சபரிமலை: '' இளம்பெண் என்பதால் நீ திரும்பி போ'' #GroundReport

சபரிமலை செல்லும் பெண்களை திருப்பி அனுப்பும் போராட்டக்காரர்களில் பெண்களும் அடக்கம் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சபரிமலை செல்லும் பெண்களை திருப்பி அனுப்பும் போராட்டக்காரர்களில் பெண்களும் அடக்கம்

பதற்றமான இடங்களில் செய்தி சேகரிப்பது ஒரு செய்தியாளரின் பணி. அந்த செய்தியாளர் ஆணா ,பெண்ணா என்ற வித்தியாசம் தேவையில்லாதது என்று பல நேரங்களில் நண்பர்கள் மத்தியில் பேசியிருக்கிறேன்.

ஆனால் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் பிரார்த்தனை செய்ய கோயிலுக்குச் செல்லலாம் என்ற உத்தரவு வந்ததை அடுத்து, செய்தியாளராக சென்ற நான், பெண் என்பதாலேயே, என் வேலையை செய்ய பல அச்சுறுத்தல்களை சந்திக்க நேர்ந்தது.

சபரிமலைக்குச் செல்ல முதலில் நிலக்கல் என்ற இடத்துக்குப் போகவேண்டும். முதல் நாள் நிலக்கல் சென்ற நான், கோயிலுக்கு பெண்கள் செல்வதை எதிர்த்து போராட்டம் நடத்திய இந்து அமைப்புகளிடம் அவர்களின் கருத்துக்களைக் கேட்டு செய்தியை அனுப்பினேன்.

ஆண் செய்தியாளர்கள் இல்லையா?

போராட்டக்குழுவைச் சேர்ந்த பெண்கள் வண்டிகளை மறித்து கோஷமிட்டார்கள். அந்தக் குழுவில் இருந்த ஆண்கள் மேலும் உற்சாகத்தோடு கோஷமிட்டனர். சிறிது நேரத்தில் வாகனத்தை மறிப்பது என்பதை அடுத்து, அதில் இளம் பெண்கள் இருந்தால் இறக்கிவிட்டுச் செல்லுங்கள் என வலுக்கட்டாயமாக போராட்டம் நடத்தினார்கள். குடும்பத்துடன் வந்தவர்கள் திருப்பி அனுப்பபட்டார்கள்.

பலகாலமாக பம்பை வரை பெண்கள் அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பால் பம்பை வரை செல்வதற்குகூட பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த செய்திகளை படங்கள் எடுத்தேன், காட்சிகளை பதிவு செய்தேன், சிறிது நேரத்தில் போராட்டத்தில் இருந்தவர்கள், ''உங்கள் அலுவலகத்தில் ஆண் செய்தியாளர்களை அனுப்பவேண்டியதுதானே. நீ ஒரு பெண், உன்னை ஏன் அனுப்புகிறார்கள்,''என்று கேள்வி எழுப்பினார்கள்.

இது என்னுடைய வேலை. அதற்காக வந்துள்ளேன், என்றேன். என் பதிலை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. மீண்டும் அதே கேள்வியைதான் முன்வைத்தார்கள். போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டு இருத்தது. கோயில் நடை அடுத்த நாள் திறக்கப்படும் என்பதால், நிலக்கல்லில் இருந்து திரும்பிவந்து, செய்திகளை அனுப்பும் வேலையில் இருந்தேன். மாலை நேரத்தில் பெண் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற செய்தி வந்தது.

''இளம்பெண் என்பதால் நீ திரும்பி போ''

பரபரப்பான காட்சிகளை கேரள பத்திரிகையாளர்கள் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். என்னைப் போலவே செய்தி சேகரிக்க வந்த இரண்டு பெண் செய்தியாளர்களை போராட்ட கும்பல் தடுத்து திரும்பி போக கட்டாயப்படுத்தியது. சில ஊடகத்தினரின் வாகனங்கள் தாக்கப்பட்டன.

அடுத்த நாள் காலை நிலக்கல்லை நெருங்கும்போது, வழியில் காவி உடை உடுத்திய போராட்டக்காரர்கள் நான் வாகனத்தில் இருந்து இறங்க வேண்டும் என்றார்கள். என் வேலையை செய்ய விடுங்கள் என்றேன். நீ இளம்பெண், உன்னுடன் வந்துள்ள ஆண் செய்தியாளரை மட்டும் அனுப்பு. நீ திரும்பிப்போ என்றார்கள். வண்டிகள் எல்லாம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன, வேறு வழியில் செல்லமுடியாது என்றார்கள்.

என்னுடன் வந்திருப்பது ஒளிப்பதிவாளர், நான் ஒரு செய்தியாளர் என்று விளக்கினேன். அது அவர்களுக்கு புரிந்ததா என்றே தெரியவில்லை. "திரும்பத் திரும்ப, பெண்கள் போக முடியாதுனு சொன்னால், நாங்கள் சொல்வதை கேள், இளம்பெண் என்பதால் நீ திரும்பி போ" என்றார்கள்.

பிரார்த்தனை செய்து அச்சுறுத்த முடியுமா?

போராட்டக்காரர்கள் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டார்கள். ஒரு வழியாக காவல்துறையினர் அங்கு வந்ததால், அந்த கும்பல் என்னை விட்டுச் சென்றது. என்னால் நிலக்கல்லில் இருந்து பம்பை செல்லமுடிந்தது.

செய்தியாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற செய்தி தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. போராட்டம் நடத்தும் நபர்கள் கோஷமிட்டவாறு அரசு பேருந்தில் வந்த பெண்களை இறக்கிவிட்ட காட்சிகள் தொலைகாட்சிகளில் வந்தன.

பம்பைக்கு குழந்தையுடன் வந்த ஒரு இளம் பெண் காவல்துறையின் அனுமதியுடன் கோயிலுக்கு செல்லமுற்பட்டபோது, போராட்டம் நடத்திய நபர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள், தடுக்க முற்பட்டார்கள் என பிற செய்தியாளர்கள் கூறினார்கள். ஆனால், நான் பம்பை சென்று சேர்வதற்குள் அந்த பெண் சென்றுவிட்டார் என்பதால் என்னால் அவரை சந்திக்க முடியவில்லை. பம்பையில் நடக்கும் நிகழ்வுகளை அவ்வப்போது அலுவலகத்திற்கு தெரிவித்துவந்தேன்.

கல்வீச்சில் மாட்டியபோது ஏற்பட்ட நடுக்கம்

பம்பையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு எதிரில் போராட்டம் நடத்திய நபர்கள், அதிக சத்தத்துடன் பாடல்களை பாடினார்கள்.. அதில் பலரும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள். மாலையிட்டு கோயிலுக்கு வந்த ஐயப்ப பக்தர்கள் அல்ல என்பதுமட்டும் தெரிந்தது. அந்த வழியில் வந்த பக்தர்கள், இருமுடியுடன் வேகமாக நடந்து, தரிசனம் காண சென்றார்கள். பெண் குழந்தைகளும், வயதான பெண் பக்தர்கள் சிலரும் எங்களை கடந்து போனார்கள்.

போராட்டம் நடத்தியவர்கள் மட்டும் கோஷமிட்டுக்கொண்டிருந்தார்கள். அவ்வப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் உச்சநீதிமன்றம் தடையை விலக்கலாம், ஆனால் அந்த தீர்ப்பை மீண்டும் ஆலோசிக்கவேண்டும் என்பது எங்கள் கோரிக்கை என்று கூறினார்கள்.

பம்பை மற்றும் நிலக்கலில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வந்தது. ஆனால் இதை உறுதிப்படுத்தாமல் செய்தியாக வெளியிடக்கூடாது என்பதால், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றேன். அதிகாரிகளுடன் பேசிவிட்டு வெளியேறும் சமயத்தில், போராட்டம் நடத்தியவர்களை கைது செய்ய பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது.

ஒரு சில வினாடிகளில் போராட்டம் நடந்த இடத்தில் இருந்து பலர் கற்களை காவல்துறையினர் மீதும், அங்குள்ள பத்திரிகையாளர்கள் மீதும் எறிந்தனர். அங்கிருந்த சில பத்திரிகையாளர்கள் சிலர் தொடர்ந்து அந்த காட்சிகளை பதிவு செய்துகொண்டிருந்தனர்.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR / Getty images

காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து வெளியேறிய நான் மீண்டும் அந்த அறைக்குள் ஓடிவிட்டேன். அங்கிருந்து பார்த்தபோது, கற்கள் வந்து விழுவதும், காவல்துறையினர் அந்த நபர்களை பிடிப்பதற்காக ஓடுவதுமாக இருந்தனர்.

சுமார் 20 நிமிடங்கள் கலவரம் நீடித்தது. போராட்டம் நடத்தியவர்கள் பம்பையில் பந்தளம் ராஜகுடும்பத்தினர் வந்தால் தங்குவதற்காக உள்ள ஓர் அறையில் ஓடி ஒளிந்துகொண்டனர். சிலர் காட்டுக்குள் ஓடிவிட்டனர். ஒரு சில போராட்டக்கார்களை காவல்துறையினர் கைது செய்து கொண்டுசென்றனர்.

கட்டுப்பாடு அறையில் இருந்து வெளியே வந்தபோது, ஒரு காணொளிப்பதிவர் மட்டும் அறையில் கதவருகே நின்றுருந்தார். என்னை பிடித்து அவருக்கு பின்னே நிறுத்தினார். உன்னை போன்ற பெண் பத்திரிகையாளர்களைதான் குறிவைத்து தாக்குகிறார்கள் என்றார். அவரது தோள் மீது கேமரா இருந்தது, அவர் நடுங்கிக்கொண்டேஇருந்தார். அந்த நடுக்கம் என்னையும் பற்றிக்கொண்டது.

நிலக்கல்லில் நேரலையில் செய்தி வழங்கிக்கொண்டிருந்த செய்தியாளர்கள் தாக்கப்பட்ட காட்சிகள் வந்துசேர்ந்தன. மாலையில் பம்பையில் இருந்து நிலக்ககல் செல்வதில் ஆபத்து இருப்பதால், அங்கே தங்கினேன்.

''பெண் என்பதால் பத்திரமாக இரு''

உணவு அருந்த சென்ற சமயத்தில், நண்பர்களுடன் சென்றேன். கடைக்கு வந்தவர்கள் என்னை வித்தியாசமாக பார்த்தார்கள். ஏன் ஒரு பெண்ணை இங்கு கூட்டி வந்தீர்கள் என்று என் நண்பர்களிடம் கேட்டார்கள். நான் செய்தியாளர் என்று சொன்னதும் பாதுகாப்பாக இருக்குமாறு ஒரு சிலர் அறிவுறுத்தினார்கள். ஒரு சிலர் பெண்ணாக இருக்கும் நான் ஏன் இங்கு வந்தேன் என்று கேள்வி எழுப்பினார்கள்.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

144 தடை உத்தரவு அமலில் இருந்ததால், மூன்றாவது நாள் காலை, போராட்டம் நடத்தும் நபர்கள் பம்பையில் இல்லை என்று எண்ணினேன். ஆனால் அதைவிட பதட்டமான சூழல் நிலவியது. போராட்டம் நடத்தும் சிலர், ஐயப்ப பக்தர்களுடன் கலந்து வரத்தொடங்கினர். ஒரு சிலர் எங்களை புகைப்படம் எடுத்துச்சென்றனர்.

சபரிமலை கோயிலுக்குச் சென்று செய்தி சேகரிக்க வந்த ஒரு பெண் செய்தியாளர் மற்றும் அவரது ஒளிப்பதிவாளர் இருவரும் சென்றுபோது, பாதிவழியில் போராட்டக்காரர்கள் தீடீரென வந்து தடுத்து நிறுத்தினர். அச்சுறுத்தல் காரணமாக இருவரும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் வெளியேறினர்.

நிலைமையை கருத்தில் கொண்டு, என் நண்பர்களுடன் காவல்துறையின் உதவியுடன் பம்பையில் இருந்து நிலக்கல் வந்துசேர்ந்தேன்.

`ஐயப்பனுக்காக காத்திருக்கும் பெண் தெய்வம்'

பம்பை வரை சென்ற நான், சபரிமலையில் உள்ள மாளிகைபுறத்தம்மன் குறித்த செய்தியை சேகரிக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் இருந்தேன்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஐயப்பன் பிரமச்சாரி என்பதால் பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது என்பதுதான் போராட்டம் நடத்துபவர்கள் வாதம். ஆனால் ஐயப்பனை திருமணம் செய்வதற்காக, அவருக்காக அவரது மாளிகைக்கு புறத்தே காத்திருக்கும் பெண்தான் மாளிகைபுறத்தம்மா என்று நம்பப்படுகிறது.

கன்னிசாமி (முதல் முறையாக மாலையிட்டு விரதமிருந்து ஐயப்பன் கோயிலுக்கு வருபவர்) வராமல் இருக்கும் நாள் எதுவோ அந்த நாளில், திருமணம் செய்துகொள்வதாக இந்த பெண்ணுக்கு ஐயப்பன் வாக்கு கொடுத்தார் என்பது பக்தர்களால் நம்பப்படும் ஐதீகம். ஐயப்பனுக்காக காதலுடன் காத்திருக்கும் இந்த பெண்ணின் கதையை சேகரிக்க வந்திருந்தேன்.

சபரிமலைக்கு 10 முதல் 50 வயதுக்கு உள்பட்ட பெண் பக்தர்கள் வரக்கூடாது என்ற முடிவில் பலருக்கும் வித்தியாசமான கருத்து இருக்கலாம். ஆனால் பெண் செய்தியாளர் என்பதாலே என் வேலையை செய்வதற்கு எனக்கு தடை ஏற்பட்டது இதுவே முதல் முறை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்