#MeToo விவகாரத்தில் ஏன் இத்தனை கடுமை? தீர்வை நோக்கி செயல்படுவதில் என்ன சிக்கல்?

மீ டூ படத்தின் காப்புரிமை Getty Images

இதை நீங்கள் ஏன் முன்னரே சொல்லவில்லை, நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம்? சட்ட ரீதியான நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை?

மீ டூ (#MeToo) இயக்கத்தின் மூலம், பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானதாக கூறப்படும் பெண்கள் முன் வைக்கப்படும் அடுத்தடுத்த கேள்விகள் இவை.

ஒரு புகாரை தெரிவிக்கும் போது அதன் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு கேள்விகள் கேட்பது இயல்புதான். ஆனால் புகாரை தெரிவிப்பவர்களை ஒட்டு மொத்தமாக ஒடுக்கிவிடுவதாக நமது கேள்விகள் இருப்பதில் நியாயமில்லை.

மீ டூ வை யாரும் தவறாக பயன்படுத்திவிடக் கூடாது. இது எந்த ஒரு தனிமனித தாக்குதலுக்கும் வித்திடக்கூடாது என்ற ஆதங்கம் சரிதான். ஆனால் அதே சமயம் புகார் கூறும் பெண்கள் தரப்பில் இருந்து யோசித்துப் பார்க்க வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இவ்வாறு ஒரு புகார் தெரிவித்தால் முதலில் அந்தப் பெண்ணின் ஒழுக்கத்தை நோக்கிய கேள்விகள்? பின் நீ ஏன் அங்கு சென்றாய்? ஏன் அவ்வாறு நடந்து கொண்டாய்? அவர்கள் உன் மீது அந்தத் தாக்குதலை நடத்தும்படியாக நீ என்ன செய்தாய் என ஆயிரம் கேள்விகள்?

சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க ஏன்முன்வரவில்லை?

படத்தின் காப்புரிமை Chinmayi Sripada/Facebook

நம் வீட்டில் ஒரு பொருள் திருடு போய்விட்டது என்றால் அதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவோ அல்லது அதுகுறித்து வெளியில் கூறவோ தயங்குவதில்லை.

ஏனென்றால் அதில் குற்றம் செய்தவர் தண்டனைக்குரியவராகவும், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு நியாயமானதாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால் பாலியல் துன்புறுத்தல் குறித்து ஒரு பெண் வெளியே கூறுவதற்கான இணக்கமான சூழல் ஒன்றும் இங்கு நிலவவில்லை.

மேலும் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட பெண் மட்டும் அல்ல அவளது குடும்பத்தினர் முழுவதும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

அப்படியென்றால் யார் புகாருக்கு ஆளாகிறார்களோ, அவர்களுக்கு குடும்பம் இல்லையா? அவர்கள் வீட்டில் இருக்கும் பெண்களை அவர்கள் பற்றி என்ன நினைப்பார்கள் என்று கேட்கலாம்?

இந்த மீ டூ இயக்கத்தில் ஒரு புகார் கூறிவிட்டால் மறு தரப்பில் உள்ளவர் குற்றவாளி என்று அர்த்தமில்லை. இது முழுக்கமுழுக்க பெண்கள் தாங்கள் பேசத் தயங்கியதை தைரியமாக எடுத்துக் கூறுவதற்கான ஒரு கருவிதான்.

இத்தனை கடுமை ஏன்?

சென்னையில் சின்மயி, லீனா மணிமேகலை, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீ டூ புகார் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இருதரப்பினருக்கு பொதுவானதாக கேள்விகளை முன் வைப்பது பத்திரிகையாளர்களின் கடமைதான். ஆனால் மீ டூ போன்ற புகார்கள் குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அத்தனை கடுமை காட்ட வேண்டிய அவசியம் என்ன?

இரண்டு தரப்பையும் நியாயமாக அணுகவேண்டும் என்ற எண்ணம் சரிதான். ஆனால் ஒருவர் புகார் கூறினால் அதை பொறுமையாக கேட்டு அதற்கு தீர்வு என்ன என்பதையும், இதைப் போன்ற குற்றங்கள் எதிர் வரும் காலங்களில் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் யோசிப்பதே மீ டூ புகார்களை நாம் ஆக்கப்பூர்வமானதாக அணுகுவதாக அமையும்.

என்ன நடந்தது? எப்போது நடந்தது? இத்தனை வருடங்கள் கழித்து சொல்வது ஏன்? என திரும்ப திரும்ப கேட்ட கேள்விகளையே கேட்க வேண்டிய அவசியம் என்ன?

மீ டூ வை பொறுத்த வரையில் சமூக வலைத்தளங்களே முக்கிய ஊடகம். இருப்பினும் தொலைக்காட்சி போன்ற முதன்மை ஊடகங்கள் இம்மாதிரியான விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்லும்போது அதிக பொறுப்புணர்வுடன் செயல்படுவது இருதரப்பிலும் ஏற்படும் மன உளைச்சல்களை பெருமளவு குறைக்கக்கூடும்.

பள்ளிகள், கல்லூரிகள், பொது வெளிகள், பணியிடங்கள் என அனைத்து இடங்களிலும் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு பெண்கள் ஆளாகின்றனர் என்பதை நாம் செய்தியில் பார்த்தோ அனுபவத்தினாலோ தெரிந்து கொள்கிறோம்.

பெண்கள் தங்கள் கனவுகளை நோக்கி பயணிக்கும்போது அவர்களின் கனவுகளுக்கு இடையூறாக பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ, பணியிடங்களிலோ பாலியல் தொல்லைகளை சந்தித்தால் எவ்வளவு பெரிய கொடுமை அது?

விசாகா வழிகாட்டுதலின்படி பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் தெரிவிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும். அதில் அலுவலகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வழக்குரைஞர் ஒருவரும் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் சினிமா துறையில் உள்ள பெண்களுக்கென இம்மாதியான பாதுகாப்பு நடவடிக்கைகள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை என்ற விமர்சனம் இருக்கிறது.

ஹாலிவுட் தொடங்கி தற்போது இந்தியா சினிமா, தென்னிந்தியா சினிமா, தொலைக்காட்சித் துறை என அனைத்திலும் தங்களுக்கு பாலியல் ரீதியாக ஏற்பட்ட தொல்லைகள் குறித்து பெண்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

திரைத் துறைகளில் மட்டும் அல்ல சிறு சிறு நிறுவனங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்தும் பெண்கள் வெளிப்படையாகப் பேச வேண்டும்

அதற்கு வழிகாட்டியாக ஊடகங்கள் இருக்க வேண்டும் ஆனால் அத்தகைய முக்கிய பொறுப்பில் இருப்பவர்களே அது குறித்து ஏளனமாக கேள்வி கேட்பதும், புகார் கூறுபவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதும் சரியன்று.

புகார் கூறுபவர்களை கேலி செய்யும் விதமாக மீம்களை தயாரிப்பது என்கிற போக்கும் ஆரோக்கியமானதாக இல்லை.

இன்னும் சில இடங்களில் பெண்கள் நெருப்பாக இருந்தால் ஏன் மீ டூ எழுகிறது என்பது போன்ற கேள்விகளும் முன் வைக்கப்படுகின்றன.

இது பெண்களை பாராட்டுவதாக நினைத்து அவர்கள் கூறுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் இதுவும் பெண்ணின் நடத்தை குறித்து மறைமுகமாக எழுப்பப்படும் கேள்விதான்.

இத்தனை வருடங்கள் ஆகியிருக்கிறது பெண்கள் அவர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளியில் சொல்ல. எனவே இம்மாதிரியான புகார்களை அணுகுவதில் ஆண்களுக்கும் பெரும் பங்குண்டு.

படத்தின் காப்புரிமை @TARAOBRIENILLUSTRATION

பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசத் தொடங்கினால் மட்டுமே அதற்கான தீர்வை எட்ட முடியும். எனவே காலம் காலமாக நீடிக்கும் இந்த பிரச்சனை குறித்து இப்போது பேசத் தொடங்கியுள்ளனர் என்பதை நாம் வரவேற்க வேண்டும்.

மீ டூ மூலமாக பெண்கள் மீது தொடுக்கப்படும் குற்றங்கள் அனைத்தும் குறைந்துவிடும் என்பதோ அல்லது இதனால் அனைத்துமே மாறிவிடும் என்பதோ பொருள் அல்ல. இதன்மூலம் பெண்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டால் அதை வெளிப்படையாக கூற முன் வருவார்கள்.

இம்மாதிரியான தருணங்களில் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளியாக சித்தரிக்கப்படும் நிலை மாறும்.

பெண்களுக்கு பாலியல் தொல்லை தருபவர்களுக்கு தங்களின் பெயர் வெளியே வந்துவிடும் என்று தெரிந்தால் அச்சம் ஏற்படும். இது இந்த மீ டூ இயக்கத்தின் தொடக்கப்புள்ளி.

எனவே தற்போது பெரிதாக வெடித்துள்ள இந்த மீ டூ வை அழுத்தி வைக்கப் பார்க்காமல் அதன் மூலம் நாம் என்ன தீர்வை எட்டப் போகிறோம் என்பதை யோசிக்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :