எம்.ஜே. அக்பர் ராஜிநாமா #MeToo இயக்கத்துக்கு கிடைத்த பெரும் வெற்றியா?
#MeToo ஹாஷ்டாகின் கீழ் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் புதன்கிழமையன்று பதவி விலகியுள்ளார்.
வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், முன்னாள் பத்திரிகை ஆசிரியருமான எம்.ஜே. அக்பர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என #MeToo ஹாஷ்டாகின் கீழ் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி சில நாட்களுக்கு முன்பு குற்றம் சாட்டினார்.
பாலியல் துன்புறுத்தல் தந்ததாக ஊடகத்துறையில் பணியாற்றும் பல பெண்கள் எம்.ஜே. அக்பர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போது, நைஜீரியாவுக்கு அரசுமுறைப் பயணமாக அக்பர் சென்றிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை இந்தியா திரும்பிய அக்பர், குற்றம் சுமத்திய பெண் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி மீது குற்றவியல் பிரிவில் அவதூறு வழக்கு தொடுத்தார்.
- எம்.ஜே. அக்பர் ராஜிநாமா: பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி
- #MeToo நான் நல்லவனா, கெட்டவனா? - வைரமுத்து விளக்கம்
- #MeeToo விவகாரம் - இலங்கையில் சர்ச்சைக்குள்ளான பாரதிராஜாவின் பேச்சு
இந்நிலையில், புதன்கிழமையன்று எம்.ஜே. அக்பர் ராஜிநாமா செய்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், #MeToo இயக்கத்தின் மீதான கவனத்தையும் அதிகரித்துள்ளது.
எம்.ஜே. அக்பர் ராஜிநாமா குறித்தும், #MeToo இயக்கம் தொடர்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள கவனம் குறித்தும் மூத்த ஊடகவியலாளரும், 'தி இந்து' குழுமத் தலைவருமான என்.ராம் பிபிசி தமிழிடம் உரையாடினார்.
''குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோதே அக்பர் பதவி விலகி இருக்க வேண்டும். ஆனால், தற்போதுதான் அவர் ராஜிநாமா செய்துள்ளார். தொடர்ந்து பலரும் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், அக்பர் தனது பதவியில் தொடர வாய்ப்பில்லை'' என்று என். ராம் குறிப்பிட்டார்.
''அக்பர் உடனடியாக ராஜிநாமா செய்திருந்தால் ஒருவேளை சில நாட்களில் இந்த விஷயம் மறக்கப்பட்டிருக்கலாம். இந்த கால தாமதம் அரசியல் கட்சிகளின் அணுகுமுறை குறித்தும் நமக்கு உணர்த்துகிறது'' என்று என். ராம் கூறினார்.
''இது குறித்து பிரதமர் நரேந்திர மோதி எந்தக் கருத்தும் கூறவில்லை. பாஜக செய்தித்தொடர்பாளர் இது குறித்து ஆதரவாக எந்த கருத்தும் சொல்லவில்லை. மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஸ்மிருதி இரானி மட்டும்தான் தைரியமாகவும், கடுமையாகவும் கருத்து தெரிவித்துள்ளார்'' என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், குற்றம் சுமத்திய பெண் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி மீது அக்பர் குற்றவியல் பிரிவில் அவதூறு வழக்கு தொடுத்தது தேவையற்ற ஒன்று. இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு இது ஓர் உதாரணம் என்று ராம் கூறினார்.
'அக்பரின் பதவி விலகல் #MeTooக்கு கிடைத்த வெற்றி'
''பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பெண் மீதே குற்றவியல் பிரிவில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது, அந்த சட்டத்தின் மீதே சில கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த வழக்கு போடப்பட்டது தவறு'' என்றார் அவர்.
காங்கிரஸ் கட்சியும் இந்த விஷயத்தில் விரைவாக தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்கத் தவறியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
''#MeToo இயக்கத்துக்கு கிடைத்த மிக பெரிய வெற்றியாக இதனை பார்க்க வேண்டும்'' என்று ராம் கூறினார்.
#MeToo இயக்கம் தொடர்ந்து இதே அளவில் கவனத்தை எதிர்காலத்தில் பெறுமா என்று கேட்டதற்கு, பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.
சில குற்றச்சாட்டுக்கள் எவ்வாறு நிரூபிக்கபட வேண்டும் என்பது போன்றவற்றில் தெளிவான புரிதல் வர வேண்டும் என்று ராம் தெரிவித்தார்.
சாதாரண பெண்களின் நிலை என்ன?
#MeToo மூலம் தங்களுக்கு நேர்ந்த அத்துமீறல்களை அனைத்து தரப்பு பெண்களும் எடுத்துரைக்க முடியுமா என்று கேட்டதற்கு,
'ஒப்பந்த பணியாளர்கள் உள்பட சாதாரண நிலையில் உள்ள பல பெண்களால் எளிதாக பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க முடிவதில்லை. #MeToo குறித்த புரிதல் சாதாரண நிலையில் உள்ள பல பெண்களுக்கு இல்லை என்றே கூறவேண்டும்'' என்று ராம் குறிப்பிட்டார்.
பாலியல் துன்புறுத்தல் மற்றும் அத்துமீறல் நடப்பதை தடுப்பதில் ஊடகத்துறையின் பங்கு மிகவும் அவசியம். குறிப்பாக இந்திய மொழிகள் சார்ந்த ஊடகங்கள் பாலியல் அத்துமீறல் மற்றும் துன்புறுத்தல் சம்பவங்களை வெளிக்கொணர வேண்டும். அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்'' என்று கூறினார்.
#MeToo தவறாக பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்புண்டா என்று கேட்டதற்கு, ''சில சமயம் சிலர் மீது தவறாக குற்றஞ்சாட்டப்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், பெரும்பாலான குற்றச்சாட்டுகளில் உள்ள நம்பகத்தன்மை மற்றும் உண்மைநிலை குறித்து பலரும் புரிந்து கொள்ளமுடியும்'' என்று தெரிவித்தார்.
பெண் பத்திரிகையாளரான லக்ஷ்மி சுப்ரமணியம் இது குறித்து பிபிசி தமிழிடம் உரையாடினார்.
''இந்த குற்றச்சாட்டு அக்பர் மீது சுமத்தப்பட்டபோது அவர் வெளிநாட்டில் இருந்தார். இந்தியா வந்தவுடன் அவர் குற்றம் சுமத்திய ப்ரியா ரமணி மீது குற்றவியல் பிரிவில் அவதூறு வழக்கு தொடுத்தார். இது ப்ரியா ரமணியை அச்சுறுத்துவதற்காக என்று பலராலும் கருதப்பட்டது'' என்று லக்ஷ்மி தெரிவித்தார்.
இந்த பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து வந்த அழுத்தம் மற்றும் மக்கள் எதிர்ப்பு காரணமாக வேறு வழியின்றி அக்பர் பதவி விலக நேர்ந்தது என்று லக்ஷ்மி கூறினார்.
ஆரம்பத்திலேயே அக்பர் ராஜிநாமா செய்து இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட லக்ஷ்மி, நரேந்திர மோதி மற்றும் அமித் ஷா ஆகியோர் சாதாரண அரசியல்வாதிகள் அல்ல. பாஜகவுக்கு எப்போதுமே , எந்த பிரச்னையிலும் ஒரு 'பிளான் பி' இருக்கும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்'' என்று கூறினார்.
''ஞாயிற்றுக்கிழமைக்கும், புதன்கிழமைக்கும் இடையே சில முக்கியமான அரசியல் மாற்றங்கள் நடந்துள்ளன'' என்றார் அவர்.
#MeToo இயக்கம் ஒரு நல்ல தொடக்கம்
''எம்.ஜே. அக்பரின் பதவி விலகல் மற்றும் #MeToo இயக்கம் ஆகியவை பெண்களுக்கு உளவியல் ரீதியான வெற்றியைத் தரும்'' என்று கூறிய அவர், ''அதே வேளையில் எளிய பின்னணியில் உள்ள பெண்கள் இது போன்ற துன்புறுத்தலை சந்தித்தால் அவ்வளவு எளிதாக அதனை கூற இயலுமா என்று தெரியவில்லை'' என்று தெரிவித்தார்.
''ஆனால், பாலியல் துன்புறுத்தல் மற்றும் அத்துமீறல்களுக்கு எதிரான முயற்சி மற்றும் வெற்றிகளில் இது நிச்சயம் ஒரு நல்ல தொடக்கம்தான்'' என்று தெரிவித்தார்.
பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு சிலர் பலியாக வாய்ப்புள்ளதா?
''வரதட்சணை கொடுமைக்கு எதிரான சட்டம் வந்தபோதுகூட சிலர் அதனை தவறாக பயன்படுத்த முயற்சித்தனர். அதே போல், இதனையும் சிலர் தவறாக பயன்படுத்த வாய்ப்புண்டு'' என்று லக்ஷ்மி தெரிவித்தார்.
''அதே வேளையில், 90 சதவீதம் உண்மையான குற்றச்சாட்டுகளாகவே இருக்கும்'' என்று அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- ‘அடித்து ஆடும் உலகம்’ - கலிஃபோர்னியா முதல் சீனா வரை
- சபரிமலை: கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்ணின் ‘கைகூடாத கனவு’
- உறிஞ்சப்பட வேண்டுமா நிலத்தடி நீர்? - போராட்டமும், சமூக ஊடக கருத்தும்
- இந்திய உளவுத்துறை மீது சிறிசேன குற்றம் சாட்டினாரா? மறுக்கும் இலங்கை அரசு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்