தீபாவளி பட்டாசு: மாசு குறைந்த மேம்படுத்திய வகைகள் மட்டுமே தயாரிக்கலாம்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பட்டாசு விற்பனைக்கு நிபந்தனையுடன் அனுமதி படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் சில நிபந்தனைகளுடன் பட்டாசு விற்பனையை மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தடை செய்யப்பட்ட ரசாயனம் பயன்படுத்தக்கூடாது, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதிகப்படியான சத்தம் மற்றும் காற்று மாசை ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது இரண்டுமே தடை செய்யப்பட்டுள்ளது.

தீர்ப்பில் கொடுக்கப்பட்ட விதிகள்:

 • தீபாவளி நேரத்தில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம்.
 • புத்தாண்டு சமயத்தில் இரவு 11.55 முதல் 12.30 வரை பட்டாசு வெடிக்கலாம்
 • பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாசு குறித்த விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும்.
 • இணையம் மூலம் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது.
 • மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வரியமும் தீபாவளிக்கு முன்னர் 7 நாட்களும் பின்னர் 7 நாட்களும் காற்றின் தரத்தை ஆராய்ந்து அறிக்கை அளிக்க வேண்டும்.
 • குழுக்களாக விழாக்களை கொண்டாடினால் மாசு கட்டுப்பாட்டுக்கு பயன் தரும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • குறைந்த அளவிலேயே மாசுகளை வெளிப்படுத்தும் மேம்படுத்தப்பட்ட பட்டாசுகளை, சத்தமும், ஒளியும் மட்டும் வெளியாகும் வகையிலான நவீன வகை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்கலாம். பிற பட்டாசுகளை தயாரிக்கக்கூடாது.
 • சரவெடிகள் கூடாது.
 • பட்டாசுகளால் ஏற்படும் மாசுபாடுகளை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்போவதாக மத்திய அரசு கூறியுள்ள 10 உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
 • பட்டாசு தயாரிப்பில் பேரியம் உப்பு பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
 • அதிக மாசு விளைவிக்கும் பட்டாசுகள் ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்டிருந்தாலும் அவற்றை விற்பனை செய்யக்கூடாது.
 • தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனை செய்யாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் மீறப்பட்டால், மீறல் நடைபெற்ற இடத்தின் காவல் நிலைய அலுவலர் பொறுப்பாக்கப்படுவார்.

இந்த வழக்கில் ஒரு மனுதாரரான இண்டிக் கலெக்டிவ் பட்டாசு தடை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை எதிர்த்தது. தீபாவளி கொண்டாடுவது என்பது மதநம்பிக்கை சார்ந்தது. இந்திய அரசமைப்புச் சட்டம் ஷரத்து 25 மத பழக்கவழக்கங்கள் அடிப்படை உரிமை என்கிறது. பட்டாசு வெடிப்பதை தடை செய்வது என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

சில நாடுகளில் உள்ளதுபோல நேர கட்டுப்பாட்டுடன் சமுதாய குழுக்களாக பட்டாசு வெடிப்பதற்கான வாய்ப்புகளை பெருநகரங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் நல்லமுறையில் கடைபிடிக்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் என நம்புவதாக" பட்டாசு வெடிக்க தடைக் கோரி வழக்கு தொடுத்த மனோஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தமிழக அரசும் பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பாக இந்த வழக்கில் வாதாடியது. அது முன்வைத்த வாதம் யாதெனில், உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டலின்படி மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் ஆய்வு நடத்தியது. ஆனால், ஆய்வுக் குழுவில் பட்டாசு ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தின் பிரதிநிதி இல்லை. இந்த வழக்கு குறித்த எந்த தகவலும் அவர்களிடம் தெரிவிக்கப்படவில்லை.

மேலும், பட்டாசு தடையால் ஏற்படும் சமூக பொருளாதார தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். காற்றை மாசுபடுத்தும் பிற விஷயங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

பட்டாசு விற்பனை தொடர்பான முந்தைய செய்திகள்:

காற்று தரம்

கடந்த ஆண்டு டெல்லியில் பட்டாசு வெடிக்க முழுமையாக தடை செய்தது உச்ச நீதிமன்றம்.

அந்த தீர்ப்பில், பாட்டாசுகள் வெடிக்க தடை விதிப்பதன் மூலம், உலகிலேயே காற்று தரத்தில் மிகவும் மோசமானது என்ற இடத்தை பிடித்துள்ள தலைநகர் டெல்லியின் காற்று தரத்தில் ஏதேனும் மாற்றம் கொண்டுவரமுடியுமா என்பதைச் சோதிக்க விரும்புவதாக இந்திய உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டு இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்