#MeToo: புகார் செய்த பெண்கள் இப்போது என்ன நினைக்கிறார்கள்?

#MeToo

"எம்.ஜே.அக்பர் எப்படி என்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தினார் என்பதை வெளியில் சொன்னபிறகு, என்னுடைய தன்னம்பிக்கையின் அளவு அதிகரித்திருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் மாற்றங்களை கொண்டு வருவது சாத்தியமே" என்று சொல்கிறார் பத்திரிகையாளர் கஜாலா வாஹப்.

சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சராக எம்.ஜே. அக்பர் இருந்தபோது, அவர் மீது #MeToo பிரசாரம் மூலமாக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைத்த இரண்டாவது பெண் கஜாலா வஹாப்.

#MeToo பிரசாரம் இந்தியாவில் எப்படி ஊக்கம் பெற்றது, அதன் எதிர்வினைகள் என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம். எதிர்வரும் மாதங்களில் நம் சமுதாயத்தில் இதன் தாக்கங்களை நாம் காணலாம்.

படத்தின் காப்புரிமை iStock

ஆனால், தங்கள் அனுபவங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு வழிவகுத்த செயல்முறை இந்த பிரசாரம் என்றால், அவர்கள் அதை வெளிப்படுத்தியதால் அவர்களுடைய வாழ்க்கை எப்படி மாறியது என்பதும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

"என்னுடைய அனுபவத்தை நான் வெளிப்படையாக சொன்னதும் எனது மனதில் இருந்த பாரம் குறைந்துவிட்டது, முடிவெடுப்பது தொடர்பான எனது குழப்ப நிலை முடிந்துவிட்டது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

தி வயர் பத்திரிகையில் பணிபுரியும் அனு புயன், தான் சந்தித்த பாலியல் துன்புறுத்தல் அனுபவத்தைப் பற்றி எழுதியபோது, அது தனக்கான வழியை தானே எடுத்துக் கொண்டதாக அவர் சொல்கிறார். பாலியல் துன்புறுத்தல்களை நேரிடையாக எதிர்கொண்ட பெண்கள் #MeToo என்ற டிவிட்டர் ஹாஷ்டேக் மூலம் அதை வெளியிடத் தொடங்கியபோது, தனது அனுபவத்தை முதலில் பதிவு செய்த சொற்ப பெண்களில் அனு புயனும் ஒருவர்.

"எனக்கு நடந்த துன்புறுத்தலை நான் வெளியிட்டதும், பல பெண்கள் தொடர்ந்து என்னை தொடர்பு கொள்ளத் தொடங்கினார்கள். மறுபுறம், நண்பர்கள், சக பணியாளர்கள் உட்பட ஆண்கள் யாரும் என்னிடம் இதுபற்றி பேசவில்லை" என்று சொல்கிறார் அனு புயன்.

#MeToo ஹாஷ்டாகின் கீழ் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பாஜக-வை சேர்ந்த வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் புதன்கிழமைறு பதவி விலகியது, இந்தியாவில் #MeToo பிரசாரத்தை வேறொரு தளத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.

படத்தின் காப்புரிமை @TARAOBRIENILLUSTRATION

பெண்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற உத்வேகத்தை பெண்களுக்கு இது கொடுக்கும் என்று கஜாலா நம்ப்பிக்கை தெரிவிக்கிறார். ஒரேவிதமான வலிகளை அனுபவித்திருக்கும் பெண்கள், தங்களைப் போன்ற ஒரு பெண் இலக்கு வைக்கப்படும்போது பேச முன்வருவார்கள் என்று அவர் சொல்கிறார். இது ஒரு தனிப்பட்ட போராட்டம் அல்ல, கூட்டான போராட்டம் என்று சொல்லும் அவர், "பெண்கள் ஒன்றிணைந்ததால், எம்.ஜே அக்பரின் மீதான குற்றச்சாட்டு வேறு வடிவத்தை எடுத்தது" என்கிறார் கஜாலா.

இதுவரை கிடைக்காத ஆதரவு இது

'நீ உண்மையைப் பேசுகிறாய் என்று நம்புகிறேன்' என்பது போன்று தமக்கு வந்த செய்திகள் தம்மை திக்குமுக்காட வைத்ததாக. 'தி ஆசியன் ஏஜ்' பத்திரிகை ஆசிரியர் சுபர்ணா ஷர்மா கூறுகிறார்.

தனது குடும்பத்தினரும் நண்பர்களும் தொடர்ந்து இந்த முயற்சியில் ஆதரவளித்திருப்பதாக கூறும் சுபர்ணா ஷர்மா, ஆனால் தனக்கு அறிமுகம் இல்லாதவர்கள் கூட ஆதரிப்பதாக கூறுகிறார்.

"டிவிட்டர், பேஸ்புக், நண்பர்களிடமிருந்து இந்த செய்திகள் வருகின்றன. சில சமயங்களில் பொது இடங்களில் நான் செல்லும்போது என்னை நிறுத்தி பேசுகிறார்கள். சனிக்கிழமை நான் டெல்லியில் உள்ள கான் மார்கெட்டில் உள்ள ஒரு புத்தக கடைக்கு சென்றபோது, என் தாயின் வயதுடைய இரண்டு பெண்கள் (அவர்கள் யார் என்று எனக்கு தெரியாது) என்னை அடையாளம் தெரிந்துக் கொண்டு, "உன்னைப் போன்ற பெண்கள் இப்படி வெளிப்படையாக பேசுகிறீர்கள், இது நல்லது! என்று கூறினார்கள்."

படத்தின் காப்புரிமை iStock

'நியூ கார்ப்' பத்திரிகையின் நிறுவனரும், ஆசிரியருமான ஷுடாபா பாலும் இதே போன்ற அனுபவத்தை பகிர்ந்துக் கொள்கிறார். "நான் என்னுடைய பதிவை வெளியிட்டபிறகு முதல் சில நாட்களுக்கு என் தொலைபேசி அடித்துக் கொண்டேயிருந்தது. எனக்கு ஆதாரவாகவும், தைரியம் சொல்லியும் செய்திகளை அனுப்பிக்கொண்டேயிருந்தார்கள். இதைத்தவிர வேறு எந்த வகையிலும் என் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை" என்று அவர் தெரிவித்தார்.

பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு எதிராக பேச முடிவெடுத்த தருணம்…

தற்போது அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றிருக்கும் பிரெட் கேவனோவுக்கு எதிராக டாக்டர் கிறிஸ்டின் ஃபோர்டு முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டுகளே தனக்கு தைரியத்தை கொடுத்ததாக அனு கூறுகிறார். நான் எனது அனுபவத்தை வெளிப்படையாக சொல்ல நினைத்தாலும், மெளனமாக இருந்தேன். "உண்மையில் வெட்கப்பட வேண்டியது பாலியல் துன்புறுத்தல் செய்தவர் தான். பாதிக்கப்பட்ட நான் பொறுமையாக இருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்று நினைப்பேன். பின்னர் பிரெட் கேவனோ வழக்கைப் பற்றிப் படித்தேன்."

அவரைப் போலவே அக்பரும் உயர் பதவியில் இருக்கும் நபர், பிரபலமானவராக இருந்தாலும், பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டிருந்தாலும், அது தொடர்பாக யாரும் வெளிப்படையாக பேசவில்லை. ஆனால், டைம்ஸ் ஆப் இந்தியா (ஹைதராபாத்) உள்ளிட ஆசிரியர் கே.ஆர்.ஸ்ரீநிவாஸ் பதவி விலகியுள்ளார். ஹவுஸ்ஃபுல் 4 திரைப்பட இயக்குநர் சஜித் கான், ஹிந்துஸ்தான் டைம்ஸ் அரசியல் ஆசிரியர் பிரஷாந்த் ஜா, பிசினஸ் ஸ்டாண்டர்ட் மாயங்க் ஜெயின், மற்றும் ஏ.ஐ.பியின் குர்சிம்ரான் கம்பா என மேலும் சிலரும் பதவி விலகியுள்ளனர்.

தான் தனக்கு நேரிட்ட பாலியல் துன்புறுத்தலை வெளிப்படையாக சொன்னபோது என்ன நடந்தது என்று விவரிக்கிறார் அனு.

"தற்போது அக்பர் பதவி விலகிவிட்டார். ஆமாம், அவர் அதிக பாதிப்பில்லாமல் விலகிவிட்டார். ஆனால் குறைந்தபட்சமாவது தனது தவறுகளுக்கான விளைவுகளை எதிர்கொண்டார் அல்லவா? அதுமட்டுமா மதிப்பிற்குரிய அமைச்சர் பதவியை இழந்தார். அதுமட்டுமல்ல, அவர் முன்பு பணிபுரிந்த அமைப்புகளும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களைப் பரிசீலிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இனிமேல் அவரை நியமிக்க விரும்பும் எதிர்கால முதலாளிகளும் இந்த விஷயத்தை கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். பெண் என்பவள் ஒரு பாலியல் பொருள் இல்லை என்பதை இப்போதாவது அவர் உணர வேண்டும்" என்று கூறுகிறார் அனு.

#MeToo வின் சாதகங்கள் குறித்து விவாதிப்பது

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு விவாதிப்பதில் சமீபத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று இந்த பெண்களிடம் கேட்டோம். "ஆம்" என்கிறார் ஷுடாபா. "#MeToo பிரசாரம் குறித்த பல சாதகங்களை விவாதித்து வருகிறோம். இனியாவது ஆண்களும் பெண்களும் பாதுகாப்பாக உணரும் வகையில் பணியிடம் அமையும் என்று நம்புகிறோம்."

"ஏன் இவ்வளவு நாட்கள் பேசாமல் இருந்த பெண்கள் தற்போது பேசுகிறார்கள், இனி என்ன செய்யப் போகிறோம், ப்ரியா ரமணிக்கு எதிராக எம் ஜே அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு என பல்வேறு விவாதங்களில் ஈடுபட்டுள்ளேன்" என்கிறார் சுபர்ணா.

எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை

இந்த பெண்கள் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் உள்ளனர். சுபர்ணா கூறுகையில், "எல்லா இடங்களில் பிரச்சனை இருக்கிறது. இது போன்ற விஷயங்களை சமூக ஊடகங்களில் மட்டும் எதிர்க்காமல், களத்தில் இருந்தும், அலுவலகங்களில், சிறு நகரங்களிலும் எதிர்த்து வருகிறோம்." அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள், தன்னுடன் வேலை பார்க்கும் பெண்களை சமமாகவும் மரியாதையாகவும் நடத்தாமல் இருக்கும்வரை இந்த போராட்டம் தொடரும் என அவர் நம்புகிறார்.

இதற்கிடையே கசலா கூறுகையில், "நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்று, பணியிடங்களை பெண்களுக்கு பாதுகாப்பானதாக உருவாக்குவதில் வெற்றி பெறுவோம்" என்று தெரிவித்தார்.

இந்தியாவில் #MeToo இயக்கம் எதை நோக்கி செல்கிறது?

ஒருவரின் பெயரை சுட்டிக்காட்டி, அவரை அவமானப்படுத்துவது மட்டுமே இந்த #MeToo இயக்கம் பயன்படுகிறது என பலராலும் இது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

எனினும், "மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு நான் முக்கியத்துவம் அளிக்கவில்லை" என்கிறார் கசலா.

பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை பெண்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் அதனை எதிர்த்து அவர்களால் குரல் கொடுக்க முடியும் என்றும் இந்த உலகத்திற்கு காண்பித்துள்ளதே #MeToo இயக்கத்தின் வெளிப்பாடாக உள்ளது.

"இந்த இயக்கம் மேலும் வளரும் என்று நம்புகிறேன். தற்போது இது ஒரு வறையரைக்குள் உள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு தொழிலிலும், நகரத்திலும், கிராமத்திலும் இது பரவும் என்று நம்புகிறேன். இதனால் நம் நாட்டில் பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பாக உணரும் சூழல் ஏற்படும்" என்றும் கசலா தெரிவிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :