம்

யாரும் அச்சப்பட வேண்டாம். சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படுமென பிபிசி தமிழிடம் பேசிய காவல்துறை சிறப்பு அதிகாரி சைமன் தெரிவித்தார்.

மலைக்கு ஏறும் பெண்கள் அச்சப்பட்டால், அவர்களுடன் காவலர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

மேலும் அவர். "கல்வீச்சில் ஈடுப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பாதுகாப்பு ஆலோசனை

பாதுகாப்பு குறித்து போலீஸாருடன் கலந்து ஆலோசித்து வருவதாக பத்தனம்திட்டா மாவட்டம் ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இன்று மாலை சபரிமலை நடை திறக்க உள்ள நிலையில், வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து போலீஸாருடன் ஆலோசனை செய்து வருகிறோம் என்றார்.

பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்

சபரிமலை போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற தம் நிறுவனத்தின் செய்தியாளர் தாக்கப்பட்டதாக நியூஸ் மினிட் தளத்தின் ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தடுத்து நிறுத்தப்படும் பெண்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, முதல் முறையாக கோயில் நடை திறக்கும் நாளான இன்று (புதன்கிழமை) மலைக்கு வரும் பெண்களை தடுக்கும் நபர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்படும் என கேரள அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் சபரிமலை நோக்கி செல்லும் பெண்களை தடுத்துப் போராடிவந்த பாஜக ஆதரவு அமைப்பைச் சேர்ந்த பெண்களை போலீசார் நிலக்கல் கிராமத்தில் இருந்து அகற்றிய நிலையில் பெண் பக்தர்கள், பெண் பத்திரிகையாளர்கள் ஆகியோர் பம்பை வரை செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களையும் பாஜக ஆதரவு போராட்டக்காரர்கள் தாக்கியதாக செய்திகள் வெளியாகின்றன.

சபரிமலை அடிவாரத்தில் உள்ள நிலக்கல் கிராமத்தில் வாகனத் தணிக்கை செய்து, இளம் பெண்கள் இருந்தால் அவர்களை அங்கேயே இறக்கிவிட்டும் வந்த போராட்டக்காரர்கள் முன்னதாக அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்கள் அமைத்திருந்த முகாம் பந்தலை போலீசார் அகற்றினர். இரவு முழுதும் பாட்டுப்பாடியும், பயணிகளை தடுத்து நிறுத்தியும் பெரிய அளவில் அமளியில் ஈடுபட்டுவந்த போராட்டக்காரர்கள் இப்போது அங்கு இல்லை.

அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிபிசி செய்தியாளரின் அனுபவம்

படத்தின் காப்புரிமை Getty Images

இது குறித்து பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன், "நான் இப்போது பம்பை பகுதியில் இருக்கிறேன். இங்கு போலீஸ் பாதுகாப்பு கடுமையாக உள்ளது. ஆனால், கடுமையான நெருக்கடிகளை கடந்து தான் இங்கு வந்தேன். வரும்வழி நெடுகிலும் போராட்டக்காரர்கள் பெண்கள் யாரேனும் வருகிறார்களா? என்று வாகனங்களை சோதனையிடுகிறார்கள்" என்றார்.

போராட்டத்தை ஆதரித்த ஜார்ஜ் எம்.எல்.ஏ.

பம்பைக்கு வந்த சுயேச்சை எம்.எல்.ஏ.வான பி.சி.ஜார்ஜ், போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். "கோயிலுக்கு வரும் ஐந்து-ஆறு பெண்களுக்காக 2 கோடி பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துகிறார்கள்" என்று குறிப்பிட்ட அவர், இங்கே நடப்பது போலீஸ் ராஜ்ஜியமா என்று கேள்வி கேட்டார்.

பம்பையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரில் இளம் பெண்களும் இருக்கிறார்கள்.

ஒரு குழு போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டவுடன் வேறொரு போராட்டக்குழுவினர் அங்கு வந்துவிடுகிறார்கள்.

பத்து முதல் ஐம்பது வயது வரையுள்ள பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்கு பலஆண்டுகளாக தடை இருந்துவந்தது. இந்த தடையை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நீக்கிவிட்டாலும், சபரிமலைக்கு செல்லும்வழியில் உள்ள இந்த நிலக்கல் கிராமத்தில், கடந்த ஒரு வாரகாலமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடந்துவந்தது.

செவ்வாயன்று, பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவுடன் செயல்படும் இந்து அமைப்பைச் சேர்ந்த பெண்கள் குழுவினர் சபரிமலைக்குச் செல்லும் வண்டிகளை அடிவாரமான நிலக்கல்லில் தடுத்து நிறுத்தி, அதில் இளவயது பெண்கள் இருந்தால், அவர்களை இறக்கிவிட்டு செல்ல நிர்ப்பந்தித்து வந்தனர்.

நிலக்கல் முகாமில் போராட்டம் நடத்திய பெண்கள் மற்றும் ஆண்கள் சுவாமி ஐயப்பன் புகைப்படம் ஒன்றை வைத்து, பூசை நடத்தி, பிரசாதம் வழங்கி, கோஷமிட்டனர். வண்டிகளை தடுத்து நிறுத்தும்போது சரண கோஷங்களை சொல்லி பெண்கள் இறங்க வேண்டும் என்று கூச்சலிட்டனர்.

சில வண்டிகளை தடுத்துநிறுத்தி கோஷமிட்ட அவர்கள் இளவயது பெண்கள் இருந்த மூன்று வண்டிகளை திருப்பி அனுப்பினார். காவல்துறையினர் சமாதானம் செய்துவைப்பதற்குள் அந்த வண்டிகளில் இருந்தவர்கள் அச்சத்தில் திரும்பிச் சென்ற காட்சிகளும் அரங்கேறின. பெண் பத்திரிகையாளர்களைக்கூட மலைக்கு அனுப்பப்போவதில்லை என போராட்டக்குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துவந்தனர்.

ஆனால் செவ்வாயன்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள அரசாங்கம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் என்றும் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு எந்த விதத்திலும் சிரமங்கள் ஏற்படாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கோயிலுக்கு வரும் அனைத்துவயது பெண் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 500க்கும் மேற்பட்ட காவலர்கள் கோயிலுக்கு செல்லும் வழியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பக்தர்கள் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்துபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இன்று நிலக்கல் பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

நிலக்கல்லில் போராட்டம் நடத்திவந்த நபர்கள் வெளியேறுமாறு காவல்துறையினர் அறிவித்து, போராட்ட பந்தலை அகற்றிவிட்டனர்.

புதன்கிழமை மாலை நடைதிறக்கப்படும் போது காவல்துறையின் பாதுகாப்புடன் பெண் பக்தர்கள் மலைக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்