டெல்லி காற்று மாசு: பசுமைப்புரட்சியின் விளைவா?

தில்லியில் ஏற்படும் பனிப்புகை படத்தின் காப்புரிமை AFP

மாசடைந்த காற்று எங்கு அதிகமாக உள்ளது என்ற போட்டி வைத்தால், அதில் தில்லியை தோற்கடிக்க முடியாது.

அவ்வளவு காற்று மாசுவையும் பொருட்படுத்தாமல், ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற அரை மாரத்தான் போட்டியில் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

மாரத்தான் நடக்கும் தடத்தில் ரேடியோ அலைவரிசகைளைப் பயன்படுத்தி காற்றை சுத்திகரித்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இது நடக்குமா என்பதில் விஞ்ஞானிகளுக்கு சந்தேகம் இருக்கிறது.

டெல்லியில் இந்த மாரத்தான் நடத்தப்பட்டது, பனிப்புகை (smog) காலம் தொடங்கிவிட்டதை குறிக்கிறது. ஆனால் சில வாரங்களாகவே தில்லியில் பனியை உணர முடிகிறது.

சில நாட்களுக்கு முன், சிம்லாவில் இருந்து தில்லிக்கு திரும்பிக் கொண்டிருந்த நாகேந்தர் ஷர்மா, நெடுஞ்சாலை ஓரமாக இருந்த வயல்களில் இருந்து புகை வந்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார்.

யாரோ பூமியில் ஒரு பகுதிக்கு தீ வைத்தது போல இருந்தது அவருக்கு. காற்று வீசாததால் புகை அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தது.

தில்லி முதல்வர் கேஜ்ரிவாலின் ஊடக ஆலோசகரான ஷர்மா, தலைநகரில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் ஹரியாணா வழியே பயணித்துக் கொண்டிருந்தார்.

படத்தின் காப்புரிமை EPA

வண்டியை நிறுத்தி இது குறித்து விசாரித்தார் ஷர்மா. நெல் அறுவடை செய்தபிறகு வயலில் நிற்கும் தாளடியை அங்குள்ள விவசாயிகள் எரிப்பதால் உருவான புகை அது என்பது அவருக்குப் புரிந்தது. அந்தத் தாளடிகளை அகற்றினால்தான் அடுத்து அங்கு கோதுமை பயிரிட முடியும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். தாளடியை அகற்ற விலை உயர்ந்த இயந்திரங்கள் எதையும் தங்களால் வாங்க முடியாது என்பதால் அதனை அவர்கள் எரிக்கின்றனர்.

"ஒவ்வொரு ஆண்டும் இதே கதைதான் தொடர்கிறது" என்கிறார் ஷர்மா.

ஒவ்வொரு ஆண்டும் இக்காலத்தில் தில்லியில் வாழும் மக்கள் அடர்த்தியான பனிப்புகையை எதிர்கொள்கின்றனர். உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள எல்லையைத் தாண்டி காற்று மாசுபாட்டின் அளவு பலமுறை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, மருத்துவர்கள் மருத்துவ அவசர நிலையை அறிவித்தனர். மருத்துவமனைகளில் எல்லாம் மூச்சுத்திணறால் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் குவிந்தனர்.

சில பகுதிகளில், மனிதர்களின் நுரையீரல்களுக்குள் நுழையும் பிஎம் 2.5 என்று அறியப்படும் மிக நுண்ணிய அளவிலான துகல்கள் கன மீட்டருக்கு சுமார் 700 மைக்ரோகிராம் என்ற அளவுக்கு அதிகரித்தன. ஆனால், உலக சுகாதார நிறுவனமோ, சராசரியாக 24 மணி நேரத்தில் ஒருவர் சுவாசிக்கக்கூடிய காற்றில் பிஎம் 2.5 துகல்களின் அளவு கன மீட்டருக்கு 25 மைக்ரோகிராம்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று பரிந்துரைக்கிறது.

படத்தின் காப்புரிமை Reuters

கடந்த ஆண்டு தில்லயில் காற்றின் தரம் அதிகபட்சமாக 999 வைரை சென்றது. இதுபோன்ற காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு 2 பாக்கெட் சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமம். ஒரு பெரிய "விஷவாயுக் கிடங்கு" போல தலைநகர் காட்சியளித்தது என்று பலர் கூறுகின்றனர்.

"அறுவடைக்கு பிறகு தாளடியை எரிப்பது சில வாரங்களே இருந்தாலும், பனிப்புகை இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு தொடர்ந்திருக்கும். அப்போது காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, நம் முன் என்ன இருக்கிறது என்பதைகூட பார்க்க முடியாத சூழல் ஏற்படும். விவசாய நிலங்களில் இருந்து வெகுதூரம் இருக்கும் தில்லியிலும் இவ்வாறுதான் இருக்கும். ஒரு விதமான எரியும் வாடையையும் உணர முடியும்" என்கிறார் ஆற்றல் வல்லுநரும், விரைவில் இந்தியாவின் பனிப்புகை குறித்து புத்தகம் வெளியிட உள்ளவருமான சித்தார்த் சிங்.

இதற்கு மற்ற காரணங்களும் உண்டு. கட்டுமானப்பகுதியில் இருந்து வரும் தூசி, தொழிற்சாலைகள் மற்றும் வாகன புகை. ஆனால், இந்த பனிப்புகைக்கு பிரதான காரணம் அறுவடைக்குப் பிறகான சக்கைகளை எரிப்பது.

ஒவ்வொரு பனிக்காலத்திலும் வட இந்தியாவில், 80,000 சதுர கிலோ மீட்டர் அளவிலான நிலத்தில், 23 மில்லியன் டன் பயிர் கழிவுகளை 20 லட்சம் விவசாயிகள் எரிக்கிறார்கள்.

தாளடியை எரிப்பதால் வரும் புகையில், கார்பன் டைஆக்ஸைடு, நைட்ரஜன் டைஆக்ஸைடு மற்றும் சல்ஃபர் டை ஆக்ஸைடு ஆகியவை கலந்திருக்கும். 2012 முதல் 2016 வரை தில்லியில் ஏற்பட்ட காற்று மாசுவிற்கு பாதி காரணம் இந்த தாளடிகளை எரித்ததுதான் என ஹாவர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். மேலும் இதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டினால் மட்டுமே 2011ஆம் ஆண்டில் 40,000க்கும் மேற்பட்ட அகால மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மேலும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

ஆனால், இதற்கு முன் இப்படி இல்லை.

1960 மற்றும் 1970களில் இந்தியாவில் ஏற்பட்ட "பசுமை புரட்சியால்" இங்கிருந்த "விவசாய நடவடிக்கைகளில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி, அரசியல் கொள்கைகள் மற்றும் மாற்றங்களுக்கு உள்ளாகும் தொழிலாளர் சந்தைகளும்" இந்த கடுமையான பனிப்புகைக்கு காரணம் என்று கூறுகிறார் சிங்.

படத்தின் காப்புரிமை Reuters

பாசனவசதி இல்லாத நிலங்கள், பஞ்சம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, உணவுக்கான உதவிகளை நம்பியிருந்த இந்திய நாட்டு மக்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்தது பசுமைப் புரட்சி.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்கள் நாடு முழுமைக்கும் போதுமான அளவு அரிசி மற்றும் கோதுமையை விளைவிக்கிறவையாக மாறின பனிக்காலத்தில் கோதுமை விளைவிக்கப்படுகிறது. பருவமழைக் காலமான ஜூலை மற்றும் ஆகஸ்ட்டில் மாதங்களில் நெல் பயிரிடப்படும்.

இந்தியாவுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்குவதில் "பசுமை புரட்சி" வெற்றி பெற்றது என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது. அரிசி மற்றும் கோதுமை விளைச்சல் இதனால் அதிகரித்தது. அதே நேரத்தில் இது காற்றுமாசுபாட்டுக்கும், நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கும் காரணமானது.

"விவசாயத்திற்கு பசுமை புரட்சி தேவைப்பட்டது என்பதை மறுக்க முடியாது. ஆனால், அந்த புரட்சியும், அதனை தொடர்ந்து வகுக்கப்பட்ட கொள்கைகளும், காற்று மாசுபாட்டிற்கு வித்திட்டு, நிலத்தடி நீரையும் பாதித்தது; இதனை "வேளாண் சூழலியல்" நெருக்கடி என அழைக்கலாம் என்றும் சிங் தெரிவித்தார்.

விவசாயிகள் பயிர் மிச்சங்களை ஏன் எரிக்கிறார்கள்? அறுவடைக்கு பிறகு காணப்படும் தாளடிகள் கூர்மையானதாக இருக்கும். விலங்குகளுக்கு ஏற்ற உணவாக அது இருக்காது. அதனை அகற்றவில்லை என்றால், இயந்திரங்களை வைத்து நெல் பயிரிடும்போது அதில் மாட்டிக் கொள்ளும்.

படத்தின் காப்புரிமை NARINDER NANU

இதனால் நிலங்களை அடுத்த பயிருக்கு உடனடியாக தயார்படுத்த விவசாய நிலங்களுக்கு அவர்கள் தீயிட்டு விடுகின்றனர்.

இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்த "ஹேப்பி சீடர்ஸ்" (happy seeders) என்ற ஒன்றினை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இதனை ட்ராக்டரில் பொருத்தி விதை விதைக்கலாம். அறுவடைக்குப் பிறகு நிலத்தில் நிற்கும் தாளடி அதில் மாட்டிக்கொள்ளாது. கோதுமையை பயிரிட இந்த இயந்திரம் உதவும். ஆனால், இது மிகவும் விலை உயர்ந்தது. 1,30,000 ரூபாயில் இருந்து இதன் விலை தொடங்குகிறது. சிறிய நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகளால் இதனை வாங்க இயலாது.

கடந்த பனிக்காலத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் சுமார் 21,000 இயந்திரங்கள் தேவைப்பட்ட காலத்தில் 2,150 இயந்திரங்கள் மட்டுமே இருந்தன என்கிறார் சிங்.

அடுத்த 5 ஆண்டுகளில் தாளடியை எரிப்பது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என்றால், 12,000 "ஹேப்பி சீடர்ஸ்" இயந்திரங்கள் தேவைப்படும் என்று கூறும் சிங், இந்தியாவின் அடுத்த பசுமை புரட்சி தொழில்நுட்ப ரீதியாக இருக்கும் என நம்புகிறார். அப்படி நடக்கும் வரை தில்லியின் 18 மில்லியன் மக்கள் இந்த மாசு நிறைந்த காற்றையே சுவாசிப்பார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :