குழந்தை பேறுக்கு பின் வரும் மன அழுத்தம் - கடந்து வந்தது எப்படி? #beingme

பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் ஏழாவது கட்டுரை இது.

பெண்கள்

ஒரு பெண் தாய்மை அடையும்பொழுது புதிய பிறவி எடுக்கிறாள் என்று பலரும் சொல்லிக் கேட்டிருப்போம்.

எல்லோருக்கும் இந்த தாய்மை அடையும் அனுபவம் ஒரே விதமாக அமையும் என்றும் சொல்ல முடியாது. பலருக்கு அந்த தாய்மை அடையும் பருவம் வசந்தகாலமாக அமைந்தாலும், சில பெண்களுக்கு அது நீந்திக் கடக்க வேண்டிய சீற்றம் கொண்ட கடலாகவே அமைகிறது. அது போன்ற சில பெண்களில் நானும் ஒருத்தி.

என் வயதையுடைய பல பெண்கள், என்னுடன் படித்த தோழிகள் எல்லாம் வெளிநாடுகளுக்கு பயணம் செய்து கொண்டும், மேல்படிப்பு படித்துக்கொண்டும் இருக்கையில், கையில் குழந்தையுடன் என்னை கண்ணாடியில் பார்த்தபோது, என்னை நானே வெறுத்தேன். இதற்கு நான் என்னை தயார்ப்படுத்தி கொள்ளவில்லையே என்ற எண்ணம் என்னை அறியாமல் என்னை ஆட்கொண்டது.

அதனை தொடர்ந்து இரண்டு வருடங்கள் வரை நான் கடந்த ஒவ்வொரு நாளும் நொடியும் நரகம் தான்.

குழந்தை பேறுக்கு பிறகு வரும் மன அழுத்தம்

சிறு வயதில் ஏற்பட்ட சில கசப்பான பாலியல் வன்முறை சம்பவங்களால் ஆழ்மனதில் காயங்களை சுமந்துக்கொண்டு வாழ்ந்து வந்த என்னை, டிப்ரெஷன் என்று சொல்லக்கூடிய மன அழுத்தம் என்ற அந்த கொடிய அரக்கன் மீண்டும் நெருங்கத்தொடங்கினான். அறிவியல் சொற்களில் போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன் என்பர். குழந்தைப்பேற்றுக்கு பின் சில பெண்களை ஆட்கொள்ளும் மன அழுத்தம் இது. இதனை நான் ஒரு பொழுதும் நோய் எனக் கூறமாட்டேன். நான் நோயாளியும் அல்ல. இது ஒரு விதமான மனநிலை. எனது வாழ்க்கையில் கடினமான ஒரு பருவமாகவே இப்பொழுது இதனை பார்க்கிறேன்.

"இதெல்லாம் வெறும் கட்டுக் கதை. நாங்க எல்லாம் புள்ளையே பெத்ததில்லையா? புள்ளைய பெத்தோமா, வளர்த்தோமானு ஏதாவது வேலை செஞ்சுக்கிட்டே இருந்தா, இதெல்லாம் ஒன்னும் தோணாது" என்று எளிதாக சொல்லிவிட்டு செல்வார்கள். ஆனால், எனது இடத்திலிருந்து என்னை புரிந்துகொள்ள யாரேனும் இருக்கமாட்டார்களா என்று மனம் ஏங்கும்.

அன்று முதல் இன்று வரை ஒரு தாய் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒரு இலக்கணம் வகுத்து, அந்த கட்டத்துக்குள் நீ கண்டிப்பாக உன்னை நிரூபிக்க வேண்டும் என்று அந்த புதிய தாய்க்கு அழுத்தம் தர ஆரம்பிக்கிறார்கள். நானும் அது போன்ற அறிவுரைகளை ஒவ்வொரு நாளும் கேட்க நேர்ந்தது. என்னால் இது போல இருக்க முடியுமா என்ற சந்தேகம் என்னை இன்னும் ஆழ்குழியில் தள்ளியது.

புரியாத அலறல்கள்

என் மூளைக்குள் வேறு யாரோ புகுந்தது போன்ற ஒரு உணர்வு. காரணமே இல்லாமல் தலையணைக்குள் முகத்தை புதைத்து அழுத தருணங்கள் எத்தனையோ. சமையலறையில் ஏதேனும் செய்துக்கொண்டிருக்கும் வேளையில், திடீரென அதனை அப்படியே விட்டு விட்டு மனம் வேறொரு பாதையில் செல்லும். கண்ணிமைக்க முடியாமல், எதையோ வெறித்துப்பார்த்துக் கொண்டே இருக்கையில், என் காதுகளில் யாரோ அலறுவதும் திட்டுவதும் பலமாக கேட்கும். "நீ எதுக்குமே லாயக்கில்லை. உனக்கு எதுவுமே தெரியல. குழந்தையை வளர்க்கறதெல்லாம் உனக்கு வராது. இதுக்கான திறமையெல்லாம் இல்லாம, தயாராகாம எதுக்கு உனக்கு இந்த குழந்தை?" என்பது போன்ற அசரீரியான குரல்கள் ஒலிக்கும் ஒவ்வொரு தருணமும் நரகமாக இருந்தது.

எதற்காக வாழவேண்டும் என்று தொடங்கி சில நேரங்களில் தற்கொலை எண்ணங்களையும் சந்தித்திருக்கிறேன். வெளியில் பகிர்ந்தால், அனுதாபம் நாடுவதாக புரிந்துகொள்வார்களே ஒழிய, பொறுமையாக எனது உணர்வுகளை கேட்க யாரும் தயாராக இல்லை. இன்னும் கொடுமையான விஷயம் என்னவென்றால், "இதோ பாரு, டிப்ரெஷன் நடந்து வருது" என்று கேலி செய்தவர்களும் உண்டு. மனதினுள் போராட்டம் வலுத்தது.

உள்ளிருக்கும் எண்ணங்களை பகிர, நம்பிக்கையான நபர்கள் யாருமில்லாமல் போனால், இந்த மன அழுத்தம் அதிகமாகி நம்மையே தின்றுவிடுவது போன்ற உணர்வு ஏற்படும். குழந்தையின் அழுகுரல் கேட்கும்போதெல்லாம், ஒரு எரிச்சல் வந்துபோகும். இவற்றை எல்லாம் கடந்து பயணித்தேன். பாலூட்டிக் கொண்டிருந்த போதும், அடிக்கடி பட்டினி கிடப்பேன். "அவசரப்பட்டு முடிவுகள் எடுத்ததுக்கு இது தான் உனக்கு தண்டனை" என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். இதனால் ஒரே மாதத்தில் 8 கிலோ எடை இழந்தேன். டிப்ரெஷன் ஒருவரை மனதளவில் மட்டுமில்லாமல் உடலளவிலும் பாதிக்கும் சக்தியுடையது.

நம்மிடம் இருந்தே முயற்சிகள் தொடங்க வேண்டும்

வீட்டினுள்ளேயே அடங்கி கிடப்பதால் தான் இது ஏற்படுகிறது என்று யோசித்து, ஒரு வேலையில் சேர்ந்தேன். ஆனால் பணியில் முழு கவனம் செலுத்துவது என்பது கடினமாக இருந்தது. ஒரு கட்டத்தில், என் குழந்தைக்கு ஒரு வயது நெருங்கும் வேளையில் , ஒரு உளவியலாளரின் உதவியை நாடினேன். டிப்ரெஷன் என்பது மூடி மறைத்து, மறக்க முயற்சிக்க வேண்டிய விஷயம் இல்லை. நம்மால் அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை என்றால், அதற்கான சரியான உதவியை நாடுவது தவறில்லை. இதனை அந்த தாய் மட்டுமில்லாமல், அவரை சுற்றியிருப்பவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

உளவியல் ஆலோசனை என்பது ஓரிரு மாதங்களில் முடிவதில்லை. ஒரு வாரம் மனது நாம் சொல்வதைக் கேட்டு நடந்துகொள்ளும். அடுத்த சில வாரங்களில், வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதையாக இருந்தது எனக்கு. மீண்டும் உளவியலாளரிடம் ஓடுவேன். மருந்துகள் உட்கொண்டால் சரியாகுமா என்ற எண்ணம் தோன்றவே, மனநல மருத்துவரையும் சந்தித்தேன். எனினும் அவரது ஆலோசனைப்படி மருந்துகள் இல்லாமலே இந்த கட்டத்தை கடக்கமுடியுமா என்று முயற்சிப்போம் என முடிவானது. நான் குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த பருவம் என்பதாலும் இந்த முடிவு எடுத்தோம்.

பட மூலாதாரம், Getty Images

காலப்போக்கில், இதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்றால், அதற்கான முயற்சிகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், என்னிடமிருந்து தான் அந்த மாற்றம் ஏற்படும் என்று புரிந்தது. என் மனதை திசைதிருப்பும் முயற்சிகளை தொடங்கினேன். சமையல், ஷாப்பிங், கைவினை பொருட்கள் செய்வது என இது ஒன்றும் அது ஒன்றுமாக எனது மனதை வேறு திசைகளில் திருப்பினால், காலப்போக்கில் என் மன உளைச்சல் மறைந்தும், மறந்தும் போய்விடும் என்று நினைத்தேன். சில மாதங்களுக்கு தாக்குப்பிடிக்க முடிந்தது. ஆனால் இது வெகுநாட்களுக்கு நிலைக்கவில்லை. மனதிற்கும் மூளைக்கும் தொடர்ந்து ஏதேனும் வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரம் சும்மா இருந்தாலும், தேவையில்லாத எண்ணங்கள் தலையில் தாண்டவம் ஆடத்தொடங்கும். சமூக வலைத்தளங்களில் சோகமான வரிகளை பகிர்ந்து, நம்மை யாரேனும் கவனிக்கிறார்களா என்ற ஏக்கம் என்னை ஆட்கொள்ளும். இது மற்றவர்களுக்கு எரிச்சலாக இருக்கும், ஆனால் மன அழுத்தத்திற்கு ஆளானவரின் இடத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே அந்த வலி புரியும்.

இன்னும் சில மாதங்கள், முறையாக கவுன்சிலிங் சென்ற பிறகு, எனது சந்தோஷத்தை வெளியில் தேடாமல், என்னுள்ளேயே தேடவேண்டும் என்பது புரியத் தொடங்கியது. இதிலிருந்து மீண்டு வர ஒரு ஊன்றுகோலாக உளவியலாளரின் ஆலோசனைகள் எனக்கு உதவியது. பல பாசிட்டிவ் கதைகளையும், பழமொழிகளையும் படிக்கத்துவங்கினேன்.

சில நாட்களில் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்து முதல் அடியை தரையில் வைப்பது என்பதே பெரிய சாதனையாகத் தோன்றும். சில நேரங்களில் நம் பலவீனம் என்ன என்பதை அறிந்திருப்பதே ஒரு விதமான பலம் என்று கூட தோன்றுகிறது. அந்த பலவீனம் நம்மை தோற்கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.

நமது மூளையில் சில குறிப்பிட்ட ஹோர்மோன்-களை நம்மால் சுரக்க வைக்க முடியும். அதன் மூலம், நமது மனநலத்தை நம்மால் பாதுகாக்க முடியும் என்ற உண்மையை அறிந்தேன், சுய அனுபவத்தில் உணர்ந்தேன். உடற்பயிற்சி செய்யும்போது செரோடோனின் , என்டோர்பின் போன்ற ஹோர்மோன்கள் சுரந்து, நமது மூளையில் செயல்படுகின்றன. ஒட்டப்பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். 30 நொடிகள் தொடர்ந்து நடந்தாலே மூச்சுவாங்கும் என்ற நிலையிலிருந்து, இப்போது 5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் தூரம் வரை ஓடியே கடக்க முடியும் என்ற இலக்கை எட்டியுள்ளேன். இது போன்ற சின்னஞ்சிறு சாதனைகள் செய்து, என்னுடைய சுயத்தை எனக்கே நிரூபித்து முன்னேறுகிறேன். மன அழுத்தத்தில் உழலும் என் பெண் தோழிகளுக்கு எனக்கு தெரிந்த இந்த யுக்திகளை பற்றி எடுத்துக்கூறி உதவி வருகிறேன்.

குழந்தை பிறந்த பிறகு, பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், "இதெல்லாம் ஒரு விஷயமா..குழந்தையை கவனி.. இனிமே அவன் தான் உன் உலகம்" என்று சாதாரணமாக சொல்லி விடுவார்கள். அந்த தாய்க்கும் இது ஒரு புதிய தொடக்கம், புதிய சூழல் என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. தாய் என்பதை தாண்டி, அவளும் ஒரு தனித்துவம் வாய்ந்த பெண்மணி என்பதை மறந்து விடுகிறோம். அவள் மீது நம் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் திணிக்கிறோம்.

வெளிநாடுகளில் குழந்தைப்பேற்றுக்கு பிறகு, நிச்சயமாக அந்த கணவனும் மனைவியும் கவுன்சிலிங் பெற்றுக்கொள்ள வேண்டும். இருவரையும் இந்த பெற்றோர் என்ற பயணத்திற்கு தயார்படுத்துகிறார்கள். இங்கும் அந்த பழக்கம் பரவலாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதனை சுற்றி இருக்கும் அறியாமை விலக வேண்டும்.

போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷனிலிருந்து மீண்டு வந்துவிட்டேன். அந்த பயணத்தில் ஒரு அதீதமான பலமும் கிடைத்தது. இனி மீண்டும் இந்த அரக்கன் என்னை நெருங்கினால், அவனை எதிர்கொள்ளும் நம்பிக்கை என்னிடம் உள்ளது. இருளைக் கண்டாலும், இதன் முடிவில் ஒரு வெளிச்சம் உண்டு என்று தைரியமாக என்னால் முன்செல்ல முடியும். எனவே உறுதியாக ஒரு விஷயம் என்னால் கூற முடியும். எவரொருவர் டிப்ரெஷன் என்ற இந்த பாதையில் வீழாமல், தாக்குப்பிடித்து கடக்கிறார்களோ, அவர்களை விட இந்த உலகில் மனபலம் நிறைந்தவர் வேறு எவருமே இல்லை என்று என்னால் நிச்சயம் கூறமுடியும்.

(சென்னையில் தொண்டு நிறுவனமொன்றில் தகவல் தொடர்பு மேலாளராக பணிபுரிந்து வரும் ஒரு பெண்ணின் அனுபவங்களே இந்தக் கட்டுரை. பெண்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் குறித்து பேசப்படும் இந்த #beingme தொடர் பிபிசி தமிழ் செய்தியாளர் விஷ்ணுப்ரியா ராஜசேகரால் தயாரிக்கப்பட்டது.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :